Ad

புதன், 17 மார்ச், 2021

``பத்து ரூபாய்க்கு காபி விற்றது குற்றமா?”அத்துமீறிய காவல்துறை; பொங்கும் வியாபாரி

சென்னை தி.நகர் ஆரிய கவுடா சாலையில் ’கிருஷ்ணா டெலிஷ் காஃபி’ என்கிற பெயரில் காபி கடையை செந்தில் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடையிலிருந்த விளம்பரப் பதாகையை போக்குவரத்து காவலர்கள் சிலர் அத்துமீறி எடுத்துச் சென்றதுடன், அதை ரோட்டில் வைத்து போலியாக ஒரு குற்றச்சாட்டை புனைய முனைந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பான சி.சி.டி.வி காட்சிகளும் வெளியாகி இருப்பதால் சிக்கலில் சிக்கியிருக்கிறது தி.நகர் போக்குவரத்து காவல்துறை.

செந்திலின் கடை

பாதிக்கப்பட்ட செந்தில் நம்மிடம் பேசுகையில், ``எனக்கு சொந்தமாக மூன்று இடங்களில் காபி கடைகள் செயல்படுகின்றன. ஒரு காபி பத்து ரூபாய் வீதம் விற்பனை செய்துவருகிறேன். தி.நகர் ஆரிய கவுடா சாலையிலிருக்கும் என் கிளைக்கு அருகே வேறு சில காபி கடைகளும் உள்ளன. நான் பத்து ரூபாய்க்கு காபி விற்பதால், அவர்களுக்கு வியாபாரம் நடைபெறுவதில்லை என்கிற போட்டி பொறாமையில் இருந்தனர். சில மாதங்களாகவே, தி.நகர் மாம்பலம் போக்குவரத்து காவல்துறை, அசோக்நகர் போக்குவரத்து காவல்துறைகளில் பணிபுரியும் சில காவலர்களை கைக்குள் வைத்துக் கொண்டு, என் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுக்க ஆரம்பித்தனர்.

Also Read: சென்னை: நில அபகரிப்பு; நடவடிக்கை எடுக்காத போலீஸ் - உயிரிழந்த ஆடிட்டர்!

கடையின் முன்பு வாடிக்கையாளர்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு தடை, கடை வாசலில் இரண்டு பல்ப்புகள் எரிவதற்கு தடை என்று காவலர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டனர். இதற்கெல்லாம் அனுமதி இருப்பதாக நான் கோடிட்டுக் காட்டியும் அந்தக் காவலர்கள் கண்டுகொள்ளவில்லை. இந்த நிலையில், மார்ச் 16-ம் தேதி மாலை 6 மணியளவில், சில போக்குவரத்துக் காவலர்கள் என் கடைக்கு வந்தார்கள். ‘பத்து ரூபாய்க்கு காபி என்கிற விளம்பரப் பலகையை ஏன் வைத்திருக்கிறீர்கள்? இதனால், மற்றவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது’ என்றார்கள். அதற்கு, ‘என் கடையில் என்ன விலையில் விற்க வேண்டுமென்பதை நான் தான் தீர்மானிப்பேன். அதை ஏன் நீங்கள் கேட்கிறீர்கள்?’ என்றேன்.

பதாகையை இழுத்துச் செல்லும் போலீசார்

ஆவேசமடைந்த ஒரு போக்குவரத்து காவல் அதிகாரி, என் கடை வளாகத்திற்குள் இருந்த விளம்பரப் பதாகையை எடுத்துச் சென்று ரோட்டில் வைத்து படம் பிடித்தார். நடுரோட்டில் பதாகை இருந்ததுபோலவும், அதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது போலவும் ஒரு பொய்யான குற்றச்சாட்டை புனைவதற்கு அவர்கள் முயன்றனர். கடையிலிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் இதை தட்டிக் கேட்கவும், வேறுவழியின்றி பதாகையை அங்கேயே போட்டுவிட்டு அந்தக் காவலர்கள் சென்றுவிட்டனர். பத்து ரூபாய்க்கு காபி விற்றது குற்றமா, என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தச் சம்பவத்தில் அத்துமீறி என் கடையிலிருந்த பதாகையை எடுத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி போலீஸில் புகாரளித்திருக்கிறேன்” என்றார்.

செந்தில்

சாத்தான்குளம் சம்பவத்தில் போலீசார் அத்துமீறலில் ஃபெலிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டு, போலீஸ் தாக்குதலில் உயிரிழந்தது சர்ச்சையானது. அதேபாணியில், கடைகளுக்கு இடையேயான போட்டியில் போலீஸார் மூக்கை நுழைத்து, அத்துமீறியிருப்பது தி.நகரில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இச்சம்பவம் தொடர்பாக தி.நகர் காவல்துறை உயரதிகாரி ஒருவரிடம் பேசினோம். “புகார் கிடைத்திருக்கிறது. விசாரித்து வருகிறோம். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மூன்று காவலர்கள் மீதும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு நிரூபணமாகும்பட்சத்தில், அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/police-violation-in-coffee-shop-caught-on-cctv

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக