`நாகரிக சமுதாயம்' என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால், இன்னமும் திரைப்படங்கள், அரசியல், மீடியா என்று அனைத்து மட்டத்திலும் பெண்களுக்கு எதிரான `ஆணாதிக்க சிந்தனை'களுக்கு முழுமையாக முடிவுரை எழுத முடியாத நிலையே நீடிக்கிறது. ஓர் ஆண் மீதான காழ்ப்பு உணர்ச்சியை, அவன் வீட்டுப் பெண்களின் மரியாதையைக் குறைப்பதன் மூலம்தான் தீர்த்துக்கொள்கிறோம். இதுபோன்ற பிரச்னைகளுக்கு முடிவுரை எழுதவேண்டிய அரசியலிலேயே, ஆணாதிக்கம் நிறைந்து ததும்பிக் கொண்டிருப்பதுதான் வேதனை. தற்போதைய தேர்தல் பிரசாரங்களிலும் பெண்களைக் கொச்சைப்படுத்தும் பேச்சுகளும், காட்சிகளும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை, வாஷிங்மெஷின், நகரப் பேருந்துகளில் இலவச பயணம், வேலைவாய்ப்பில் 40 சதவிகித இடஒதுக்கீடு... இப்படிப் பல்வேறு திட்டங்களை அறிவித்து பெண்களின் வாக்குகளைக் கவர்வதற்காக அனைத்துக் கட்சிகளும் முனைப்பு காட்டிவருகின்றன. ஒருபக்கம் பெண்களுக்குச் சாதகமான திட்டங்களை அறிவித்துவிட்டு, மற்றொருபுறம் பெண்களைப் பற்றிய தரக்குறைவான வார்த்தைகளைப் பிரயோகிப்பது... கேவலத்திலும் கேவலமே!
நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த பேராவூரணி தொகுதி சட்டமன்ற வேட்பாளர் க.திலீபன், ``நீ தருகிற இலவச நாப்கினை கனிமொழிக்குத் தருவாயா, ராசாத்தி அம்மாளுக்குத் தருவாயா, தயாளு அம்மாளுக்குத் தருவாயா, உன் வீட்டு மகளுக்குக் கொடுப்பாயா, மருமகளுக்குக் கொடுப்பாயா’’ என்றெல்லாம் கேட்டிருக்கிறார் தி.மு.க-வைப் பார்த்து.
தொண்டாமுத்தூர் தொகுதி தி.மு.க வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாதிபதியை ஆதரித்துப் பிரசாரம் செய்த அந்தக் கட்சியைச் சேர்ந்த `திண்டுக்கல்’ லியோனி, `பெண்களின் இடுப்பு பேரல் போலாகிவிட்டது’ என்று சிரித்துப் புளகாங்கிதமடைந்திருக்கிறார்.
இவர்கள் இப்படியென்றால், மேற்கு வங்க பா.ஜ.க. தலைவர் திலீப் கோஷல், `மம்தா பானர்ஜி, தன் காலில் கட்டுப் போட்டிருக்கிறார். அதை வெளியில் காட்டுவதற்கு புடவையைத் தூக்கிக் கட்டியிருக்கிறார். அதற்குப் பதிலாக பெர்முடாஸ் போட்டுக் கொண்டு வரலாமே’’ என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்.
இந்தக் கட்சிகளிலெல்லாம் பெண்களும் பிரதான பதவிகளில் அமர்ந்துள்ளனர். தற்போதைய தேர்தலிலும் போட்டியிடுகின்றனர். இத்தகைய சூழலில், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளில் இருக்கும் பெண்களின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காக அவர்களிடம் பேச முயற்சி செய்தோம்.
`நாம் தமிழர்' கட்சியின் பேராவூரணி வேட்பாளர் திலீபனின் மரியாதையற்ற பேச்சுக்கு உங்களுடைய கருத்தென்ன என்று, அக்கட்சியின் மகளிரணி பிரமுகரும், பூம்புகார் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான காளியம்மாளிடம் கேட்டபோது, ``பேராவூரணி திலீபன் பேசியது பற்றி எனக்கு இதுவரை எதுவும் தெரியாது'' என்றார். திலீபன் பேசிய காணொளி பதிவை அவருக்கு வாட்ஸ்அப் மூலமாக அனுப்பினோம். அதன்பிறகு அவரிடமிருந்து பதிலே இல்லை. நம்முடைய விடா முயற்சி தொடரவே, நம்மிடம் பேசிய காளியம்மாள், ``திலீபன் பேசிய காணொளியைப் பார்த்தேன். `இப்படிப் பேசலாமா’ என்று கேட்பதற்காக நேற்று இரண்டு தடவை முயற்சி செய்தேன். பிரசார பிஸியில் இருந்ததால் அவர் என்னுடைய போனை எடுக்கவில்லை. அவர் பேசியது தொடர்பான என்னுடைய கருத்தைச் சொல்வதற்கு மிகுந்த சங்கடமாக இருக்கிறது. ஏன் இப்படிப் பேசினீர்கள் என்று நிச்சயம் அவரிடம் கேட்பேன்’’ என்று அழுத்தமாகவே சொன்னார்.
மிக்க மகிழ்ச்சி காளியம்மாள்!
திண்டுக்கல் லியோனியின் கேவலமான பேச்சு தொடர்பாக விளக்கம் பெற, தி.மு.க நாடாளுமன்றக்குழு துணைத்தலைவரும் அக்கட்சியின் மகளிரணிச் செயலாளருமான கனிமொழியிடம் பேச முயன்றோம். `பிரசாரத்தில் பிஸி பிஸி' என்றே தொடர்ந்து பதில் கிடைத்தது. நம்முடைய முயற்சி தொடரவே, ஒரு கட்டத்தில் பேசினார் கனிமொழி.
``லியோனி மட்டுமல்ல யாராக இருந்தாலும் எந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்திப் பேசுவது தவறு. பெண்கள் என்பவர்கள் நுகர்பொருள் இல்லை என்பதை எல்லாருமே புரிந்துகொள்ள வேண்டும். அடிப்படை உணர்திறன் (Sensitivity) இல்லாமலேயே பேசுவது சரியல்ல. பெண்கள் மட்டுமல்ல யாரையும் இழிவுப்படுத்திப் பேசக்கூடாது என தி.மு.க பேச்சாளர்களிடம் கட்சி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஒவ்வொருவரையும் கண்காணித்துக்கொண்டும் கட்டுப்படுத்திக்கொண்டும் இருப்பது சாத்தியமில்லை'' என்றவர்,
``கட்சிகளில் மட்டும் என்றில்லை சினிமாவிலும், திரைப்படப் பாடல்கள் என பெரும்பாலான இடங்களில் பெண்களைக் கொச்சைப்படுத்தித்தான் எழுதிக்கொண்டிருக்கிறார்கள். சாதி பேதமின்றி அனைவரும் சமமானவர்கள் என்பதையும், ஆணுக்குப் பெண் சமம் என்கிற உணர்வையும் பள்ளிப் பருவத்திலிருந்தே ஏற்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் இத்தகைய பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும்'' என்று சொன்னார்.
நன்றி கனிமொழி. ஆனால், இதற்கான முயற்சியையும் நீங்களே முன்னெடுக்க முன்வாருங்கள்.
பி.ஜே.பி-யின் திலீப் கோஷல், தரக்குறைவாக மம்தா பானர்ஜியை விமர்சித்திருப்பது குறித்து பா.ஜ.க-வின் கருத்தை அறிவதற்காக அக்கட்சியின் தேசிய மகளிரணித் தலைவரும் கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளருமான வானதி சீனிவாசனைத் தொடர்புகொண்டோம். பலமுறை முயன்றபோதும், ``மேடம் தேர்தல் பிரசாரத்தில் பிஸியா இருக்காங்க’' என்ற பதிலே உதவியாளரிடம் இருந்து கிடைத்தது. குறுஞ்செய்திகள் மூலமாகவும் வானதிக்கு தகவல்கள் அனுப்பினோம். அவரிடமிருந்து கடைசிவரை பதிலே இல்லை. அதேசமயம், தி.மு.க-வின் `திண்டுக்கல்' லியோனி பேசிய தரக்குறைவான பேச்சுகள் குறித்து, `பெண்களை இழிவுப்படுத்துவது என்பது தி.மு.க-வின் பாரம்பர்ய வழக்கம்' என்று பிற மீடியாக்களில் சாட்டை தூக்கிக் கொண்டிருந்தார் வானதி.
கவலையாக இருக்கிறது வானதி!
Also Read: பெண்களின் `பேரல்' இடை, நாப்கின் குமுறல், பெர்முடா... இவைதான் உங்கள் லட்சணமா கட்சிகளே? #VoiceOfAval
அரசியலில் பெண்களின் பங்கு அதிகரித்து வருகிற இந்தக் காலகட்டத்தில் பெண்களைப்பற்றித் தரக்குறைவாகப் பேசுகிற அரசியல்வாதிகளையும் அரசியல் ஆர்வலர்களையும், அனைத்துப் பெண்களின் சார்பாக வன்மையாகக் கண்டிப்பதோடு, அதற்கான நியாயமான எதிர்வினையையும் உடனுக்குடன் அனைவருமே ஆற்றியாக வேண்டும். குறிப்பாக, அந்தந்தக் கட்சி சார்ந்த பெண்கள் முதல் ஆளாகக் குரல் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் பெண்களின் பிரதிநிதியாக அறியப்படுவார்கள். இல்லையென்றால், பெண்ணாக இருந்தாலும் அவர்களும் `ஆணாதிக்க சக்தி' என்றே அறியப்படுவார்கள்!
எதிர்காலத்திலாவது அனைத்து அரசியல் இயக்கங்களிலும் இருக்கும் பெண்கள் அனைவருமே, ஆணாதிக்கத்துக்கு எதிராக எப்போது கைகள் கோப்பார்கள் என்று நம்புவோம்!
source https://www.vikatan.com/social-affairs/women/female-political-leaders-reaction-to-their-party-mens-misogynist-and-sexist-comments
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக