உலகின் முன்னணி வல்லரசாகப் பார்க்கப்படும் அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. பெரும்பாலான மாகாணங்களில் முடிவுகளும் வெளியாகிவிட்டன. குடியரசுக் கட்சி சார்பில் தற்போது அதிபர் பொறுப்பில் இருக்கும் டொனால்டு ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் மோதிய இந்ததேர்தலில் பைடன் வெற்றிபெறுவதற்கான சமிஞ்சைகள் தெரிய ஆரம்பித்திருக்கின்றன.
கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க தேர்தலில் இந்த முறை கிட்டத்தட்ட 10 கோடிப் பேர் முன்கூட்டியே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்திருக்கின்றனர். மீதிப் பேர் தேர்தல் நாளில் வரிசையில் நின்று தங்களின் வாக்குகளைப் பதிவு செய்தனர். சமீபத்தில் நடந்த தேர்தல்கள் அனைத்தையும் விட மிகவும் கடுமையான போட்டி நிலவும் இந்த தேர்தலில் இரு வேட்பாளர்களுமே குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்திலேயே முக்கிய மாகாணங்களில் முன்னிலையைப் பெற்றுவருகின்றனர். இந்த சூழலில், வாக்கு எண்ணிக்கை நடந்துகொண்டிருக்கும்போதே எப்போதும் போலச் சர்ச்சைக்குரிய பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார் ட்ரம்ப்.
இந்தப் பதிவுகளை ஃபேஸ்புக்கும் ட்விட்டரும் எப்படி கையாள்கின்றன?
கடந்த அமெரிக்கத் தேர்தலில் ஃபேஸ்புக் எவ்வளவு முக்கிய பங்காற்றியது என்பதை எடுத்துக்காட்டியிருந்தது கேம்பிரிட்ஜ் அனலிடிகா சர்ச்சை. அதனால் இம்முறை தேர்தல் விஷயத்தில் சமூக வலைதளங்கள் இன்னும் கூட கவனமாக இருந்து வருகின்றன. பொய் பரப்புரைகளும், போலி குற்றச்சாட்டுகளும் சரமாரியாக பதிவிடப்படும் இந்த சூழலைக் கையாள செப்டம்பர் மாதமே என்ன மாதிரியான நெறிமுறைகள் இந்தத் தேர்தலின் போது தங்கள் தளங்களில் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என சிறப்பு பாலிசிகளை வரையறுத்து வைத்தன இந்த சமூக வலைதள நிறுவனங்கள். இந்த விஷயத்தில் ட்விட்டர் முன்பிருந்தே கறாராகத்தான் இருந்து வருகிறது. ஃபேஸ்புக் அந்த அளவு கடுமையாக இல்லை என்றாலும் இம்முறை சில கட்டுப்பாடுகளை விதிக்கவே செய்தது.
ஏற்கெனவே ட்ரம்ப் பதிவுகளை ட்விட்டர் நீக்கியது, Content Moderation-ல் இருக்கும் சிக்கல்கள் போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரைகளைப் படியுங்கள்.
Also Read: ட்ரம்புக்கும் ட்விட்டருக்கும் அப்படி என்னதான் பிரச்னை...? விரிவான அலசல்! #LongRead
Also Read: அரசியல் விளம்பரங்கள் குறித்து முரண்படும் ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர்... எது சரி? #LongRead
ட்ரம்ப் பதிவுகளைப் பற்றிப் பேசுவதற்கு முன்பு அமெரிக்க அதிபர் தேர்தல் சூழல் பற்றி சுருக்கமாக விளக்கி விடுகிறேன். நம் இந்தியத் தேர்தல் போல அல்லாமல் முற்றிலும் மாறுபட்ட தேர்தல் முறை கொண்டுதான் அமெரிக்காவில் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இதை 'Electoral College' முறை என்கின்றனர். ஒரு மாகாணத்தில் பெரும்பான்மையைப் பெற்றால் அந்த மாகாணத்தின் மொத்த 'Electoral Votes'-ம் பெரும்பான்மை கட்சிக்குக் கிடைத்துவிடும். அதாவது கலிஃபோர்னியாவில் மொத்தம் 55 உறுப்பினர் சீட்கள் இருக்கின்றன. அந்த மாகாணத்தில் பெரும்பான்மையைப் பெறும் கட்சி மொத்த 55 சீட்களையும் கைப்பற்றும். இதை வைத்தே அதிபர் தேர்வுக்கான பெரும்பான்மை முடிவுசெய்யப்படுகிறது. இந்த முறையில் அமெரிக்கர்கள் பலருக்குமே எதிர்க்கருத்து உண்டு. ஆனால் இன்று வரை இந்த முறைதான் அங்குப் பின்பற்றப்பட்டு வருகிறது. இதில் சில மாகாணங்கள் எந்த கட்சிக்கு வாக்களிக்கும் என்பது முன்பே தெளிவாகத் தெரிந்துவிடும். இவையல்லாத மாகாணங்களில்தான் தேர்தல் பிரசாரங்களே பெருமளவில் மேற்கொள்ளப்படும். இந்த மாகாணங்களை 'Swing States' என அழைப்பார்கள். இதனால்தான் சில மாகாணங்களில் காலடியே எடுத்து வைக்காத அதிபர் தேர்தல் வேட்பாளர்கள் ஃபுளோரிடா போன்ற மாகாணங்களுக்கு 30 முறைக்கும் அதிகமாகச் சமீபத்தில் விசிட் அடித்திருக்கின்றனர். தேர்தலின் போக்கை அப்படியே மாற்றும் அதிகாரம் படைத்த மாகாணங்களாக இவை பார்க்கப்படுகின்றன. சரி, விஷயத்துக்கு வருவோம்.
முன்பு சொன்னதை போல எப்போதையும் விட இந்த முறை கொரோனாவின் காரணத்தால் சில முக்கிய மாகாணங்களில் தபால் முறை வாக்குப்பதிவுகள் அதிக அளவில் பதிவாகியிருக்கின்றன. தபால் முறை வாக்குகள் பெரும்பாலும் பைடனுக்கே கிடைக்கும் என்கின்றன கருத்துக்கணிப்புகள். இதனாலேயே தொடர்ந்து தபால் முறை வாக்குப்பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் ட்ரம்ப். அமெரிக்க நேரப்படி நேற்று இரவு பைடன் 227 எலெக்ட்டோரல் வாக்குகளைப் பெற்று முன்னணியிலிருந்தார். ட்ரம்ப்பும் 213 எலெக்டோரல் வாக்குகளைப் பெற்று மிகவும் பின்தங்கி விட வில்லை. இந்த நிலையில் லட்சக்கணக்கில் தபால் முறை வாக்குகள் பதிவாகியுள்ளதால் விரைவாக அவற்றை எண்ண முடியாத சூழல். தேர்தலுக்கு முன்பே இம்முறை வாக்குப்பதிவு சில இடங்களில் நாள் கணக்கில் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனால் முதல்கட்ட நேரடி வாக்குகளின்படி மீதமிருந்த சில முக்கிய மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலையிலிருந்தார்.
இதுதான் சரியான நேரம் என வாக்கு எண்ணிக்கை முழுவதுமாக முடிவதற்கு முன்பே 'வெற்றி பெற்றுவிட்டோம்' என லைவ் டிவியில் மக்களிடம் பேசினார் ட்ரம்ப். சில செய்தி சேனல்கள் ட்ரம்ப் பேசிக்கொண்டிருக்கும்போதே இடைமறித்து நிலவரம் என்ன என்பதை மக்களுக்கு விளக்கின. யு-ட்யூப் இந்த வீடியோக்கள் எங்கள் வரைமுறைகளுக்குள் தான் இருக்கின்றன என அவற்றை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இப்படி பொய் பரப்புரை என அனைவரும் எச்சரித்தாலும் ட்ரம்ப் விட்டபாடில்லை. சமூக வலைத்தளங்களில் தனது பதிவுகளின் மூலம் தொடர்ந்து ''தபால் வாக்குகளில் மோசடி நடக்கிறது, வெற்றி நம்முடையது தான்'' எனக் கூறிவருகிறார்.
We are up BIG, but they are trying to STEAL the Election. We will never let them do it. Votes cannot be cast after the Polls are closed!
— Donald J. Trump (@realDonaldTrump) November 4, 2020
இதைப் பார்த்த ட்விட்டர், ஃபேஸ்புக் இரண்டுமே உடனடியாக நடவடிக்கை எடுத்தன.
"Some or all of the content shared in this Tweet is disputed and might be misleading about an election or other civic process" என்ற எச்சரிக்கையுடன் ட்ரம்ப்பின் ட்வீட்டை ரீட்வீட், லைக், ரிப்ளை செய்ய முடியாத படி மறைத்தது.
ஃபேஸ்புக், "Final results may be different from the initial vote counts, as ballot counting will continue for days or weeks after polls close" என்ற எச்சரிக்கையைப் பதிவுடன் இணைத்தது.
இன்று அமெரிக்காவில் பொழுது விடிந்ததும் தபால் வாக்குகள் எண்ணப்படத் தொடங்கியதால் பின்தங்கிய மாகாணங்களில் பைடன் முன்னிலை பெற்றார். இதனால் சமூக வலைத்தளங்களுக்கு மீண்டும் வேலை வைத்தார் ட்ரம்ப். தேர்தல் நடத்தப்பட்டதில் முறைகேடு இருக்கிறது என்று பதிவுகளிட ஆரம்பித்தார். அனைத்திற்கும் எச்சரிக்கைகளை இணைத்து வருகிறது ஃபேஸ்புக். ட்விட்டர் இந்த ட்வீட்களை அனைத்தையும் மறைத்து வருகிறது.
இந்த ட்வீட்களை பார்த்து ஜனநாயக கட்சியினர் சிலர் வாக்கு எண்ணிக்கை முடியும் வரை ட்ரம்ப் கணக்கை மொத்தமாக முடக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்திருக்கின்றனர்.
Right now, the President's Twitter account is posting lies and misinformation at a breathtaking clip. It is a threat to our democracy and should be suspended until all the votes are counted.
— David Cicilline (@davidcicilline) November 4, 2020
தபால் வாக்குகள் தாமதமாக எண்ணப்படுவதை காரணமாகக் கூறி தேர்தல் முடிவுகளை மொத்தமாக ஏற்றுக்கொள்ளமலேயே ட்ரம்ப் இருக்க வாய்ப்பிருப்பதாக முன்பே அரசியல் ஆர்வலர்கள் கணித்திருந்தனர். அதுதான் இப்போது அப்படியே நடந்துகொண்டிருக்கிறது. 'இரவோடு இரவாகத் தபால் வாக்குகள் எனப் பெரும்பான்மையை மாற்றப்பார்க்கிறது பைடன் தரப்பு' என்ற பிம்பத்தை உருவாக்கி அதை வைத்து கலகம் செய்வதில் தெளிவாக இருக்கிறார் ட்ரம்ப். ஆனால், சமூக வலைதளங்கள் இந்த சித்து வேலைக்குத் துணைபோக முடியாது என நிலையாக நிற்கின்றன.
இதே அளவு ஸ்ட்ரிக்ட் ஆஃபிஸராக மற்ற ஊர் தேர்தல்களிலும் சமூக வலைதளங்கள் நடந்துகொண்டால் நன்றாக இருக்கும்!
source https://www.vikatan.com/technology/tech-news/what-steps-have-facebook-twitter-taken-to-limit-the-presidents-atrocious-election-claims
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக