Ad

வெள்ளி, 26 மார்ச், 2021

`நான் ஜெயித்தால்’ ரூ1 கோடி, ஹெலிகாப்டர், 100 சவரன் நகை, நிலாவுக்கு சுற்றுலா - அதிரவைக்கும் சுயேச்சை!

தி.மு.க, அ.தி.மு.க, மக்கள் நீதி மய்யம் என அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, மக்கள் மத்தியில் அது குறித்து விவாதங்களும் நடந்து வருகின்றன. இந்த நிலையில் மதுரையில் சுயேச்சை வேட்பாளர் சரவணன், ஷாக் கொடுப்பது போல் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரதான கட்சிகளை மிஞ்சி கவனம் ஈர்த்திருக்கிறார்.

மதுரை அனுப்பானடி பகுதியில் வசித்து வருகிறார் சரவணன். அக்கம்பக்கத்தினர் துலாம் சரவணன் என அழைக்கின்றனர். 10-ம் வகுப்பு வரை படித்த இவருக்கு 33 வயதாகிறது.

மார்க்கெட்டிங், உள்ளூரில் உள்ள செய்தித்தாளின் நிருபர் என பல வேலைகளை செய்து வந்தவர், தற்போது மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். அ.தி.மு.க சார்பில் கூட்டணிக் கட்சியான பா.ஜ.க-வின் வேட்பாளார் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன், தி.மு.க கூட்டணி சார்பில் ம.தி.மு.க-வின் பூமிநாதன் ஆகியோருடன் துலாம் சரவணன் போட்டியிடுகிறார்.

துலாம் சரவணன் தேர்தல் அறிக்கை

துலாம் சரவணனின் வாக்குறுதிகள் என்னென்னவென்று பார்க்கலாம்:

தொகுதி மக்கள் அனைவருக்கும் ஐபோன், நீச்சல் குள வசதியுடன் கூடிய மூன்று அடுக்கு வீடு, ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு கார், ஹெலிகாப்டர், படகு வழங்கப்படும், 100 நாள் பயணமாக நிலவுக்கு சுற்றுலா, பெண்களின் திருமணத்துக்கு 100 சவரன் நகை, ஒரு கோடி ரூபாய் பணம், தொகுதியில் விண்வெளி ஆராய்ச்சி மையம், ராக்கெட் ஏவுதளம் அமைப்பது என்று ஒரு பெரிய பட்டியலை வெளியிட்டிருக்கிறார். இவரின் தேர்தல் அறிக்கையே சமூக வலைத்தளங்களில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.

தொகுதியில் நல்ல சாலைகள் அமைப்பது, தூய்மையான குடிநீர் வழங்குவது, பாதாள சாக்கடைத் அமைப்பது, தொகுதி முழுவதும் WiFi வசதி, தூய்மையான பொதுக்கழிப்பறைகள் என சில நல்ல வாக்குறுதிகளையும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். ஆனால், நம்ப முடியாத வகையில் அவர் வெளியிட்ட அறிக்கையின் ஒரு பகுதி மட்டுமே வைரலாக பரவி வருகிறது.

துலாம் சரவணனின் தேர்தல் அறிக்கை

மதுரையை சிட்னி போல் ஆக்குவேன் என்றார் செல்லூர் ராஜூ. ஆனால், துலாம் சரவணனின் வாக்குறுதிகள் நிறைவேறினால் சிட்னி இனி மதுரையைப் போல ஆகத் துடிக்கும் நிலை ஏற்படும். தனக்கு ஒதுக்கப்பட்ட சின்னமான குப்பைத் தொட்டியில் வாக்களியுங்கள் என்று நம்பிக்கையுடன் கேட்கிறார் துலாம் சரவணன்.



source https://www.vikatan.com/news/general-news/independent-candidate-tulam-sarvanan-stuns-with-unbelivable-manifesto

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக