‘அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்’ என அறிவித்த சசிகலா, தேர்தல் களத்தின் பக்கம் திரும்பவே இல்லை. ‘மனம் மாறுவார்’, ‘கடைசிக்கட்ட பரப்புரையில் பங்கேற்பார்’ என்றெல்லாம் கிளம்பிய ஆரூடங்கள் நீர்த்துப்போய்விட்டன. வீட்டுக்குள்ளேயே இருந்த சசிகலா சமீபத்தில் தஞ்சாவூருக்குப் பயணமானார். ஆனால், அப்போதும் அரசியல் குறித்தோ, தேர்தல் குறித்தோ தவறியும் அவர் வாய் திறக்கவில்லை.
கோயில் திருவிழா, கணவர் எம்.நடராஜனின் நினைவு அனுசரிப்பு, உறவினர்களுடன் பேச்சுவார்த்தை என்றே நிகழ்ச்சிகளை வகுத்துக்கொண்ட சசிகலா, அரசியல் சந்திப்புகளை அடியோடு தவிர்க்கச் சொல்லிவிட்டாராம். அதையும் மீறி, அ.ம.மு.க டெல்டா வேட்பாளர்கள் தேடிவந்து பேசியபோதுகூட, ‘நல்லா இருங்க’ என்று மட்டுமே சொல்லியிருக்கிறார். ஒரத்தநாடு தொகுதியில் வைத்திலிங்கத்தை எதிர்த்து அ.ம.மு.க சார்பில் போட்டியிடும் சேகர், “அம்மா, நீங்க ஒரு வார்த்தை சொன்னீங்கன்னா வைத்திலிங்கத்துக்கு டெபாசிட் போயிடும்” என்று சொல்ல, பதிலேதும் சொல்லாமல் கும்பிட்டிருக்கிறார். குறிப்பிட்ட நாள்களில் தஞ்சை மாவட்டப் பகுதிகளில்தான் டி.டி.வி.தினகரன் பிரசாரத்தில் இருந்தார். ஆனாலும் சசிகலாவும் தினகரனும் நேரில் சந்திக்கவில்லை. இதற்கிடையில் டி.டி.வி.தினகரனின் தங்கை சீதளாதேவியின் கணவர் திடீரென இறந்துவிட, அந்த துக்கத்துக்கு ஆறுதல் சொல்லவும் சசிகலா போகவில்லையாம். இதையெல்லாம் வைத்து ‘சசிகலாவுக்கும் தினகரனுக்குமான பனிப்போர் இன்னமும் முடிவுக்கு வரவில்லை’ எனச் செய்திகள் அலையடிக்க ஆரம்பித்தன.
தஞ்சை உறவினர்கள் வட்டாரத்தில் பேசினோம். “தஞ்சைக்கு வருவதில் சசிகலாவுக்குக் கொஞ்சமும் விருப்பமில்லை. எம்.நடராஜன் சகோதரர்களின் பேரக் குழந்தைகள் பல வருடங்களாக முடி இறக்காமல் காத்திருந்ததால்தான் வந்தார். தஞ்சைக்கு சசிகலா வரும்போது பெரிய அளவில் கூட்டத்தைத் திரட்டவே முதலில் ஏற்பாடு செய்தோம். ‘ஒதுங்குகிறேன் எனச் சொல்லிவிட்டு மறுபடியும் கூட்டத்தைச் சேர்த்தால் தவறாக இருக்கும்’ எனத் தவிர்க்கச் சொன்னார். அ.ம.மு.க ஆட்களைச் சந்திக்காமல் தவிர்த்த காரணமும் அதுதான். ஆளுங்கட்சியின் முக்கியப் புள்ளி ஒருவர் சந்திக்க நேரம் கேட்டபோதும் சசிகலா மறுக்கத்தான் செய்தார்” என்றார்கள்.
தஞ்சாவூர் பயணத்தில் உறவுகளிடம் ரொம்பவே மனம்விட்டுப் பேசியிருக்கிறார் சசிகலா. “வாழ்க்கையே ஏதோவொரு நம்பிக்கையிலதான் ஓடுது. ஆனா, உயிரா இருப்போம்னு சொன்னவங்களே நம்ம உயிருக்கு நஞ்சா மாறுவதை இப்போதான் பார்க்குறேன். என் கணவர் உயிருக்குப் போராடிய சூழல்லகூட ஓடிவந்து என்னால ஒரு வார்த்தை பேச முடியலை. அப்பவே வாழ்க்கை மேல எனக்கிருந்த பிடிப்பு போயிடுச்சு. குடும்பமும் கட்சிக்காரங்களும் ஒண்ணுதான்கிற மனநிலையிலதான் பெங்களூர்லருந்து வந்தேன். கட்சிக்காரங்களை ஒருபடி மேலவெச்சுப் பார்க்கணும்னுதான் நினைச்சேன். எங்கெங்கே பிரசாரம் பண்றதுங்கிற வரை பிளான் வெச்சிருந்தேன். டெல்லியோட அழுத்தத்தை ஒரு காலத்திலும் நான் சட்டை பண்ணினது கிடையாது. அவங்க அப்படித்தான் பண்ணுவாங்க. ஆனா, தேர்தலுக்குள்ள நான் ரிலீஸாகிடக் கூடாதுங்கிற வரைக்கும் சிலர் போட்ட திட்டம் இப்போ எனக்கு அப்பட்டமா தெரிஞ்சுடுச்சு. ஜெயில்ல இருந்தப்பவே சிலர் எனக்கு இதைச் சொன்னாங்க. விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டு நான் முடிவெடுக்கலாம்னு இருந்தேன். வெளியே வந்து நம்பிக்கையான ஆட்கள்கிட்ட பேசினப்பதான், சிலர் எனக்கு எதிரா எவ்வளவு பெரிய சூழ்ச்சிகளைப் பண்ணியிருக்காங்கன்னு தெரிஞ்சுச்சு. வஞ்சகமும் சூழ்ச்சியும் சில காலத்துக்குத்தான் ஜெயிக்கும். அதனாலதான் நான் பொறுமையா ஒதுங்கி இருக்க முடிவெடுத்தேன். ஜெயிலைவிட்டே நான் வரக் கூடாதுன்னு நினைச்சவங்களை நான் எப்படி சும்மாவிட முடியும்? தெய்வம் என் பக்கம் இருக்கு. அதுக்கு முன்னால யாரோட வஞ்சகமும் நிற்காது” என சசிகலா வைராக்கியத்தோடு பேச, உறவினர்கள் கண்கலங்கியிருக்கிறார்கள்.
சசிகலா இந்த அளவுக்கு வேதனையாகப் பேசியது உறவினர்களை மனதில்வைத்தா அல்லது கட்சியில் அவருக்குத் துரோகம் செய்தவர்களை நினைத்தா? சசிகலாவுக்கு நெருக்கமான நிழல் புள்ளிகளிடம் பேசினோம்...
“சசிகலா ஒதுங்குவதாகச் சொன்ன அறிவிப்பை, ஆளும்தரப்பு முதலில் மிகுந்த ஆர்வத்தோடுதான் பார்த்தது. சசிகலாவைப் போல் தினகரனும் பின்வாங்கிவிடுவார் என்று நினைத்தார் எடப்பாடி. ஆனால், தே.மு.தி.க-வுடன் கூட்டணி அமைக்கிற அளவுக்குப் போவார் என எடப்பாடி கொஞ்சமும் நினைக்கவில்லை. ‘ஒதுங்குகிறேன்’ என சசிகலா அறிவித்த நாளில், தினகரனுக்கும் சசிகலாவுக்கும் மனவருத்தம் வந்தது உண்மைதான். ஆனால், சசிகலாவின் குணமறிந்து மேற்கொண்டு வார்த்தைகளை வளர்க்காமல் தினகரன் ஒதுங்கிக் கொண்டார். ‘தங்கையின் கணவர் மரணத்துக்கு வர வேண்டாம். நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பிருக்கு’ என சசிகலாவைத் தடுத்ததே தினகரன்தான். பணரீதியான போராட்டத்தில் தினகரன் இன்றைக்கும் திண்டாடுகிறார். கூட்டணிக் கட்சியினருக்கோ, வேட்பாளர்களுக்கோ இன்றுவரை அவரால் எந்த அனுகூலத்தையும் செய்துகொடுக்க முடியவில்லை. கஜானா சாவியைக் கையில்வைத்திருக்கும் விவேக் ஜெயராமனும் சசிகலாவிடமிருந்து சிக்னல் வராததால் தினகரனுக்குப் பாராமுகம் காட்டுகிறார். இதையெல்லாம் வைத்து தினகரன்மீது சசிகலாவுக்குக் கோபம் குறையவில்லை எனச் சிலர் பரப்புகிறார்கள். ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் தினகரனுக்காகக் கூடும் கூட்டத்தைக் காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். தினகரன்மீது சசிகலா வருத்தத்தில் இருந்தால் இதெல்லாம் எப்படி நடக்கும்?” எனக் கேட்டவர்கள், சசிகலாவின் கோபப் பார்வை யார்மீது என்பதை விவரித்தார்கள்.
“சசிகலாவைப் பற்றிப் பெரிதாகப் பேசாமல் எடப்பாடி அமைதி காப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள். ஆனால், குடும்பத்துக்குள்ளேயே அவர் என்னவெல்லாம் செய்கிறார் என்பது சசிகலாவுக்குத் தெரியும். ‘என் அக்கா சசிகலா, அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் சொல்கிறார். அப்படியென்றால் இரட்டை இலைக்கு வாக்களிக்கச் சொல்கிறார் என்றுதானே அர்த்தம்...’ என திவாகரனை மீடியாக்களிடம் பேசவைத்ததே எடப்பாடிதான். சொந்தத் தம்பியான திவாகரனை வைத்தே எடப்பாடி பழனிசாமி தனக்கு செக் வைப்பதை சசிகலா கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார். தேர்தலை ஒட்டி திவாகரனை இன்னும் பெரிய அளவுக்குப் பேசவைக்கப்போகிறார்கள் என்பதும் சசிகலாவுக்குத் தெரியும். ஜெயிலுக்குள் தனக்கு எதிராக நடந்த சதிகளுக்குக் காரணமானவர்கள் இப்போது குடும்பத்தைப் பிரித்தும் சகுனித்தனம் செய்கிறார்கள் என்பதுதான் சசிகலாவின் கோபம். ஆளும் தரப்பின் இந்தச் சூழ்ச்சி தெரியாமல் திவாகரன் ஆடுகிறார். எல்லோரும் தினகரனுக்கும் சசிகலாவுக்கும்தான் பனிப்போர் என நினைக்கிறார்கள். உண்மையில், ‘இனி என் வாழ்க்கையில் திவாகரன் இல்லை’ என்கிற அளவுக்குத் தம்பிமீது தடாலடி காட்டத் தொடங்கிவிட்டார் சசிகலா. மொத்தச் சிக்கல்களுக்கும் காரணம் என சசிகலா நினைப்பது எடப்பாடி பழனிசாமியைத்தான். அவருடைய அமைதி வெடிக்கிற நாளில், பழனிசாமியின் துரோகம் தூள் தூளாகும்” என்கிறார்கள் நிழல் புள்ளிகள்.
சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்கினாலும், அரசியல் அவரை விட்டு ஒதுங்காதுபோலிருக்கிறது!
விவேக் அவுட்… வெங்கடேஷ் இன்!
சசிகலா வெளியூர் செல்கிறார் என்றால், அவர் அண்ணன் மகன் விவேக் ஜெயராமன் மூலமாகவே பயண ஏற்பாடுகள் நடக்கும். ஆனால், தஞ்சாவூர் பயணத்தில் விவேக் ஜெயராமன் இல்லை. பயணத் திட்டத்தை முன்னின்று செய்தவர், இன்னோர் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷ். தினகரனுக்கும் வெங்கடேஷுக்குமான ஏழாம் பொருத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. சசிகலாவுக்கான சகலத்தையும் செய்கிற ஆளாக வெங்கடேஷ் முன்னிறுத்தப்படுவது பலரையும் புருவமுயர்த்த வைத்திருக்கிறது. “திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்கு கடந்த வாரம் குழந்தை பிறந்தது. என்னதான் மனக்கசப்பு இருந்தாலும் குழந்தை பிறப்பு மாதிரியான விஷயங்களை சசிகலா தவிர்க்க மாட்டார். ஆனால், ஜெய் ஆனந்தால் சசிகலாவிடம் ஆசி வாங்க முடியவில்லை. காரணம் டாக்டரின் கைங்கர்யம்தான்” என்கிறார்கள் உறவு வட்டாரத்தில். மன்னர்காலக் குடும்பப் பூசல்களையெல்லாம் மிஞ்சிவிட்டது மன்னார்குடிக் குடும்பப்பூசல்!
சொந்தங்களுக்குச் சொத்து!
தஞ்சாவூரில், மறைந்த எம்.நடராஜனுக்கான வீடு தொடங்கி நிலபுலன்கள் அதிகம். அவற்றில் எதையெல்லாம் சசிகலா எடுத்துக்கொள்ளப்போகிறார், எதையெல்லாம் நடராஜனின் சகோதரர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்போகிறார் எனத் தஞ்சாவூர் குடும்ப உறவினர்கள் குழம்பிக்கிடந்தார்கள். சில சொத்துகளைத் தங்களுக்குக் கேட்டு வாங்கவும் ஆயத்தமானார்கள். ஆனால், சசிகலாவோ, “அவரோட சொத்தில் எனக்கு ஒரு பைசாகூட வேண்டாம். நீங்களே உங்களுக்குள்ள பேசிப் பிரிச்சுக்கங்க. எத்தனை கோடி இருந்து என்ன புண்ணியம்? இன்னிக்கும் 10 கோடி ரூபா அபராதம் கட்ட முடியாமல் சுதாகரன் ஜெயில்ல கிடக்கிறான்” எனக் கலங்க, உறவினர்கள் உறைந்துபோனார்களாம்!
source https://www.vikatan.com/news/politics/sasikala-activities-after-boycott-politics
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக