Ad

புதன், 3 மார்ச், 2021

ஆலந்தூரில் கமல் போட்டி? துறைமுகத்தில் பழ.கருப்பையா? மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பட்டியல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நடிகர் கமல்ஹாசன் தனது இரண்டாம் கட்ட தேர்தல் பரப்புரையை, தேனாம்பேட்டை மெட்ரோ ரயிலில் இருந்து நேற்று மாலை தொடங்கினார். ஏற்கெனவே, கடந்த நவம்பர் மாதம் மதுரையில் தொடங்கி தமிழகம் முழுவதும் மண்டல வாரியாகப் பிரசாரத்தை மேற்கொண்டார். இந்தநிலையில், இன்று தனது இரண்டாம் கட்ட பரப்புரையை போரூர் பாய் கடையில் இருந்து தொடங்கி, ஆலந்தூர், வேளச்சேரி, ஐந்து விளக்கு வழியாகப் பயணித்து இரவு எட்டு மணியளவில் மயிலை மாங்கொல்லையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதோடு முதல் நாளை நிறைவு செய்தார்.

கமல்

சென்னை ஆலந்தூர் தொகுதியில் கமல் போட்டியிடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அந்தத் தொகுதியை மையமாக வைத்தே தனது பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார் கமல். எம்.ஜி.ஆர் முதன்முதலில் போட்டியிட்ட பரங்கிமலை தொகுதி தற்போது ஆலந்தூர் தொகுதிக்குள் வருவதால் சென்டிமென்டாகவும், அதேபோல ஒப்பீட்டளவில் சென்னையில் மற்ற தொகுதிகளைவிட ஆலந்தூர் தொகுதி மிகச்சிறிய தொகுதியாக இருப்பதால், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய ஏதுவாக இருக்கும் என்பதாலும் இந்தத் தொகுதியை கமல் டிக் செய்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Also Read: கமல் இனி வாய்ப்பில்லை... தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு இடம்? #TNElection2021

கூடவே, அந்தக் கட்சியின் துணைத்தலைவர் மருத்துவர் மகேந்திரன் கோவை தெற்கு தொகுதியிலும், விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுச்செயலாளருமான சந்தோஷ் பாபு கிருஷ்ணகிரி தொகுதியிலும் போட்டியிட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றியபோது மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்ததாலேயே அந்தத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேபோல மக்கள் நீதி மய்யத்தில் சமீபத்தில் இணைந்த பழ.கருப்பையா, ஏற்கெனவே அவர் எம்.எல்.ஏவாக இருந்த துறைமுகம் தொகுதியிலும் இளைஞரணிச் செயலாளர் பாடலாசிரியர் சிநேகன் விருகம்பாக்கம் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

மக்கள் நீதி மய்யம்!"

அதேபோல, மக்கள் நீதி மய்ய மாநிலச் செயலாளர்(திருச்சி மண்டலம்) முருகானந்தம், திருச்சி திருவெறும்பூர் தொகுதியிலும் தொழிலதிபர் சி.கே.குமரவேல் வேளச்சேரி தொகுதியிலும் நடிகை ஶ்ரீபிரியா ஆயிரம் விளக்கு தொகுதியிலும், கமீலா நாசர் மதுரவாயல் தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் வருகின்ற மார்ச் ஏழாம் தேதி, மக்கள் நீதி மய்யத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/makkal-neethi-maiyam-party-speculated-candidate-list

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக