Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

IPL 2020: தவான், ஹெட்மையர் அதிரடி; வில்லியம்சன், சமத் போராட்டம் வீண்... பைனலில் டெல்லி! #DCvSRH

கடைசியாய் விளையாடிய 6 போட்டிகளில், ஒன்றில்தான் தோற்றிருக்கிறோம். உங்களுக்குத்தான் இது முதல் நாக்அவுட் கேம்... எங்களுக்கோ கடைசியாக விளையாடிய நாலு ஐந்து போட்டிகளுமே நாக்அவுட்தான் என்ற இறுமாப்பில் சன்ரைசரஸ் களம் காண, ஆறில் ஒன்றில்தான் வென்றிருக்கிறோம் என கொஞ்சம் பயத்தோடும் நம்பிக்கையின்மையுடனும்தான் டெல்லி களமிறங்கியது.

ஆனால் முதல்பாதி ஆட்டம் முடிந்தபின் ஹெட்மையர் கூறியதைப்போல ஒவ்வொரு சவாலும் வாய்ப்புதான் என்று இந்தச் சவாலையும் வாய்ப்பாய் எடுத்துக் கொண்டது டெல்லி. சன்ரைசர்ஸுக்கு மரண அடி கொடுத்து, ஐபிஎல் வரலாற்றில் முதன்முறையாக, இறுதிப் போட்டிக்குள் கம்பீரமாய் முன்னேறி இருக்கிறது.

டாஸ் வெல்லும் அணி, பௌலிங்கைத் தேர்ந்தெடுக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டெல்லியோ, பேட்டிங்கைத் தேர்ந்தெடுக்க, தவறு செய்து விட்டார்களோ என்றே எண்ணத் தோன்றியது. இந்தத் தொடரில் 73 விழுக்காடு போட்டிகளில் டாஸ் வென்ற வார்னருக்கோ, டெல்லி சேஸிங் செய்ய சொன்னதால், அப்போதே பாதிப் போட்டியை வென்றுவிட்டதாக திருப்தி வந்துவிட்டது.

#DCvSRH

டெல்லியின் சார்பில் தொடர்ந்து கெஸ்ட் ரோல் செய்து கொண்டிருந்த பிரித்வி ஷாவுக்குப் பதில், ஹெட்மையர் சேர்க்கப்பட்டிருந்தார். ஓப்பனிங்காக தவானுடன் ரஹானே இறங்குவார் என எதிர்பார்க்கப்பட, 'வி ஹேவ் அதர் பிளான்ஸ்' என்பதைப் போல, ஸ்டோய்னிஸ் உள்ளே இறங்கினார். டெத் ஓவர்களை கவனிக்க வேண்டிய ஸ்டோய்னிஸ் ஓப்பனிங்கில் இறக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழ, 'மிக பலமிழந்து காணப்பட்ட டெல்லியின் ஓப்பனிங் ஸ்பாட்டுக்கு வலு சேர்க்கத்தான்!' என்பதைப்போல, சந்தித்த ஒவ்வொரு பந்துகளையும் ரன்களாக மாற்றிக் காட்டினார். ஸ்டோய்னிஸ் அடித்த பந்தை மூன்றாவது ஓவரில் ஹோல்ட் செய்யாமல் நழுவ விட்ட ஹோல்டர், டெல்லிக்கு இரண்டாம் வாய்ப்பைக் கொடுத்தார். அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் போட்டியே மாறிப் போய் இருந்திருக்கலாம். அவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்தக் கூட்டணி, திசைக்கொன்றாய் பந்துகளை பறக்கவிட்டு, ரன் ரேட்டை மளமளவென உயர்த்தியது.

ஹோல்டரின் பந்து அடிவாங்குகிறது என வார்னர், நதீம், நடராஜன், ரஷித் என ஒவ்வொருவராய்க் கொண்டு வர 'யார் வந்தாலும் அடிப்போம்!' என இந்தக் கூட்டணி அனைவரையும் நையப்புடைக்க, ரன் ரேட் பத்துக்கு மேல் எகிற, கூடவே சன்ரைசர்ஸ் ரசிகர்களின் ரத்த அழுத்தமும் ஏறிக் கொண்டிருந்தது. ரன் ரேட்டைக் குறைக்க பௌலர்கள் முயன்றும் அது பலிக்கவில்லை. இதற்கும்மேல், ஃபீல்டிங்கிலோ வழக்கமான சன்ரைசர்ஸை இன்று பார்க்கவே முடியவில்லை. ஓவர் த்ரோ, மிஸ் ஃபீல்ட் என ரன்களை, வள்ளல்களாய் வாரி வழங்கிக் கொண்டிருந்தனர்.

#DCvSRH

'இதற்குமேல் நான்தான் பால் போடனும் போல!' என வார்னர் நொந்த நேரம், 27 பந்துகளில் 38 ரன்களை எடுத்திருந்த ஸ்டோய்னிஸ், ரஷித் பந்தில் ஆட்டமிழக்க, ரசிகர்கள் 'போன உசிரு வந்திடுச்சு' என பாடாத குறைதான். அடுத்து உள்ளே வந்த ஸ்ரேயாஸ், அடுத்த ஐந்து ஓவருக்கு, தவானுக்கு சப்போர்டிங் ரோல் செய்து விட்டு, தன் பங்கிற்கு 20 ரன்களுடன் ஹோல்டர் பந்தில் நடையைக் கட்ட, தவானோ, 'யார் வந்தால் என்ன, யார் போனால் என்ன, என் பணி ரன் அடித்துக் கிடப்பதே!' என்பதைப் போல, இன்னொரு பக்கம் அரைசதத்தைக் கடந்தார். அப்போதும் கொலைப்பசி அடங்காமல் ரன்களைக் குவித்துக் கொண்டே இருந்தார். ஹெட்மையரும் ஒருபக்கம் அதிரடி காட்ட, இந்த மைதானத்தின் முதலில் பேட்டிங் செய்யும் அணியின் சராசரியான, 163 என்பதை, பேக் டூ பேக் இரண்டு பவுண்டரியுடன் 17.2 ஓவரிலேயே டெல்லி கடக்க, மிச்சம் இருக்கும் பந்துகளில், 200 கடினமல்ல என்ற தோற்றமே உருவானது.

இந்த பார்ட்னர்ஷிப்பை உடைக்க வார்னர் செய்த மந்திரமாயம், எதுவும் எடுபடாமல் போக, 27 பந்துகளில் 50 ரன்களைக் கடந்தது இந்தக் கூட்டணி. 18வது ஓவரில், 18 ரன்களைக் குவித்த இவர்கள், சன்ரைசர்ஸ் சாம்ராஜ்யத்தை ஒட்டுமொத்தமாக சரிய வைத்தனர். 19வது ஓவரில், தவான் கொடுத்த ஈஸி கேட்சை வேறு ரஷித் தவறவிட்டார். இவர்களை நம்பிப் பலனில்லை என்பதைப் போல அதே ஓவரில், 50 பந்துகளில் 78 ரன்களைக் குவித்த தவானை எல்பிடபிள்யூ மூலமாக வெளியேற்றினார் சந்தீப்.

மொத்தப் போட்டியிலும் பௌலிங்கிலும் சொதப்பிய சன்ரைசர்ஸ், கடைசியில்தான் கம்பேக் கொடுத்தது. இறுதி இரண்டு ஓவர்களில் வெறும் 13 ரன்களை மட்டுமே கொடுத்து, 200+ போகும் என எதிர்பார்க்கப்பட்ட ஸ்கோரை நடராஜனின் கடைசிநேர யார்க்கர்கள் 189 என்பதற்குள் கொண்டு வந்து நிறுத்தியது.

#DCvSRH

ஸ்டோய்னிஸ், தவான், ஹெட்மையர் என மூவருடைய கேட்சுகளை விட்ட சன்ரைசர்ஸ் அப்பொழுதே இறுதிப் போட்டிக்கு டெல்லியை அனுப்பி வைத்துவிட்டது எனலாம். மறுபக்கம் கடைசிப் போட்டியில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்ட ஹெட்மையரோ ஹார்ட் ஹிட்டராக, 22 பந்துகளில் 42 ரன்களைக் குவித்து ஒருவேளை மும்பைக்கு எதிரான போட்டியில் இவர் இருந்திருந்தால், இந்நேரம் இறுதிப் போட்டிக்கு டெல்லி போய் இருக்குமோ என்ற தோற்றத்தை உண்டாக்கி விட்டார்.

இந்த 2020 ஐபிஎல் சீசனில், இதுவரை இரண்டே முறை மட்டுமே அணிகள் 190 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்கோரை சேஸ் செய்துள்ளனர். அதுவும் நாக்அவுட் போட்டியில், 190 என்பது கடின இலக்கு என்றாலும், தொடர்ந்து வெற்றிமுகம் காட்டிவரும் சன்ரைசர்ஸ் அதே மொமண்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் என்ற எதிர்பார்ப்பே உண்டானது. அதை மெய்ப்பிக்கும் விதமாக முதல் ஓவரில் 12 ரன்களை சன்ரைசர்ஸ் குவிக்க, ரசிகர்கள் நிமிர்ந்து உட்கார்ந்தனர். ஆனால், அடுத்த ஓவரிலேயே ரபாடாவின் பந்தில் வார்னர் போல்ட் ஆக, தொங்கிப் போனது ரசிகர்களின் தலைகள்! ரபாடா வார்னரின் விக்கெட்டை எடுக்கவில்லை போட்டியை வென்றெடுத்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதற்கடுத்து உள்ளே வந்த மனீஷ், கார்க்குடன் இணைந்து பந்துகளைச் சிதறடித்து ரன்களைக் குவித்தார். 4.3 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தது இந்த ஜோடி! ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கிய தருணத்தில் பேட்டிங்கில் அதிரடி காட்டிய ஸ்டார் ஸ்டோய்னிஸ், 'பௌலிங்கிலும் நான் பலவான்தான்' என கார்க்கையும் மனீஷையும் வெளியேற்றி வெறித்தனம் காட்டினார். இக்கட்டான இந்த நிலையில், போன போட்டியில் சன்ரைசர்ஸை வெல்ல வைத்த அதே கேன் வில்லியம்சன் - ஹோல்டர் கூட்டணி மறுபடியும் கைகோத்தது. முதலில் நிதானமாக ரன் சேர்த்த இந்தக் கூட்டணி, அதன்பின் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம், பவுண்டரி சிக்ஸர் என எடுத்து 34 பந்துகளில் 46 ரன்களைக் குவித்தது.

#DCvSRH

அபாயகரமான இந்தக் கூட்டணி உடைக்க முடியாமல் போனால், கோப்பைக் கனவைக் கலைத்துவிட வேண்டியதுதான். இதை உணர்ந்து ஸ்ரேயாஸ் பெருமூச்சு விட்ட நேரம், தன்னுடைய இரண்டாவது ஸ்பெல்லை வீச வந்த அக்ஸர், ஹோல்டரை அனுப்பி வைத்து, அதை நிம்மதிப் பெருமூச்சாக மாற்றினார். இங்கேயே போட்டி, மொத்தமாய் முடிந்து விட்டதாய் காட்சிப்பிழை உருவானாலும், சைலன்ட் கில்லர், வில்லியம்சன் இருக்கும் காரணத்தால் போட்டி மதில் மேல் பூனையாய்த் தொடர்ந்தது. ஆன்க்கர் ரோலைச் செய்து கொண்டிருந்த கேனுடன் கைகோத்த சமத், அவருக்குப் பக்கபலமாய் ஒரு கேமியோ இன்னிங்ஸை ஆட ஆரம்பிக்க, பரபரப்பு பற்றி எரிந்தது. 26 பந்துகளில் 49 ரன்கள் குவித்திருந்த இந்தக் கூட்டணி, கடைசி 4 ஓவர்களில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்குக் கொண்டு சென்றது. ஒரு பக்கம் வில்லியம்சன் சிக்ஸர்களும் பவுண்டரிகளும் அடிக்க மறுபக்கம் சமத், நார்க்கியா ஒவரில் சிக்ஸர், பவுண்டரிகள் என அடித்து டெல்லியின் பிபியை எகிற செய்தார்கள். எங்கே போட்டி நம் கைநழுவி போய்விடுமோ என்று பயந்தேவிட்டார்கள் என கூறலாம்.

Also Read: ஈ சாலா இல்லை... அடுத்த சாலா கப் நம்தே... பெங்களூரு பார்சல் ஆன கதை! #SRHvRCB

டெல்லிக்கு வில்லனாய் வில்லியம்சன் மறுபடியும் ஒரு நெய்ல் பைட்டிங் மேட்சாக இதைக் கொண்டு போகப் போகிறார் என்று எதிர்பார்த்த தருணத்தில், ஸ்டோய்னிஸின் பந்தில, 67 ரன்களில் அவரும் ஆட்டமிழக்க, போட்டி அங்கேயே முடிந்து போனது. அடுத்து உள்ளே வந்த ரஷித், சமத்துடன் சேர்ந்து அணியை மீட்க எடுத்த முயற்சியை ரணகள ரபாடா முறியடித்தார். அடுத்தடுத்த பந்துகளில் இருவரையும் அனுப்பி, அதே ஓவரில், கோஸ்வாமியையும் 'கோ சாமி' என அனுப்பி வைத்தார். கடைசி ஓவர் வெறும் சம்பிரதாயத்துக்கான ஓவராய் மாறியது. இறுதியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி வென்றது‌.

#DCvSRH

நான்கு நாடுகளின் கேப்டன்களாக இருந்த வீரர்களின் அனுபவம் கைகொடுக்க, கடந்த சில போட்டிகளாய் விஸ்வரூபம் காட்டி பல அணிகளுக்கு டஃப் பைட் கொடுத்த சன்ரைசர்ஸ், இந்தப் போட்டியிலும் முடிந்த அளவு போராடித்தான் தோற்றுள்ளது. கடந்த சில போட்டிகளாய் சொதப்பி வந்த டெல்லியோ, சும்மா ஒன்றும் நாங்கள் டாப் 2-வில் முடிக்கவில்லை என தக்க நேரத்தில் நிரூபித்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது‌‌. இதுவரை இந்த 2020 ஐபிஎல் தொடரில் மும்பையும் டெல்லியும் மோதிக் கொண்ட மூன்று போட்டிகளிலும் மும்பையே வென்றுள்ளது.

எனினும், முதல் முறையாய் ஃபைனலுக்குள் நுழைந்து கோப்பையைத் தூக்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பை அவ்வளவு சுலபமாய் டெல்லியும் விட்டுவிடாது என உறுதியாய் நம்பலாம்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-delhi-capitals-beats-sunrisers-hyderabad-in-qualifier-2-to-reach-the-finals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக