நாம் பிறந்த நாளை கொண்டாடினோமோ இல்லையோ, கொரோனா தனது முதல் பிறந்த நாளை வெகுவிமரிசையாக கொண்டாடி முடித்துவிட்டு ஜம்மென்று சென்று கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 2020-2021 கல்வியாண்டு சத்தமே இல்லாமல் தனது ஆயுள் காலத்தை முடித்துக்கொள்ளப்போகிறது. பல்வேறு மாணவர்களின் எதிர்காலமும் சத்தமில்லாமல் சிதைந்து கொண்டிருக்கிறது.
கொரோனா அலை ஓய்ந்ததுபோல் இருக்கவும், மெல்ல மெல்ல பள்ளிகளைத் திறந்து 12-ம் வகுப்புகளை நடத்த ஆரம்பித்தார்கள். தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தது சற்று உத்வேகத்தைக் கொடுக்கவும், 9, 10, 11-ம் வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வரவைத்தார்கள்.
ஏற்கெனவே ஓராண்டு காலம் ஏதும் படிக்காமல் இருந்து பலவற்றையும் மறந்துபோன மாணவர்களை மீட்டெடுத்து பாடத்திட்டத்திற்குள் கொண்டுவருவதற்குள் இரண்டாவது அலை வந்துவிட்டது. மீண்டும் 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ் என்று சொல்லிவிட்டார்கள். மாணவர்களுக்கு வேண்டுமானால் இது சந்தோஷத்தை தரலாம். அவர்களுக்கு இது புரியாத பருவம். ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும்தான் தலைவலியும் திருகுவலியும்.
உயர்கல்வி படிப்பிற்கு அடித்தளம் இடுவது 9,10, 11, 12-ம் வகுப்புகள்தான். சென்ற ஆண்டு 12-ம் வகுப்பைத் தவிர மற்ற அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என்றது அரசு. இந்த ஆண்டும் அதே முறையை கையாண்டு, அனைவரும் தேர்ச்சியடைந்ததாக கடந்த பிப்ரவரி 25 அன்று அரசாணையை வெளியிட்டுவிட்டது தமிழக அரசு.
இப்படி தேர்வு நடத்தாமல் தேர்ச்சி அளிப்பது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் மூலம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில், `பொதுத் தேர்வு நடத்தவில்லை என்றாலும், பள்ளிகள் அளவில் தேர்வு நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் 11-ம் வகுப்பில் சேரும்போது மாணவர் விரும்பும் பாடத்திட்டத்தை சேர்க்கை வழங்க முடியும். தேர்வுகள் ரத்து செய்வது தொடர்பாக எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது' என்று வாதிட்டது.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், `பொதுநலன் சார்ந்த விஷயங்களில் அதிகாரிகள் உரிய ஆலோசனைகளுக்கு பிறகே முடிவுகள் எடுப்பார்கள். எந்த கலந்தாலோசனையும் மேற்கொள்ளவில்லை என்ற வாதத்தை ஏற்க முடியாது. எனவே, அரசாணையை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்புக்கு செல்லும் மாணவர்கள், விருப்பப் பாடத்தை தேர்வு செய்யும் வகையில், அவர்களின் தகுதியைக் கண்டறிய பள்ளிகள், தேர்வு நடத்திக்கொள்ளலாம். இது சம்பந்தமாக பள்ளிக்கல்வித் துறை உரிய வழிகாட்டி விதிகளை அறிவிக்க வேண்டும்' என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்திருக்கின்றனர்.
தஞ்சாவூரில் பள்ளி ஒன்றின் மூலம் கொரோனா பரவியது தமிழகம் முழுக்க உள்ள பெற்றோர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் எதிர்காலம் கருதி 12-ம் வகுப்புப் படிக்கும் தங்களது பிள்ளைகளை பயத்தோடுதான் பள்ளிக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். இது ஒருபுறம் இருக்க, `அந்தந்தப் பள்ளிகளே 10-ம் வகுப்பில் இருந்து 11-ம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்திக்கொள்ளலாம். விருப்பப்பாடங்களை தேர்வு செய்துகொள்ள அவர்களின் தகுதியைக் கண்டறியலாம்' என்று நீதிமன்றம் அறிவுறுத்தியதைத்தான் கூர்ந்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
ஓராண்டுக்கு முன்னரே தேர்வு எழுதாமல் ஒன்பதாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பிற்கு வந்த மாணவர்கள் இப்போதிருக்கும் மாணவர்கள் என்பதை மறந்துவிடக்கூடாது. கொரோனாவால் பல்வேறு தரப்பினரும் பணியிழந்து நின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளின் பெற்றோர்கள், கடன் பட்டு, அல்லல்பட்டு இப்பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டிருந்தார்கள். பணியிழந்து போனதால் சாப்பாட்டிற்கே பிரச்னை எனும்போது பள்ளிக்கூடத்திற்கு கட்ட பணம் எங்கே போவது என்று கட்டணத்தை செலுத்த முடியாமல் கையறு நிலையில் பெற்றோர்கள் இன்றுவரை தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள்.
அரசுப்பணியில் இருப்பவர்களும் செல்வச் செழிப்புடன் இருப்பவர்களும் தங்களது பிள்ளைகளை சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்க வைத்துக்கொண்டிருப்பதால் அவர்கள் கல்விக்குப் பிரச்னை இல்லை. அனைத்து வசதிகளும் இருப்பதால், அங்கு படிக்கும் மாணவர்கள் கல்வியை தங்கு தடையின்றி கற்றுக்கொண்டே வருகிறார்கள். அதுவரையில் அவர்கள் பாதுகாப்பான எல்லையில் இருக்கிறார்கள்.
மாநிலக் கல்விப் பாடத்திட்டத்தில் பயிலும் அரசுப்பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் நிலைதான் மிகவும் கவலைக்குரியதாக இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் கட்டணம் இல்லை என்பதால், அங்கே பொருளாதார அளவில் பிரச்னை இல்லை. கல்வியில் தீவிர கவனம் செலுத்தினால் போதும்... அந்த மாணவர்களை தேற்றிவிடலாம் என்ற எண்ணம் இருக்கிறது.
`நாம்தான் நன்றாகப் படிக்கவில்லை. நமது பிள்ளைகளாவது தனியார் பள்ளிகளில் படிக்கட்டுமே' என்று வாயைக்கட்டி வயிற்றைக்கட்டி தனியார் பள்ளிகளில் சேர்த்த பெற்றோர்களின் நிலையும், அங்கு பயிலும் மாணவர்களின் நிலையும்தான் கவலையடையச் செய்வதாக இருக்கிறது.
75% கட்டணத்தை பள்ளிகள் வசூலித்துக்கொள்ளலாம் என்று அரசு சொல்லியதை வைத்து, பாடத்தை நடத்துகிறார்களோ இல்லையோ, பள்ளியை நடத்துகிறார்களோ இல்லையோ, ஆன்லைன் வகுப்பினை நடத்துகிறார்களோ இல்லையோ, பெற்றோர்களிடம் பேசிப் பேசி கட்டணத்தை வசூல் செய்த பள்ளிகள் அதிகம். அதில் பாதி கட்டணத்தை வசூலித்த பள்ளிகளும் அதிகம். மீதி கட்டணத்தை எப்படி வசூல் செய்வது என்று விழி பிதுங்கிக்கொண்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு இந்த அறிவிப்பு அழகாக வழிகாட்டிவிட்டது.
`நாங்கள் தேர்வு நடத்தியாக வேண்டும். நாங்கள்தான் உங்கள் குழந்தைக்கு மதிப்பெண் வழங்கியாக வேண்டும். ஏற்கெனவே நீங்கள் பள்ளிக்குக் கட்டணம் செலுத்தாமல் இருக்கிறீர்கள். கட்டணம் செலுத்தினால்தான் தேர்வுக்கு அனுமதிக்க முடியும். இல்லை என்றால் உங்க குழந்தை தேர்வு எழுத முடியாது... என்ன சொல்கிறீர்கள்?' என்று சாட்டையை வலிக்காததுபோல சுழற்ற ஆரம்பித்தார்கள்.
பெற்றோர்கள் தரப்பில், `அதான் அரசாங்கம் ஆல் பாஸ்னு சொல்லிடுச்சே.... நீங்க என்ன இப்படிச் சொல்றீங்க' என்று கேட்டால், `அதான் நீதிமன்றமே சொல்லிடுச்சே. அடுத்து என்ன குரூப் எடுக்கணும், அதனோட எதிர்காலம் எப்படி ஆகும்னு யோசிச்சு பாருங்க... பணத்தை கட்டினாதான் பள்ளியை நடத்தமுடியும். தேர்வு நடத்த முடியும்' என்று இப்போது பேசத் தொடங்கிவிட்டார்கள்.
பள்ளிகள் முறையாக நடைபெற்றபோதே, பதினோராம் வகுப்பில் முதல் பிரிவை தேர்வு செய்ய மதிப்பெண்களை விட மணிப்பர்ஸ் கனம் அங்கே போட்டிபோடும். அதிக டொனேஷன் கொடுப்பவர்களின் குழந்தைகளுக்கு முதல் பிரிவை ஒதுக்கிக்கொடுக்கும் பள்ளிகள் கிராமம் தொட்டு நகரம் வரை இருக்கின்றன.
என் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகன், தனியார் பள்ளியில் பத்தாவது படிக்கிறார். கொரோனா காரணமாக சென்ற ஆண்டு ஜூனில் அவருக்கு பணியிழப்பு ஏற்பட்டது. இன்று வரை வேலை கிடைக்கவில்லை. மனைவியின் சொற்ப சம்பளத்தில் குடும்பத்தை நடத்த ஆரம்பித்திருக்கிறார். பள்ளியில் கட்டணம் கட்டச் சொல்லிக் கேட்டுக்கொண்டே இருந்தார்கள். பணியிழப்பை காரணம் காட்டி, இப்போதைக்கு முடியாது பணி கிடைத்த பின் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார். அதை மனுவாக எழுதித்தரச்சொல்லி அப்பள்ளி நிர்வாகம் வாங்கிக்கொண்டது.
ஆன்லைன் வகுப்பு எடுக்கிறோம் என்ற பெயரில் அங்கும் கட்டண வேட்டை தொடங்கப்பட்டது. கட்டணம் செலுத்தாத நண்பரின் மகனுக்கு வகுப்புகள் மறுக்கப்பட்டன. இடையில் பள்ளிகள் திறந்தபோது கடனை வாங்கி பாதி கட்டணத்தை கட்டி வகுப்பிற்கு அனுப்பி வைத்தார் நண்பர். மகனுக்குப் புத்தகங்களை கடையிலேயே வாங்கிக் கொடுத்துவிட்டார். `நோட்டுப் புத்தகம் உங்களை நம்பித்தான் வாங்கினோம். எப்படி நீங்கள் புத்தகங்களை வெளியில் வாங்கலாம்? உங்க பையன் ரெக்கார்ட் நோட் எழுதி சமர்ப்பிக்கணும். ரெக்கார்ட் நோட் வாங்கிக் கொடுங்க' என்றனர். வாங்கி அனுப்பி வைக்கிறேன் என்றதற்கு, `வெளியில் வாங்கக்கூடாது. பள்ளியில்தான் வாங்க வேண்டும்' என்று கூறிவிட்டனர்.
`சரி எவ்வளவுனு சொல்லுங்க' என்று கேட்டதும், அவர்கள் சொன்ன பதிலைக் கேட்டு அவருக்கு தலை சுற்றாத குறைதான். `3,700 சொச்சம் கட்டுங்க. ரெக்கார்ட் நோட் தர்றோம்' என்றார்கள். வெகுண்டுபோன நண்பர் நேரில் சென்றார்.
`ஒரு ரெக்கார்ட் நோட்டின் விலை 3,700 ரூபாய் எனில், அந்த நோட்டு வேண்டாம். கட்டணம் செலுத்த முடியாது. மீறிச் செலுத்த வேண்டும் என்று நீங்கள் கட்டாயப்படுத்தினால், நான் என் மகனுக்காக கட்டிய பணத்தை திருப்பித் தாங்க, பையனோட டிசியையும் தந்துடுங்க' என்று சொல்லவும், கொஞ்சம் சமரசமாகப் பேசி அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
ஒரு நோட்டுக்கே இப்படி பணம் கேட்கிறார்கள் எனில், தேர்வு நடத்தி மதிப்பெண் தரப்போகிறோம் என்றால் எவ்வளவு கறாராக இருக்கப்போகிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். வட்டிக்கடைகளிலும், வங்கிகளிலும் அடகு வைக்கக்கூட மக்களிடம் எதுவும் இல்லை. பி.எஃப் தொகையையும் கரைத்துவிட்டார்கள். தமிழக அரசு விரைந்து இதற்கொரு தீர்வைத் தரவேண்டும்.
வட இந்திய மாநிலங்களில் கொரோனா ஊரடங்கு அறிவித்தபோது, அங்கிருந்த தனியார் பள்ளிகள் 50% கட்டணக் குறைப்பை உடனே அமல்படுத்தி, பெற்றோர்களின் சுமையை குறைத்தன. தமிழகத்தில் என்ன நிலை இருந்தது என்பது எல்லோரும் அறிவோம்.
பள்ளியே நடக்காமல், வகுப்பிற்கும் செல்லாமல் வீட்டிலேயே இருத்தி வைக்கப்பட்ட மாணவர்களுக்கு 75% கட்டணம் செலுத்தச் சொன்னது எந்த விதத்தில் நியாயம்? இப்போது பள்ளிகளே தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று சொல்லி இருக்கிறீர்களே? இதை எப்படி வரைமுறைப் படுத்தப் போகிறீர்கள்? கட்டணம் செலுத்தாமல் தேர்வறைக்குள் வரக்கூடாது என்று சொல்லும் பள்ளிகளுக்கு என்ன பதில் வைத்திருக்கிறீர்கள்? எதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்போகிறீர்கள்? எப்படி மாணவர்களின் தகுதியை மதிப்பீடு செய்து பதினோராம் வகுப்பில் அவர்களுக்கான பிரிவை தேர்வு செய்துகொள்ளும் வழிமுறையை கையாளப் போகிறீர்கள்?
ஒராண்டு காலமாகப் படிக்காமல் இருக்கும் மாணவர்கள் நிலை மேம்பட என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்? இங்கிருக்கும் பிரச்னை போதாது என்று மத்திய அரசு தன் பங்கிற்கு நர்சிங் முதற்கொண்டு அனைத்து மருத்துவப்படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்று தடாலடியாக அறிவித்துக்கொண்டே போகிறது. ஒராண்டிற்கும் மேலாக படிக்காமல் இருக்கும் நம் மாணவர்கள் இந்திய அளவில் எப்படி போட்டி போட முடியும்? நம் எதிர்காலத் தூண்களான இவர்கள் எப்படி நாளை இந்திய அளவிலான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ள முடியும்?
இப்போதிருக்கும் அரசு, தேர்தல் ஓட்டத்தில் இருக்கும்போது, இதை எப்படி கண்டுகொள்ளும் என்ற விரக்திதான் தொக்கி நிற்கிறது.
தரமான கல்விதான் எதிர்காலத் தமிழகப் பொருளாதார கட்டமைப்பிற்கான அடித்தளம். அரசியல் லாபத்திற்காக தற்காலிக மகிழ்ச்சி அறிவிப்புகளாக ஆல் பாஸ் திட்டத்தை அறிவித்திருக்கிறீர்கள். இதன் துன்பங்களை அறுவடை செய்யப்போவது நீங்களல்ல... எதிர்காலமே கேள்விக்குறியாக நிற்கும் எமது பள்ளி மாணவர்கள்தான். அவர்களைப் பெற்ற பெற்றோர்களும்தான்.
`தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடவைத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இப்போதிருக்கும் வகுப்பிலேயே இருக்க வைத்து, அவர்களுக்கான பாடங்களை முறைப்படி நடத்தி முடித்து, பிறகு தேர்ச்சியைக் கொடுத்து அடுத்த வகுப்பிற்கு அனுப்பி வையுங்கள். செப்டம்பரிலிருந்து ஏப்ரல் வரை அடுத்த கல்வியாண்டு தொடங்கட்டும். அடுத்த ஆண்டுக்கான கல்விக்கட்டணம் 50% என இருக்க வேண்டும். யூனிபார்ம் ஷு, சாக்ஸ், நோட்டுப்புத்தகம் என்று அதற்கென தனியே கட்டணம் வசூலிக்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்' என்று ஆலோசனைகள் முன்வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.
இன்றைய மாணவர்களின் பலமான அடித்தளக் கல்விக் கட்டமைப்புதான் நாளைய வளமான தமிழகத்தின் எழுச்சி. அதற்குரிய முக்கியத்துவத்தையும் செயல்பாடுகளையும் கொடுக்க வேண்டும் அரசு.
- மோ.கணேசன்
source https://www.vikatan.com/social-affairs/education/tamilnadu-private-schools-extorting-money-from-parents-citing-court-order
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக