Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

கரூர்: 'இது, காமராஜ் எக்ஸ்சேஞ்ச் மேளா!' - கிருஷ்ணராயபுரம் தொகுதி விநோதம்

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ், தி.மு.கவுக்கும், தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ வழக்கறிஞர் பி.காமராஜ், அ.தி.மு.கவுக்கும் தாவியிருப்பதால், 'இது, காமராஜ் எக்ஸ்சேஞ்ச் மேளா' என்று தொகுதிவாசிகள் கமென்ட் அடிக்கிறார்கள். அவரவர் கட்சியில் சீட் கிடைக்காததால், பரஸ்பரம் இரண்டு காமராஜ்களும் கட்சிகள் மாறி, கிருஷ்ணராயபுரம் தொகுதியை கலகலக்க வைத்திருக்கிறார்கள்.

தி.மு.க தாவிய அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.காமராஜ்

கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதியில், கடந்த 2011 - 2016 வரை அ.தி.மு.க எம்.எல்.ஏவாக இருந்தவர் எஸ்.காமராஜ். அதோடு, அ.தி.மு.கவில் ஜெ. பேரவை மாவட்ட செயலாளராகவும் இருந்தார். வரும் தேர்தலில் சீட்டை எதிர்பார்த்து, கடந்த ஒருமாத காலமாகவே தொகுதியில் வலம் வந்தார். ஓ.பி.எஸ் ஆதரவாளரான எஸ்.காமராஜ், அவர் மூலமாக சீட் பெற கடுமையாக முயற்சித்தார். ஆனால், எஸ்.காமராஜ் வளர்வதை விரும்பாத, போக்குவரத்துத் துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், தனது ஆதரவாளரான தானேஷ் என்கிற முத்துக்குமாருக்கு சீட் வாங்கி கொடுத்தார். தானேஷ் எம்.ஜி.ஆர் இளைஞரணி மாவட்டச் செயலாளராக உள்ளார்.

எஸ்.காமராஜ் (அ.தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ)

அதோடு, மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவராக உள்ளார். இதனால், தனக்கு சீட் கிடைக்காத கோபத்தில் இருந்த எஸ்.காமராஜிடம் நைஸாகப் பேசிய தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜி, கடந்த 11 - ம் தேதி, ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.கவில் சேர்த்தார். இதனால், எம்.ஆர்.விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜிக்கு பதிலடி கொடுத்த காத்திருந்தார்.

Also Read: 'உழைப்புக்கு மதிப்பில்லை' - தி.மு.க-வுக்குத் தாவிய முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ!

இந்த நிலையில், தி.மு.கவைச் சேர்ந்த கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ வழக்கறிஞர் பி.காமராஜ். இவர், கடந்த 2006 - 2011 வரை கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தார். இவர், தி.மு.க சார்பில் வரும் தேர்தலிலும் சீட் எதிர்பார்த்தார். அவர், தி.மு.கவில் வழக்கறிஞர் பிரிவில் மாவட்டப் பொறுப்பில் இருந்தார். தி.மு.கவை இந்த தேர்தலில் வழிநடத்தும் ஐபேக் டீமும், 'பி.காமராஜூக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது' என்று தி.மு.க தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியது. ஆனால், 'பி.காமராஜூக்கு சீட் கிடைத்தால், தி.மு.க ஆட்சி அமையும்பட்சத்தில் தனக்கு அமைச்சர் பதவி ரேஸில் காமராஜ் போட்டிக்கு வந்துவிடுவார்' என்று நினைத்த செந்தில் பாலாஜி, பி.காமராஜூக்கு சீட் கிடைக்கவிடாமல் தடுத்ததாக சொல்கிறார்கள். அதனால், குளித்தலை தொகுதியை சேர்ந்த சிவகாமசுந்தரி என்ற புதுமுகத்துக்கு செந்தில் பாலாஜி சீட் வாங்கி கொடுத்திருக்கிறார். இதனால், செந்தில் பாலாஜி மீது, பி.காமராஜ் கடும் கோபத்தில் இருப்பதை அறிந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரிடம் நைச்சியமாக பேசி, நேற்று இரவு முதல்வர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில், அ.தி.மு.கவில் இணைத்து, செந்தில் பாலாஜியை பழிதீர்த்திருக்கிறார்.

பி.காமராஜ் (தி.மு.க முன்னாள் எம்.எல்.ஏ)

கரூர் மாவட்டத்தில் ஒரே பெயரைக் கொண்ட முன்னாள் எம்.எல்.ஏக்கள் இருவர், அடுத்தடுத்து பரஸ்பரம் மாற்றுக்கட்சிகளுக்கு தாவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட தொகுதிவாசிகள், 'இது, காமராஜ் எக்ஸ்சேஞ்ச் மேளா' என்று கமென்ட் அடிக்கிறார்கள். இதற்கிடையில், அ.தி.மு.கவில் கிருஷ்ணராயபுரம் (தனி) சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள கீதா, இம்முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால், அவரும் கட்சி மாற தயாராக இருப்பதாக, அரசியல் கட்சியினர் மத்தியில் செய்தி பரவி வருகிறது. 'அ.ம.மு.கவில் கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்கு மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்படாததால், அநேகமாக கீதா அ.ம.மு.கவுக்கு செல்ல வாய்ப்பிருக்கிறது' என்று அவரது ஆதரவாளர்கள் சொல்கிறார்கள். கீதாவும், 'என் நிலைப்பாட்டை இன்னும் இரண்டு நாள்களில் அறிவிப்பேன்' என்று தெரிவித்துள்ளதால், 'என்ன இது, கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதிக்கு வந்த சோதனை?!' என்று மக்கள் அங்கலாய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/controversy/krishnarayapuram-ex-mlas-jumb-to-opposite-party-in-seat-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக