Ad

புதன், 24 மார்ச், 2021

சிறந்த முதல்வர் வேட்பாளர் யார்?; ஆட்சி யாருக்கு?! டைம்ஸ் நவ்-சி வோட்டர் கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி சமீபத்தில் டைம்ஸ் நவ் - சி வோட்டர், மார்ச் 17-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை 8,709 நபர்களிடம் கருத்துக் கணிப்பு மேற்கொண்டது. அந்த முடிவுகள் நேற்று வெளியானது. இதில், திமுக கூட்டணி 177 இடங்களில் வெற்றி பெரும் என்று கூறப்பட்டுள்ளது.

அதிமுக கூட்டணி 44 இடங்களிலும், அமமுக 3 தொகுதிகளிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் மற்ற கட்சிகளுக்கு இரண்டு தொகுதிகளில் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை அது 79 இடங்கள் அதிகரித்து, மொத்தம் 177 இடங்களில் வெற்றி பெரும் என்று கூறப்பட்டுள்ளது. அதே போல, கடந்த தேர்தலில் அதிமுக 136 இடங்கள் வெற்றி பெற்றிருந்த நிலையில் அக்கட்சி இம்முறை, 87 இடங்கள் குறைந்து வெறும் 49 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி

சிறந்த முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, திமுக தலைவர் ஸ்டாலினை 43.1 சதவீதத்தினரும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை 29.7 சதவீதத்தினரும், வி.கே.சசிகலாவை 8.4 சதவீதத்தினரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனை 4.8 சதவீதத்தினரும், நடிகர் ரஜினிகாந்த்தை 1.9 சதவீதத்தினரும், ஓ. பன்னீர்செல்வத்தை 1.7 சதவீதத்தினரும், பா.ம.க-வை சேர்ந்த ராமதாஸை 1.4 சதவீதத்தினரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கே.எஸ்.அழகிரியை 1.1 சதவீதத்தினரும் தேர்வுசெய்துள்ளனர்.

Also Read: துணி துவைத்த எம்எல்ஏ; பைக் ரைடு போன அமைச்சர் - தேர்தல் க்ளிக்ஸ் #PhotoAlbum

பாஜக தலைமையிலான தற்போதைய மத்திய அரசு குறித்து நீங்கள் எவ்வளவு திருப்தி அடைகிறீர்கள் என்ற கேள்விக்கு. 13.45 சதவிகிதத்தினர் மிகவும் திருப்தி எனவும். 27.82 சதவிகிதத்தினர் ஓரளவுக்குத் திருப்தி எனவும், திருப்தி இல்லை என்று 50.38 சதவிகிதத்தினரும், தெரியாது/கருத்துச் சொல்ல முடியாது என்று 8.35 சதவிகிதத்தினரும் கூறியுள்ளார்.

கொங்கு மண்டல பகுதிகளில் யார் வெற்றிபெறுவர் என்ற கேள்விக்கு, மொத்தமுள்ள 52 தொகுதிகளில், 12 தொகுதிகளில் அதிமுக கூட்டணியிலும், திமுக கூட்டணி 38 இடங்களிலும், மற்ற கட்சிகள் இரண்டு இடங்களிலும் வெற்றி பெரும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள வடக்கு பகுதிகளில். 32.9 சதவிகிதத்தினர் அதிமுக கூட்டணிக்கும், 48.1 சதவிகிதத்தினர் திமுக கூட்டணிக்கும், அமமுக கூட்டணிக்கு 2.9 சதவிகிதத்தினரும், மற்ற கட்சியினருக்கு 16.1 சதவீதத்தினரும் வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள தெற்கு தொகுதிகளில், 13 தொகுதியில் அதிமுக கூட்டணியும் , 42 தொகுதியில் திமுக கூட்டணியும் , அமமுக கூட்டணியும் 1 தொகுதியில் , மற்ற கட்சியினருக்கு 2 தொகுதியிலும் வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இந்த தேர்தலில் திமுக, கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகளை ஒதுக்கியது பயனளிக்குமா என்ற கேள்விக்கு. ஆம் என்று 45.1 சதவிகிதத்தினரும், இல்லை என்று 30.8 சதவிகிதத்தினரும், சொல்ல முடியாது என்று 24.1 சதவிகிதத்தினரும் பதிலளித்துள்ளனர்.

தமிழகத்தில் பா.ஜ.க-வின் இந்துத்துவா அரசியல் எடுபடுமா என்ற கேள்விக்கு, 45 சதவிகிதத்தினர் எடுபடாது என்றும், 31 சதவிகிதத்தினர் எடுபடும் என்றும், பதிலளிக்க முடியாது என்று 22 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளார். அதே போல, தி.மு.க-வின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமா என்ற கேள்விக்கு 41 சதவிகிதத்தினர் ஆம் என்று, இல்லை என்று 42 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர்.

அதே போல நடைபெறவுள்ள புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி 16 இடங்களிலும், பாஜக கூட்டணி 4 இடங்களிலும் வெற்றி பெரும் என்று கூறப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/times-now-c-voter-survey-result-for-tamilnadu-assembly-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக