Ad

புதன், 24 மார்ச், 2021

7 அடுக்குகள்; 400 டன் எடை.... ஆசியாவின் பிரமாண்ட அசையும் கோயில், ஆழித்தேர்!

* இந்திரனுக்குப் போரில் உதவச் சென்ற முசுகுந்தருக்கு சன்மானமாகக் கிடைத்தன ஏழு விடங்க மூர்த்தங்கள். அந்த மூர்த்தங்களைக் கொண்டு வர தேவலோக ஸ்தபதி மயனால் செய்யப்பட்டதே ஆழித்தேர். பாற்கடல் தந்த தேவதாருக்களைக் கொண்டு தேர் உருவானது இந்தத் தேர். அதனாலேயே இது ஆழித்தேர் அதாவது கடல் போன்ற தேர் என்று பேரானது.

* 10 தேர்க்கால்கள், 9 லட்சம் கிலோ எடைகொண்ட அந்த பிரமாண்டத் தேர் பிரம்மனால் ஸ்தாபிக்கப்பட்டது. திருமாலால் வணங்கப்பட்டது. அஷ்ட திக் பாலகர்களும் அந்த தேரின் குதிரைகளாக மாறினர். தேர்க்கால் அச்சாக தேவர்களும், தேரின் அடித்தட்டாக காலதேவனும் அமர்ந்தார்கள். வார்த்தையால் வடிக்க இயலாத அழகிய சிற்பங்களும் தொம்பையின் ஓவியங்களும் தேவர்களை மயக்கமுறச் செய்ததாம். முதன்முதலில் தோன்றிய இந்த தேரால் 'ரத ஸ்தாபன சாஸ்திரம்’ என்னும் புதிய சாஸ்திரமே உருவானதாம்.

திருவாரூர் தேர்

* தேர் உருவாகிவிட்டது. 7 விடங்க மூர்த்தங்களும் எழுந்தருளியாகிவிட்டது. ஈசனை அர்ச்சிக்க தேவலோக பொருள்களும் தேரொடுக் கொண்டு செல்லப்பட்டன. ஆம், 70 வகை சிவ வாத்தியங்கள், ஈராயிரம் வகை தேவ மலர்கள், ஐந்து வகை புண்ணியத் தீர்த்தங்கள் என பல புண்ணிய பொருள்களும் கொண்டு வரப்பட்டன என்று திருவாரூர்ப் புராணம் சொல்கிறது. தேவர்களே வியந்துபோற்றிய அந்த ஆழித்தேர் நல்லூர் என்னும் புண்ணிய தலத்தை அடைந்தது.

* நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் 7 விடங்க மூர்த்தங்களையும் மூன்று நாள்கள் வைத்து பூசை செய்து வழிபட்டார் முசுகுந்தன். பிறகு ஈசனின் ஆணைப்படி தேர் திருவாரூரை நோக்கிப் புறப்பட்டது. மூல விடங்கரான தியாகராஜ பெருமான், முதன்முதலில் அமர்ந்து ஒரு பங்குனி உத்திர நாளில் பவனி வந்தார். அப்போது முசுகுந்த சக்கரவர்த்தி ஆணையின்படி திருத்தேர் உலா வருகையில் பொன்பூ, வெள்ளிப்பூக்களை வாரி இறைத்தனராம். அதனால் திருவாரூர் மாடவீதிகள் நான்கும் வீதி பொன்பரப்பிய திருவீதிகள் எனப்பட்டது. இந்த தகவல்களை திருவாரூர்க் கோவையும், திருவாரூர் உலா என்ற நூல்கள் கூறுகின்றன. திருத்தேர் உலா வரும்போது கொடு கொட்டி, பாரி நாயனம் போன்ற அபூர்வ இசைக் கருவிகள் இசைக்கப்படுவது வழக்கம்.

* ஆழித்தேர் திருவிழாவை தேவார முதலிகளான திருநாவுக்கரசரும், திருஞானசம்பந்தரும் முன்னின்று நடத்தினார்கள் என்ற குறிப்பும் இந்த விழாவின் மகத்துவத்தை நமக்கு விளக்கும். 'ஆழித் தேர் வித்தகனை நான் கண்டது ஆரூரே!' என்று வியக்கிறார் ஆளுடைய அரசப்பெருமான்.

* தியாகராஜரின் பாதங்கள் ஆண்டுக்கு இரண்டு தினங்களில் தவிர எல்லா நாள்களும் மலர்களால் மூடப்பட்டு இருக்கும். பங்குனி உத்திரம் திருவிழா நடைபெறும் வேளையில் இடது பாதத்தையும், திருவாதிரை திருவிழா சமயம் வலது பாதத்தையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம் என்பதே திருவாரூர் ரகசியங்களில் ஒன்றாக சொல்லப்பப்படுகிறது.

* சோழ மன்னன் விக்கிரம சோழன் காலத்தில் ஓடாமல் நின்று போன இந்த தேரை திருவாரூர் ருத்ர கணிகை கொண்டி என்பவள் ஓடவைத்தாள் என்ற தகவலும் தல வரலாற்றில் காணக் கிடைக்கிறது.

* திருவாரூர் தேரழகு என்று இன்றும் போற்றப்படும் இந்த தேர் 1926 - ம் ஆண்டு நடைபெற்ற தேர்த் திருவிழாவின் போது தீப்பற்றியதால் முழுதும் எரிந்துவிட்டது.பிறகு 1930-ம் ஆண்டு புதிய தேர் உருவாக்கப்பட்டு தேரோட்டம் 1948 ஆம் ஆண்டு வரை நடைபெற்றது என்றும் பிறகு தடைபட்டது என்றும் வரலாறு கூறுகிறது. அந்த அழகிய தேரில் 400க்கும் மேற்பட்ட மரச்சிற்பங்கள் இருந்தன என்கிறார்கள். இறுதியாக 1970-ம் ஆண்டு தமிழக அரசு மற்றும் வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் முயற்சியால் ஆழித் தேரோட்டம் நடைபெறத் தொடங்கியது.

* தற்போது உருவாகியுள்ள இந்த தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகும். எண்கோண வடிவில் ஏழு அடுக்குகளைக் கொண்டு 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது இந்த தேர். முற்றிலுமாக அலங்கரிக்கப்படும்போது இது 400 டன் எடையை அதாவது 4 லட்சம் கிலோ எடையைக் கொண்டது.

* பூதப்பார், சிறுஉறுதலம், பெரியஉறுதலம், நடகாசனம், விமாசனம், தேவாசனம், சிம்மாசன பீடம் என 7 அடுக்குகளைக் கொண்டது. தேரின் நான்காவது நிலையில் தியாகராஜர் வீற்றிருப்பார். இந்த தேரை அலங்கரிக்கும் பணியில் பல டன் மூங்கில்களும் 500 கிலோ வண்ணத்துணிகள், 50 கயிறுகள், 5 டன் பனைமரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த தேரை இழுக்கவென்று 4 பெரிய வடங்கள் பயன்படுகின்றன. ஒரு வடம் 425 அடி நீளம் கொண்டது என்கிறார்கள். தேர், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்கள், அழகிய வண்ணம் தீட்டிய ஆலவட்டங்கள், தோரணங்கள் முதலியவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

திருவாரூர் தேர்

* ஆழித்தேரின் வடம் பிடித்து இழுப்பதால் கயிலையில் இடம் கிடைக்கும் என்று மக்கள் நம்புகின்றனர். ஆழித்திருவிழா முடிந்த அடுத்தநாள் தேர் அசைந்து சென்ற தடம் முழுவதும் பெண்கள் விழுந்து வணங்கித் தங்களது வேண்டுதல்களை இறைவனிடம் உரைப்பர். இந்நிகழ்ச்சி "தேர்த்தடம் பார்த்தல்" என்று இன்றும் அழைக்கப்படுகிறது. தேர்த் திருவிழாவின்போது தேர் நிற்கும் இடத்திலிருந்து கோயிலின் பிரகாரத்தைச் சுற்றித் தொடங்கிய இடத்திற்கே வருதலை "நிலைக்கு வருதல்" என்பர். தேர் அசையும்போதெல்லாம் மக்கள் கூட்டம் கூடி அரூரா, தியாகேசா என்று விண்ணதிர முழக்கமிடும் ஒலியும் மெய்சிலிர்க்க வைக்கக் கூடியது. திருவாரூர் வீதியெங்கும் கயிலாய வாத்திய முழக்கங்களும் திருமுறை முழக்கங்களும் என பூலோக கயிலாயமாக விளங்கும் என்றால் அது மிகையில்லை.

* திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. அப்போது அழகிய இந்த ஆழித் தேர் நான்கு மாட வீதிகளில் வரும் பொழுது குதிரைகள் அசையும் அழகு காண்பதற்கு கன்கொள்ளா காட்சியாக இருக்கும். இதுதவிர சுப்பிரமணியர், விநாயகர், அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகியோரின் திருத்தேர்களும் ஆழித் தேரோட்டத்தின் போது நான்கு மாடவீதிகளை வலம்வர உள்ளன.

* வாழ்வில் ஒருமுறையேனும் காணவேண்டிய பூலோக சொர்க்க விழாவான திருவாரூர் திருத்தேர் வைபவத்தை எல்லோரும் கண்டு அருள் பெற தியாகராஜ பெருமானை வேண்டிக் கொள்கிறோம்.



source https://www.vikatan.com/spiritual/gods/thiruvarur-some-astonishing-facts-about-asias-biggest-car-festival

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக