Ad

சனி, 13 மார்ச், 2021

ரிஸ்க் எடுக்கறவன்தான் சாதிப்பான் - `சூரரைப் போற்று' கோபிநாத் கற்றுக் கொடுத்த 10 பாடங்கள்! #MyVikatan

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு மாரத்தான் ஓட்டம் போல படிக்க ஆரம்பித்த டெக்கான் ஏர்வேஸின் நிறுவனர் கேப்டன் கோபிநாத்தின் 465 பக்க சுயசரிதையை (Simply Fly: A Deccan Odyssey) இரண்டே நாளில் படித்து முடித்தாகிவிட்டது. நிஜமாகவே மிக பிரமிப்பான, கொள்கை பிடிப்பு கொண்ட, துணிச்சலான முடிவுகள் நிறைந்த ஒரு வாழ்க்கையைத்தான் இதுவரை கேப்டன் கோபிநாத் வாழ்ந்து இருக்கிறார். (இவரது வாழ்வைத் தழுவிதான் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' எடுக்கப்பட்டிருந்தது. திரைப்படத்துக்கு ஏற்றவாறு சில விஷயங்களை மட்டும் மாற்றியிருந்தார்கள்.)

ரிஸ்க்! ரிஸ்க்! ரிஸ்க்!

இந்த மனிதன் வாழ்க்கையில் அத்தனை முறை பயப்படாமல் தொடர்ச்சியாக ரிஸ்க் எடுத்து இருக்கிறார். சில உதாரணங்கள்...

- ஏழை பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்து வளர்ந்து அவர்களின் கலாசாரத்துக்கு எதிராக ராணுவத்தில் சேர்ந்தது.

- மிக பாதுகாப்பான இந்திய ராணுவ கேப்டன் பதவியை சில வருடங்களில் உதறி தள்ளியது.

Simply fly Book Cover

- கரடுமுரடான பாசன வசதியற்ற மலைக்குன்றில் அரசு கொடுத்த நிலத்தில் தனி ஓர் ஆளாக தோட்டம் போட்டது. 10 வருடம் அந்தத் தோட்டத்தை மேம்படுத்த தனி ஆளாக உழைத்தது.

- நிரந்தர வருமானம் இல்லாமல் திருமணம் செய்து கொண்டது.

- அனுபவமே இல்லாமல் உடுப்பி ஹோட்டல் ஆரம்பித்தது.

- அனுபவமே இல்லாமல் என்பீல்டு மோட்டார் ஏஜென்ஸி ஆரம்பித்தது.

- அனுபவமே இல்லாமல் அரசியலில் இறங்கி தேர்தலில் போட்டி.

- அனுபவமே இல்லாமல் ஹெலிகாப்டர் கம்பெனி ஆரம்பித்தது.

- சில வருடங்களிலியே நேரடியாக 3 ATR ரக விமானங்களை விலைக்கு வாங்கி விமான நிறுவனம் ஆரம்பித்தது.

- அடுத்த சில வருடங்களிலேயே இந்திய அரசும் விமான போக்குவரத்து துறையும், இதர இந்திய விமான நிறுவனங்களும் அதிரும்படி வெறும் ஒரு கோடிக்கு குறைவான பணத்தை வங்கிக் கணக்கில் வைத்து கொண்டு ஒரே தவணையில் 60 விமானங்களை (12,000 கோடி ரூபாய் மதிப்பு) போயிங் நிறுவனத்தில் ஆர்டர் செய்தது.

- கிங்பிசர் நிறுவனத்துடன் ஜாயின் வென்ச்சர் போட்டது.

- பின் அதே கிங்க்பிஷர் நிறுவனத்துக்கு 1000 கோடி ரூபாய்க்கு டெக்கான் ஏர்வேஸை விற்றது.

- விற்ற சூட்டோடு ஹவாய் தீவுகளில் ஓய்வெடுக்கப் போகாமல் டெக்கான் 360 என்னும் லாஜிஸ்டிக் நிறுவனத்தை நாக்பூரை தலைமையிடமாக கொண்டு ஆரம்பித்து இப்போது நடத்த ஆரம்பித்து இருப்பது.

தலை சுற்றுகிறதல்லவா இவர் கதையை கேட்டால்... உண்மையில் பெருங்கனவுகள் கொண்ட மனிதரால் மட்டுமே இது சாத்தியப்படும்!

கேப்டன் வாழ்க்கையில் இருந்து நான் கற்றுக்கொண்ட விஷயங்கள்:

1) தொடர்ந்து பெரிய கனவுகளை காணுங்கள்

2) வசதியாக இருக்கிறது என்று ஒரு வேலையில் தங்கி தேங்கி போகாதீர்கள். உங்களால் நிறைய சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டு புதிய விஷயங்களைத் தொடர்ந்து செய்ய முயலுங்கள்.

3) நல்ல நண்பர்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள், உங்கள் வாழ்க்கைப் பயணத்தை அவர்கள் துணையுடன் தொடருங்கள் (கேப்டனுடன் டெக்கானில் ஆரம்பித்து இன்றுவரை நண்பர்களாகவும் தொழில் பங்குதாரர்களாகவும் இருப்பவர்கள் பெரும்பாலும் அவருடன் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த ஆரம்பகால தோழர்களே!)

4) காலத்தை விரயம் செய்யாதீர்கள் ('சூரரைப் போற்று' படத்தில் சூர்யா பேசும் வசனம் இது)

5) புதிய தொடர்புகளை/நண்பர்களை உருவாக்கிக் கொண்டே இருங்கள். உங்களுக்குத் தேவைப்படும் இடத்தில் இந்தத் தொடர்புகளையும், நண்பர்களையும் பயன்படுத்த கூச்சப்படாதீர்கள் (தனது தொடர்புகளின் மூலமாகவே அரசாங்கத்திடம் தொழிலுக்குத் தேவையான நிறைய விஷயங்களை சாதித்து இருக்கிறார் கேப்டன்).

Captain G. R. Gopinath

6) உங்களில் மேலோரை விட உங்களைத் தாழ்வாக எண்ணாதீர்கள் (இப்படிப்பட்ட இவருடைய குணம்தான் தன்னுடன் டீல் பேச வந்த வியாபார உலகின் டைனோசர்களான அனில் அம்பானி மற்றும் விஜய மல்லையாவை இலகுவாக ஹேண்டில் செய்ய வைத்தது)

7) பேசும் பேச்சில் தெளிவாக, கண்டிப்பாக இருங்கள். வளவள கொழகொழ என்று பாலில் போட்ட பொறி போல பேசாதீர்கள். உங்களுடன் பழகவோ, வணிகம் செய்யவோ எவரும் விரும்பமாட்டார்கள் (வியாபாரத்தில் தான் நினைக்கும் விலை படியாவிட்டால், முகத்துக்கு நேராக சாரி நீங்க போகலாம், உங்களுடன் நான் வியாபாரம் செய்ய விரும்பவில்லை என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டு அடுத்த பார்ட்னரை நோக்கி நகர்வதைத் தன்னுடைய ஸ்டைலாக வைத்து இருந்து இருக்கிறார் கேப்டன்).

8) உங்களுக்கென்ற தனிப்பட்ட வாழ்வை எக்காரணம் கொண்டும் சமரசம் செய்துகொள்ளாதீர்கள் (ரொம்ப பிசியாக இருந்தாலும் ஊர் சுற்றுவதையோ, கோல்ப் விளையாடுவதையோ கேப்டன் எப்போதும் நிறுத்தியதே இல்லை).

9) உங்கள் குடும்பத்துக்கான உங்கள் நேரத்தைத் தவறாமல் ஒதுக்குங்கள் (நேரம் கிடைக்கும் போதெல்லாம் தவறாமல் குடும்பத்துடன் ஜங்கிள் சபாரி, ரிசார்ட் என்று பொழுது போக்கி இருக்கிறார் கேப்டன்).

10) பெரிய பெரிய ரிஸ்க் எடுத்தால் மட்டுமே வாழ்வில் பெரிய உயரங்களைத் தொட முடியும் என்று நம்புங்கள்.

ஹேமாவதி நதிக்கரையில் உள்ள ஒரு சிறு கிராமத்தில் ஏழை ஆசிரியரின் மகனான பிறந்து, ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக்கே செல்லாமல், பின் பல ரிஸ்குகளை எடுத்து ஒரு சாகச போர் வீரன் போன்ற மிக துணிச்சலான முடிவுகள் நிரம்பிய வாழ்வை வாழ்ந்து வானத்தை தன் வசப்படுத்திய கேப்டன் கோபிநாத் போன்றவர்கள் வளரும் தலைமுறைக்கு உண்மையான வாழ்வியல் எடுத்துக்காட்டு (Living Example) என்றுதான் சொல்ல வேண்டும்.

A Big Salute to Captain. Gopinath!

- விமலாதித்தன், Chief Information Security Officer, Bank Of Sharjah

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/



source https://cinema.vikatan.com/miscellaneous/10-life-lessons-to-learn-from-the-inspirational-story-of-captain-gopinath

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக