முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தார். சுவாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் நரேந்திர மோடியை நாடு முழுவதும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதற்கு நவீன எடுத்துக்காட்டாக பீகார் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கின்றன. பீகார் மாநிலத்தில் ஏற்கெனவே வெற்றியைக் கொடுத்திருக்கும் நிலையில், தற்போது சாதனை வெற்றியைக் கொடுத்திருக்கிறார்கள் அம்மாநில மக்கள்.
தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் அழகிரி, முருகப் பெருமானின் வேலாயுதத்தை `ஒரு கொடும் ஆயுதம்’ எனக் கொச்சையான முறையில் சொல்லியிருக்கிறார். இது ஏற்றுக்கொள்ள முடியாதது. முருகப்பெருமானின் ஆயுதம் என்பது வணங்கத்தக்கது; போற்றத்தக்கது. அதர்மத்தை அழிப்பதற்காக மட்டும் பயன்படுத்தப்பட்ட ஓர் ஆயுதம். காங்கிரஸ் கட்சி அதைப் பார்த்து பயப்படுகிறது. அசுரன் செய்த அத்தனை அநியாயங்களுக்கும், காங்கிரஸுக்கும் சம்பந்தம் இருக்கின்றன என அவர்கள் ஒப்புக்கொண்டதாகவே அர்த்தம். அசுரனுக்குத்தான் அது கொடிய ஆயுதமாக தெரிந்திருக்கிறது.
Also Read: `அ.தி.மு.க தலைமையின் கீழ், எங்கள் கூட்டணி!’ - பொன்.ராதாகிருஷ்ணன்
இன்று காங்கிரஸுக்கு அந்த ஆயுதம் கொடுமையாகத் தெரிகிறது என்றால், அவ்வளவு கொடுமைகளுக்கும் அவர்கள் சொந்தகாரர்களாக இருக்கிறார்கள். வேலாயுதம் குறித்து தவறான கருத்தைச் சொன்னதற்காக பகிரங்க மன்னிப்பை அழகிரி கேட்க வேண்டும். வேல் யாத்திரை சம்பந்தமாக கோர்ட்டில் வழக்கு விசாரணை 2-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. எங்களின் வேல் யாத்திரை தொடரும். அடுத்த மாதம் 6-ம் தேதி யாத்திரை திருச்செந்தூரில் நிறைவு பெறும். அந்த யாத்திரை நிறைவு பெறும்போது சூரர்களை ஒழித்த முருகனுடைய தன்மைக்குத் தக்கப்படி இந்த யாத்திரை வெற்றிகரமாக மத தீயசக்திகளை ஒழித்து வெற்றிக்கொடி நாட்டும்.
வேல் யாத்திரை குறித்து யாருடைய கருத்தையும் நாங்கள் கேட்கவில்லை. ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமும் இல்லை. நாங்கள் ஆலோசனை கேட்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பதும் தவறு. பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகின்றன. எல்லோருக்கும் முகத்தில் ஒரு வாய் இருக்கும் என்று சொல்லுவார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு முகத்தில் ஒரு வாய், பிடரியில் ஒரு வாய். பொதுவாக இரட்டை நாக்கு என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு இரட்டை வாய்” என்றார்.
source https://www.vikatan.com/news/politics/bjps-pon-radhakrishnan-slams-congress-leader-ks-alagiri-over-vel-comment
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக