Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

கரூர்: `கலெக்டர் மீது கோர்ட்டில் வழக்கு தொடுப்போம்!' - கொதிக்கும் செந்தில் பாலாஜி

"கரூர் தொகுதியில் உள்ள தி.மு.க வாக்காளர்கள் 25,000 பேரை நீக்க ஆளுங்கட்சியினர் நூதனமாக முயற்சி பண்றாங்க. அதற்கு, மாவட்ட ஆட்சியர் துணைபோகிறார். கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்புக்கு வந்த பத்து நாள்களுக்குள்ளேயே ஆளுங்கட்சிக்கு சார்பாக நடக்கும் கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி மீது, கோர்ட்டில் வழக்கு தொடுக்க இருக்கிறோம்" என்று சொல்கிறார், செந்தில் பாலாஜி.

வாக்காளர் பட்டியலை காண்பிக்கும் செந்தில் பாலாஜி

இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி,

"கரூரில் உள்ள 1,031 பூத்களிலும் ஆளுங்கட்சியினர், தி.மு.க வாக்காளர்களை சம்பந்தப்பட்ட தொகுதியைவிட்டு நீக்க முயற்சி பண்றாங்க. கரூர் தொகுதியில் உள்ள ஒரு பூத்தில் மட்டும் 207 தி.மு.க சார்புள்ள வாக்காளர்களை நீக்க முயற்சி பண்றாங்க. அந்த பூத்தில் நிரந்தர முகவரிகளில், சொந்த வீடுகளில் பல வருடங்களாக குடியிருக்கும், உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கும் அவர்களை நீக்குவதற்காக, வாக்காளர் பட்டியலில் தொடர் எண்ணை குறியிட்டு, மாவட்ட ஆட்சியர் மலர்விழிக்கு ஆளுங்கட்சியினர் பட்டியல் வழங்கியிருக்கிறார்கள்.

Also Read: கரூர்:`4 தொகுதி; 50,000 வாக்குகள் வித்தியாசம்!' - அ.தி.மு.க-வுக்கு செந்தில் பாலாஜி சவால்

அதை கலெக்டர், பூத் லெவல் அலுவலர்களிடம் கொடுத்து, ஃபார்ம் 7 ஏ படிவத்தை பூர்த்திசெய்து, அவர்களை நீக்கும்படி சொல்லி உத்தரவிட்டுள்ளார். அதில் சில அலுவலர்கள், `இப்படி செய்தால் பிரச்னை வருமே மேடம்?'னு கேட்டிருக்காங்க. ஆனால், 'உத்தரவு போடுற நான் மாவட்ட ஆட்சியர். நான்தான் மாவட்டத் தேர்தல் அதிகாரி. நான் போடுற உத்தரவை செயல்படுத்துங்க' என்று சொல்லியுள்ளார்.

பேட்டியளிக்கும் செந்தில் பாலாஜி

தி.மு.க வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளராக இருக்கிற மணிராஜன், 45 வருஷமாக ஒரே முகவரியில் வசிக்கிறார். மூன்றுமுறை கரூர் நகர்மன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவர் பெயரை நீக்கச் சொல்லி, வாக்காளர் பட்டியலில் ரவுண்ட் போட்டுள்ளார்கள் ஆளுங்கட்சியினர். இப்படி கரூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள தி.மு.க வாக்காளர்களை நீக்க முனைப்பு காட்டுறாங்க. அதற்கு, மாவட்ட ஆட்சியரே ஆளுங்கட்சிக்கு சார்பாக செயல்பட களத்தில் இறங்கியுள்ளது, வியப்பாகவும், விநோதமாகவும் இருக்கிறது. மலர்விழி, கரூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று பத்து நாள்தான் ஆகிறது. அவரிடம், கொஞ்ச நாள்வரையாவது நேர்மையை எதிர்பார்த்தேன். ஆனால், அவரின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, ஆளுங்கட்சிக்கு சார்பாக வரும் தேர்தலில் பணியாற்ற வந்தமாதிரி தெரிகிறது.

தி.மு.க வாக்காளர்களை நீக்க முயற்சிக்கும் அ.தி.மு.க-வினரின் இந்த செயல், தமிழகத் தேர்தல் வரலாற்றில் புதுமையாக இருக்கிறது. புதிதாக வாக்காளர் பட்டிலில் சேர நினைப்பவர்கள், முகவரி மாறுபவர்கள், இறந்துபோனவர்களை பட்டியலில் இருந்து நீக்கக் கோருபவர்கள் என எல்லாவற்றையும் சம்பந்தப்பட்ட வாக்காளர்கள் அல்லது வாக்காளர்களின் உறவினர்கள்தான் செய்வாங்க. அவங்கதான், அதற்குரிய 6, 7 ஏ உள்ளிட்ட படிவங்களை பூர்த்திசெய்து, அலுவலர்களிடம் கொடுப்பாங்க. பூத் லெவல் அலுவலர்கள், அந்த படிவங்களை வைத்து, நேரடியாக வந்து ஆய்வுசெய்து, சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் பிரச்னையைத் தீர்ப்பாங்க. ஆனால், அ.தி.மு.க-வினர் எடுத்த லிஸ்ட்டை, கலெக்டர் அலுவலர்களிடம் கொடுத்து, அவர்களை வைத்து நீக்கச் சொல்கிறார்.

செந்தில் பாலாஜி

கரூர் சட்டமன்றத் தொகுதியில் மட்டும், தி.மு.கவுக்கு சார்பான 25,000 வாக்காளர்களை நீக்குவதுதான் அவர்களின் இலக்கு. அதேநேரம், வேறு தொகுதிகளைச் சேர்ந்த 10,000 அ.தி.மு.க வாக்காளர்களை கரூர் சட்டமன்றத் தொகுதியில் சேர்க்க நினைக்கிறார்கள். வேறு பகுதிகளில் இருந்து, கரூரில் உள்ள ஒரு கம்பெனி ஒன்றில் பணிபுரியும் 20 பேர்களை, அந்த கம்பெனி முகவரியை வைத்து, கரூர் வாக்காளர்களாக சேர்த்திருக்கிறார்கள். ஆனால், அ.தி.மு.க-வினரின் இந்த முயற்சியை நாங்கள் செயல்படுத்தவிடமாட்டோம்.

Also Read: கரூர்: `தி.மு.க பிரமுகர் இறப்புக்கு காரணம் போலீஸ்தான்!’ - செந்தில் பாலாஜி ஆவேசம்

ஏற்கெனவே, கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் அப்போதைய கலெக்டர் அன்பழகன், அ.தி.மு.கவுக்கு சார்பாக நடந்துகொண்டு, 'தேர்தலை நிறுத்துவேன்' என்று ஜோதிமணியிடம் சவால்விட்டார். ஆனால், அத்தனை தடைகளையும் மீறிதான், தி.மு.க கூட்டணியில் ஜோதிமணியை 4.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்கவைத்தோம். அதனால், வரும் தேர்தலில், அ.தி.மு.க, என்ன பித்தலாட்டம் பண்ணினாலும், தி.மு.க கூட்டணிதான் 234 தொகுதிகளிலும் ஜெயிக்கப்போகிறது. கரூரில் உள்ள நான்கு தொகுதிகளிலும், தி.மு.க-தான் ஜெயிக்கும். தளபதி ஸ்டாலினை மக்கள் முதல்வராக்க முடிவுசெய்துவிட்டார்கள். வேண்டுமானால், கரூரில் உள்ள மொத்த வாக்காளர்களையும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினால், அ.தி.மு.க நினைப்பு ஈடேற வாய்ப்புள்ளது.

வாக்காளர் பட்டியலை காண்பிக்கும் செந்தில் பாலாஜி

இப்படி, முறைகேடு செய்ய முயலும் அ.தி.மு.கவினர் மீதும், கலெக்டர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். ஆளும் அடிமை எடப்பாடி அரசாங்கம், தேர்தலில் மக்களை சந்திக்க அஞ்சி, இப்படி குறுக்கு வழியைத் தேடுகிறது. அதற்கு, ஒரு மாவட்ட ஆட்சியரே உடந்தையாக இருக்கிறார். அ.தி.மு.கவுக்கு, வரும் தேர்தல்தான் இறுதித் தேர்தல். போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுத்து, அவர்களை வைத்து, கரூர் தொகுதியில் உள்ள தி.மு.க வாக்காளர்களை இனம்கண்டு, இப்படி அவர்களை நீக்கி, வேறு தொகுதிகளில் அவர்களின் பெயர்களைச் சேர்க்க முயற்சி பன்றாங்க. இதை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்" என்றார் ஆவேசமாக!



source https://www.vikatan.com/government-and-politics/controversy/will-file-a-case-against-karur-collector-says-dmk-mla-senthil-balaji

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக