Ad

புதன், 24 மார்ச், 2021

சென்னை: `தானா சேர்ந்த கூட்டம்’ படத்தைப்போல் ஐடி அதிகாரிகளாக நடித்த 3 பேர் சிக்கியது எப்படி?

சென்னை கொரட்டூர் வாட்டர் கேனல் ரோடு சந்தோஷ்நகரைச் சேர்ந்தவர் சேகர் (32). இவர் எஸ்.எஸ். டிரேடர்ஸ் என்ற பெயரில் பிசினஸ் செய்து வருகிறார். கடந்த மார்ச் 23-ம் தேதி மாலை சேகர், தன்னுடைய அலுவலகத்தில் இருந்தார். அப்போது பெண் உள்பட 3 பேர் அங்கு வந்தனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண்டனர். அவர்கள் சேகரிடம்,` நீங்கள் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்திருக்கிறது. அதனால் ரெய்டு நடத்த வந்திருக்கிறோம். கடந்த நிதியாண்டில் நீங்கள் செலுத்திய வருமான வரி விவரங்களை கொடுங்கள்’ என்று அதிகாரிகள் தோரணையில் மூன்று பேரும் பேசியிருக்கின்றனர். அதனால் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சேகர் பதிலளித்துக் கொண்டிருந்தார்.

வருமான வரி

ஆனால் ஒருகட்டத்தில் அவர்களின் நடவடிக்கை மீது சேகருக்கு சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவர், சைகை மூலம் ஊழியர் ஒருவரிடம் விவரத்தைத் தெரிவித்தார். உடனடியாக அந்த ஊழியரும் தன்னுடைய செல்போனிலிருந்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து விவரத்தைக் கூறினார். உடனடியாக காவல் கட்டுபாட்டு அறையிலிருந்து சம்பந்தப்பட்ட கொரட்டூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் கொரட்டூர் போலீஸார் சேகரின் அலுவலகத்துக்கு விரைந்து வந்தனர்.

Also Read: வருமான வரி ரெய்டு... அதிகாரிகளை அடக்கி வைக்குமாறு பிரதமருக்கு ஆடிட்டர்கள் கடிதம்! 

போலீஸாரைப் பார்த்ததும் வருமான வரி அதிகாரிகள் என்று கூறியவர்களுக்கு வியர்த்துக் கொட்டியது. அதனால் அவர்கள் ரெய்டை அப்படியே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களைப் போலீஸார் மடக்கிப்பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரித்தபோது வருமான வரித்துறை அதிகாரிகள் என்று கூறி அவர்கள் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Also Read: சென்னை: `பங்கு சந்தை முதலீடு; அதிக லாபம்!’ - ஆசை காட்டி லட்சக்கணக்கில் சுருட்டிய இளைஞர்கள்

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சேகரின் அலுவலகத்துக்கு டிப்டாப்பாக உடையணிந்து பெண் உள்பட 3 பேர் வந்திருக்கின்றனர். அவர்கள் தங்களை வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து வந்திருப்பதாகக் கூறி சேகரின் அலுவலகத்தில் சோதனை நடத்தியிருக்கின்றனர். அப்போது சேகரின் அலுவலகத்திலிருந்து 20 ஆயிரம் ரூபாய் மற்றும் சில ஆவணங்களை அவர்கள் பறிமுதல் செய்திருக்கின்றனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தபோது வருமான வரி அதிகாரிகள் என்று கூறி மோசடியில் ஈடுபட்டது விநாயகபுரத்தைச் சேர்ந்த நிருபன் சக்ரவர்த்தி (29). வில்லிவாக்கத்தைச் சேர்ந்த விஷ்ணுகுமார் (40), அமைந்தகரையைச் சேர்ந்த மகாலட்சுமி (22) ஆகியோர் எனத் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது" என்றனர்.

நடிகர் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடந்த காட்சிகள் நிஜத்தில் கொரட்டூர் பகுதியில் நடந்திருப்பது அப்பகுதி தொழில் உரிமையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-fake-income-tax-officers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக