`விடியலுக்கான முழக்கம்' என்ற பெயரில் திருச்சி சிறுகனூரில் இன்று தி.மு.க சார்பில் தேர்தல் சிறப்புப் பொதுக்கூட்டம், மாநாடு போல் பிரம்மாண்டமாக இன்று நடைபெற இருக்கிறது. இதில் தமிழகத்திற்கு அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை ஸ்டாலின் அறிவிக்க இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாகத் திருச்சியில் 11வது மாநில மாநாடு நடைபெறவிருந்த நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கான தேதிகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநாட்டைச் சிறப்பு பொதுக் கூட்டமாக நடத்த தி.மு.க தலைவர் ஸ்டாலின் முடிவு செய்துள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது.
இதற்காகத் திருச்சி பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையான சிறுகனூரில் தேர்வு செய்யப்பட்ட இடத்தில் இரவு பகலாக பணிகள் தீவிரமாக நடைபெற்றது. பொதுக்கூட்ட மேடை மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி மட்டும் 350 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக் கூட்டத்துக்காக 90 அடி உயரக் கொடிக்கம்பம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Also Read: ‘பெரியண்ணன்‘ மனோபாவத்தில் தி.மு.க... குமுறும் கூட்டணிக் கட்சிகள்!
சிறப்பு பொதுக் கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்ப 250 அடி பிரம்மாண்டமான எல்.ஈ.டி டிஸ்ப்லே அமைக்கப்பட்டுள்ளது. மூன்று விதமான மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. `தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தவும் கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்களை முதல்வராகப் பதவி ஏற்பதற்கான முன்னோட்டமாக இந்த நிகழ்வு நடைபெறுகிறது' என முதன்மைச் செயலாளர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்ச்சியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் அவர்கள் மிக முக்கியமான லட்சியப் பிரகடனத்தை வெளியிட இருக்கிறார் . தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்குப் பார்வை திட்டங்களை வெளியிட உள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்குள் அனைத்து துறைகளிலும் முதல் இடம்பெறக்கூடிய வகையில் தமிழ்நாட்டைக் கட்டமைப்பதற்கான தலைவரின் மாபெரும் கனவு அறிவிக்கப்பட உள்ளது.
சிறப்பு பொதுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள், இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டமாக செய்து தனக்கு கொடுத்த டாஸ்க்கை நிறைவேற்றியிருக்கிறார் நேரு. தொண்டர்கள் அமர மட்டும் சுமார் 5 லட்சம் சேர்கள் வரவைக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தி.மு.க தலைவர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காலை 11 மணியளவில் விமானம் மூலமாகத் திருச்சி வருகிறார். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பிறகு மதியம் ஒரு மணி அளவில் கூட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். பின்பு மாலை 4 மணியளவில் மேடை ஏறுகிறார். பல இடங்களில் கட்சியின் அடுத்த எதிர்காலமே என்கிற போஸ்டர்களும் உதயநிதியைப் புகழ்ந்து வைத்த பாதாதைகளும் பல இடங்களில் தென்படுகின்றன.
source https://www.vikatan.com/news/politics/trichy-dmk-conference-ready-with-huge-arrangements
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக