தேவி சென்னையின் குடிசைப்பகுதி ஒன்றில் வசித்தவர். கணவர் இறந்துவிட, தன் இரு மகள்களையும் நோயாளி அம்மாவையும் காப்பாற்றும் பொறுப்பைத் தலையில் சுமந்தவர். நான்கு வீடுகளில் வீட்டு வேலை செய்வதும், இரண்டு அலுவலகங்களில் துப்புரவுப் பணி செய்வதுமே அவருக்கு வருமானம். மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் கொரோனா ஊரடங்கை பிரதமர் மோடி அறிவித்தபோது, ‘சொந்த ஊர் போய் சில நாள்கள் இருக்கலாம்’ எனக் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று, நெரிசலான பேருந்து ஒன்றில் நின்றபடி பயணம் செய்து கிராமத்துக்குத் திரும்பினார்.
அவர் நினைத்தது போல 21 நாள்களில் ஊரடங்கு முடியவில்லை. இத்தனை நாள்கள் வேலை செய்த வீடுகளிலிருந்து அவருக்கு உதவிக்கரமும் நீளவில்லை. மீண்டும் சென்னை வந்தாலும், பழையபடி வீட்டு வேலைக்குப் போக முடியாதபடி நோய் அச்சம் தடுக்கும் என்பது புரிந்தது. சொந்த ஊரிலேயே விவசாயக் கூலிவேலைக்குப் போய் பிழைத்துக்கொள்ளலாம் என முடிவெடுத்தார். மகள்களை கிராமத்து அரசுப் பள்ளியில் சேர்த்தார். வரலாற்றில் எப்போதும் இல்லாதபடி அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை கடந்த ஆண்டு அதிகரித்தது என அரசு ஒரு புள்ளிவிவரம் சொன்னதே, அதில் தேவியின் மகள்களும் அடக்கம்.
வானம் பார்த்த பூமியில் ஓரளவு மழை பெய்து, ஆரம்ப நாள்களில் வேலை கிடைத்தது. ஆனால், ஆண்டு முழுக்க தங்கள் குடும்பத்துக்குச் சோறு போடும் அளவுக்கு கிராமத்தில் வேலை கிடைக்காது என்பது அவருக்கு சீக்கிரமே புரிந்துபோனது. மீண்டும் சென்னைக்குப் போவதா, இங்கேயே இருப்பதா என்று புரியாத குழப்பத்தில் நாள்களை நகர்த்திக்கொண்டிருக்கிறார்.
சந்திரன் சென்னையின் பரபரப்பான பகுதி ஒன்றில் தள்ளுவண்டி உணவகம் நடத்தியவர். 10 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாகத் தன் உழைப்பால் மேலே வந்து, ஓ.எம்.ஆர் சாலையில் ஐ.டி நிறுவனம் ஒன்றில் கேன்டீன் நடத்தும் கான்ட்ராக்ட் வாங்கினார். சுமார் 50 பேர் வேலை பார்க்கும் தொழிலாக அது விரிவடைந்தது. தரமாக உணவு தந்ததால், இன்னொரு நிறுவனத்திலும் கேன்டீன் நடத்த அவரைக் கூப்பிட்டு ஒப்பந்தம் செய்தனர். 2020 ஏப்ரலில் அதை சந்திரன் ஏற்று நடத்தியிருக்க வேண்டும். மார்ச்சில் கொரோனாவும் ஊரடங்கும் இரட்டை இடிகளாக வந்து இறங்கின. கைவசம் வைத்திருந்த சேமிப்பிலிருந்து, தன்னிடம் வேலை பார்த்த 50 பேருக்கும் சம்பள அட்வான்ஸ் கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார் சந்திரன்.
இதோ... ஓராண்டு கடந்துவிட்டது. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற புத்தியல்பு வாழ்வுக்கு ஐ.டி நிறுவனங்கள் பழகிவிட்டதால், சந்திரனுக்கு மீண்டும் கேன்டீன் நடத்தும் வாய்ப்பு அமையவில்லை. சேமிப்புகள் அனைத்தும் கரைந்து போக, இப்போது மீண்டும் தள்ளுவண்டி உணவகம் நடத்துகிறார் அவர்.
திருவண்ணாமலை பக்கம் இருக்கும் கிராமத்திலிருந்து சென்னை வந்த முத்துசாமி, ஓலாவுடன் இணைந்து டாக்ஸி ஓட்டிக்கொண்டிருந்தார். தூக்கத்தைத் தியாகம் செய்து சம்பாதித்த பணத்தில், குடும்பத்தை ஓரளவு சிரமம் இல்லாமல் நகர்த்த முடிந்தது. திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்டதும், காரை எடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் போய்விட்டார். அந்த ஊரில் டாக்ஸி ஓட்டிப் பிழைப்பதற்கான வாய்ப்பு இல்லை. வந்த விலைக்குக் காரை விற்றுவிட்டு, கூடுதலாகக் கொஞ்சம் வங்கிக்கடனும் பெற்று, ஒரு பழைய டிராக்டரை விலைக்கு வாங்கினார்.
ஏற்கெனவே ஊரில் இருக்கும் டிராக்டர்களுடன் போட்டி போட்டு உழவு வேலைகளைப் பெறுவது சிரமமாகத்தான் இருக்கிறது. என்றாலும், அவருக்கு வேறு வழி தெரியவில்லை. சென்னையில் இருக்கும் சக நண்பர்களிடம் அவ்வப்போது பேசுகிறார். ‘‘எல்லாரும் வொர்க் ஃப்ரம் ஹோம்னு வீட்டுலயே இருக்காங்க. மக்கள் வெளியே சுத்தறதும் குறைஞ்சிடுச்சு. சவாரியே இல்லை’’ என்ற புலம்பல்களைக் கேட்டதும், அவருக்குத் தன் வாழ்க்கைமீது பிடிப்பு வந்துவிடுகிறது.
பல தேவிகள், சந்திரன்கள், முத்துசாமிகளுக்கு வாழ்க்கை இப்படித்தான் ஆகியிருக்கிறது. கால எந்திரம் ஒன்றில் ஏறாமலேயே, அவர்கள் ஒரே ஆண்டில் வாழ்வில் பல ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டார்கள்.
நிச்சயம், நாம் ஒரு வரலாற்றுக் காலத்தில்தான் வாழ்கிறோம், கொரோனா காலமும் அதன் அனுபவங்களுமே நாளைய சந்ததியினருக்கான வரலாறுதானே! 2020 மார்ச் மாதம் முதல் நம் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களை எல்லாம் ஓர் அறிவியல் புனைவாக எழுதியிருந்தால் ‘இது நல்ல கற்பனை’ என்று சிலர் பாராட்டியிருப்பார்கள். ‘இப்படியெல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை, ஏன் இப்படி எழுதி ஒரு சமூகத்தை அச்சுறுத்தவேண்டும்’ என்று பலர் சொல்லியிருப்பார்கள்.
தமிழகத்தில் முதல் கொரோனாத் தொற்று மார்ச் 7, 2020 அன்று கண்டிபிடிக்கப்பட்டது. மார்ச் 25-ம் தேதி தமிழகத்தில் முதல் கொரோனா மரணம் மதுரையில் அறிவிக்கபட்டது. மார்ச் 24-ம் தேதி நள்ளிரவில் மத்திய அரசு முழுமையான ஊரடங்கை அமல்படுத்தியது. அத்துடன் பொருளாதார நடவடிக்கைகளும் முழுமையாக முடங்கிப்போனது. இது உலக அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்குகளிலேயே மிகக் கடுமையானது.
ஓராண்டு கழித்து திரும்பிப் பார்க்கும்போது நினைவில் நிற்பது, நாடு முழுவதும் சாமானியர்கள் பட்ட துயரங்களே! பேருந்துகள் இல்லை; ரயில்கள் இல்லை; வேலையில்லை. எங்கே செல்வார்கள் இந்த அன்றாடங்காய்ச்சிகள்... திக்குத்தெரியாது நின்றார்கள். சோறு, தண்ணீர் இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் மக்கள் நடந்தார்கள். மாநில எல்லைகளில் தடுக்கப்பட்டார்கள்; அடித்துத் துரத்தப்பட்டார்கள். பசியால் இறந்தார்கள்; அதிர்ச்சியில் இறந்தார்கள்; ரயிலில் நசுங்கிச் செத்தார்கள். ஒட்டுமொத்தமாக ஒரு அரசு நிர்வாகம் செயலிழந்து போகும்போது எளிய மக்கள் எப்படியெல்லாம் நிர்க்கதியாவார்கள் என்பதை கொரோனா நமக்கு உணர்த்தியது. நோய்த் தொற்றைப் பொறுத்து ஒவ்வொரு மாநிலமும் எடுக்க வேண்டிய முடிவுகளை எல்லாம் மத்திய அரசே எடுத்தது. எல்லா முடிவுகளையும் எடுத்த மத்திய அரசு, ஏழைகள் கடுமையாக பாதிக்கப்பட்டபோது தன் பொறுப்பைக் கைகழுவி ‘இதெல்லாம் அந்தந்த மாநில அரசுகளின் வேலை’ என்று கை கழுவியது.
உலகம் முழுவதும் அரசுகள், கட்சிகள், பாராளுமன்றங்கள், சட்டசபைகள் கூடுதலாகக் கூடி முடிவுகள் எடுத்தபோது, இந்திய அரசு தனது மழைக்காலத் கூட்டத்தொடரை ஒரு கண் துடைப்பாக நடத்தியது, குளிர்காலக் கூட்டத் தொடரை ரத்தும் செய்தது.
இந்தியாவின் ஜிடிபி படுபாதாளத்தில் பாய்ந்தது. வேலையில்லாத் திண்டாட்டத்தின் குறியீடு உயர்ந்தது. இதே காலகட்டத்தில் அதானியின் சொத்து மதிப்பு இரட்டிப்பானது. முகேஷ் அம்பானியின் வருமானம் ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் என வெற்றிநடை போட்டது, பங்குச்சந்தை தொடர்ந்து குதியாட்டம் போட்டது. தமிழக அரசுக்கு மட்டும் வரி வருவாய் இழப்பு ரூ.85,000 கோடியைத் தாண்டியது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் நிலவரப்படி 12 கோடிப் பேர் தங்களின் வேலைகளை இழந்தார்கள். 1.8 கோடிப் பேர் தங்களின் தொழில்களை மூடினார்கள். இந்தப் பொருளாதார முடக்கத்தில் இந்திய முதலாளிகளைத் தாங்கிப் பிடித்த அரசுகள், ஏன் அதேபோல் இந்த நாட்டில் உள்ள ஏழை எளியவர்களைக் காக்க முன்வரவில்லை என்கிற கேள்வியை வரலாறு கேட்கும்.
வசதி படைத்த பலர் ஷாப்பிங் மால்களுக்குச் சென்று தங்களால் இயன்ற அளவு பொருள்களை வாங்கிக் குவிப்பதும், யூடியூப் பார்த்து விதவிதமாய் சமைப்பதும் என லாக்டௌன் நாள்களைக் கொண்டாடினார்கள். பலர் தங்கள் வசமுள்ள உணவை, பசியால் வாடியவர்களுடன் பகிர மறுத்தார்கள். தங்களிடம் வேலை செய்த ஓட்டுநர்கள், வீட்டு வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடுக்க மறுத்தார்கள். தங்கள் வீட்டுக் கதவுகளில் பெரிய பூட்டுகளைப் போட்டு இந்த சமூகத்தில் இருந்து தங்களைத் துண்டித்துக்கொண்டார்கள்.
ஆனால், பல சமூக இயக்கங்கள் தொற்றின் உச்சகாலத்தில்கூட பசியைப் போக்கும் அரும்பணியைச் செய்தன. சமைத்த உணவைப் பரிமாறுவது, மளிகைப் பொருள்கள் கொடுப்பது, உடைகள் கொடுப்பது முதல் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் போன்கள் கொடுப்பதுவரை பல விதமான செயல்கள் நடந்தவண்ணம் இருந்தன. ஏழைகள் தங்களிடம் உள்ள எல்லாவற்றையும் பகிரத் தயாராக இருந்தார்கள்.
ஒரு வருடம் முடிந்ததும் எல்லாம் சகஜமாகிவிட்டதுபோல் தோற்றமளித்தாலும் இன்னும் நடைமுறை வாழ்க்கை சகஜமாகவில்லை. ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ என்ற நடைமுறை பல துறைகளில் அமலாகியிருக்கிறது. இதன் விளைவாக, பெரிய அலுவலகங்களின் தேவை பலருக்கு இல்லாமல் போய்விட்டது. அந்த அலுவலகங்களைச் சார்ந்த துப்புரவுப் பணியாளர்கள், சின்னச்சின்ன டீக்கடைகள், கேன்டீன்கள், போக்குவரத்துப் பணிகளைச் செய்தவர்கள் என்று எல்லோரும் மாற்று வாழ்க்கையை நோக்கிச் சென்றிருக்கிறார்கள். சென்னை போன்ற நகரங்களில் அலுவலக வாடகை பாதியாகக் குறைந்திருக்கிறது .
மரபான பல வேலைகள் காணாமல்போயிருக்கின்றன. புதிதாக உருவான வேலைகள், அதை ஈடுசெய்யும் அளவுக்கு வளரவில்லை. ஆன்லைன் வர்த்தகம் பெரிதாகி, பல கடைகள் தடுமாறுகின்றன. வேலை இழப்புகளும் சம்பள இழப்புகளும் இன்னமும் ஈடுசெய்யப்படாமல் தவிப்பவர்கள் நிறைய பேர்.
பொருளாதார நிலை சீரடைய வேண்டுமெனில் மீண்டும் தொழில்கள் தொடங்கப்படவேண்டும். அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் பொருளாதார சுழற்சிக்குள் வரவேண்டும். ஊருக்குச் சென்றவர்கள் திரும்ப வேண்டும். இந்தச் சக்கரம் மீண்டும் அதே வேகத்தில் சுற்ற இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்று தெரியவில்லை.
இந்த நாட்டில் மக்கள் பட்ட பாடுகள் நாளைய வரலாற்றின் பக்கங்களில் இடம்பெறும். கொரோனா காலத்தில் நாம் வாழ்ந்தோம். இதையெல்லாம் அனுபவித்தோம். எல்லா இடர்களையும் தாண்டிப் பிழைத்துக்கிடந்தோம் என்பதே பெருமிதமான ஓர் உணர்வுதானே!
source https://www.vikatan.com/news/general-news/one-year-of-lockdown
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக