Ad

வெள்ளி, 20 நவம்பர், 2020

நாட்டிலேயே முதன்முறையாக பசு அமைச்சரவை... பால் விற்பனை - சிவராஜ் சிங் சௌகானின் அடுத்த திட்டம்!

மாட்டிறைச்சி வைத்திருப்பதாகச் சொல்லி ஒருவரைக் கொலை செய்வது, பசுவைக் கடத்துவதாகக் கூறி கொலைவெறித் தாக்குதல் நடத்துவது போன்ற வன்முறைகள் தற்போது தணிந்திருந்தபோதிலும், பசுவின் பெயரால் நடைபெறும் அரசியல் தொடர்ந்துகொண்டிருக்கிறது. உலகில் அதிக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் தொடர்ந்து முன்னணியில் இருக்குறது இந்தியா. அதேநேரத்தில், பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், பசுப் பாதுகாப்புக்கான திட்டங்களிலும் ஆட்சியாளர்கள் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

யோகி ஆதித்ய நாத்

உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பா.ஜ.க அரசு, பசுக்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகிறது. அதன்படி, உரிமையாளர்களால் கைவிடப்பட்டு பொது இடங்களில் சுற்றித்திரியும் பசுக்களைத் தத்தெடுத்து வளர்ப்பதற்கான ஒரு திட்டத்தைக் கடந்த ஆண்டு யோகி அரசு அறிவித்தது. கைவிடப்பட்ட பசுக்களை ஆர்வமுள்ள யாரும் தத்தெடுத்து பராமரிக்கலாம். அப்படிப் பசுக்களைத் தத்தெடுத்து பராமரிப்பவர்களுக்கு அரசு சார்பில் ஒரு தொகை வழங்கப்படும். ஒரு பசுவுக்கு மாதம் ரூ.900 என்ற வீதத்தில் அந்தத் தொகை வழங்கப்படும். கைவிடப்பட்ட பசுக்களைப் பாதுகாப்பது, அதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவது என்பது இந்தத் திட்டத்தின் நோக்கம்.

கடந்த ஆண்டு இந்தத் திட்டம் பற்றிய அறிவிப்பை யோகி ஆதித்ய நாத் வெளியிட்டார். அப்போது, `மூன்று மாதங்களில் ஒரு லட்சம் பசுக்கள் தத்தெடுக்கப்படும்’ என்று அவர் கூறினார். இந்தத் திட்டம் குறித்து மக்கள் மத்தியில் தீவிர பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. `பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகப் பணம் செலுத்தப்படும்’ என்றும் சொல்லப்பட்டது. இந்தத் திட்டத்தின் செயல்பாடுகளை உ.பி அரசின் தலைமைச்செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளே கண்காணித்துவந்தனர்.

பசுக்கள்

அரசு பணம் தருகிறது என்பதால், ஆரம்பத்தில் சிலர் ஆர்வம்காட்டினர். ஆனால், நாளடைவில் இதன் மீதான ஆர்வம் குறைந்துவிட்டது. `மூன்று மாதங்களில் ஒரு லட்சம் பசுக்கள் தத்தெடுக்கப்படும்’ என்று யோகி சொன்னது நடக்கவில்லை. `இதுவரை 9,000 - 10,000 பசுக்களே தத்தெடுக்கப்பட்டிருக்கின்றன’ என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தத் திட்டம் எதிர்பார்த்த அளவுக்குப் பலன் தராததால், மாற்றுத் திட்டம் குறித்து யோகி அரசு ஆலோசித்துவருவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இந்தநிலையில், பசுக்களைப் பாதுகாப்பதற்காக `பசு அமைச்சகம்’ ஏற்படுத்தப்போவதாக மத்தியப் பிரதேச அரசு அறிவித்திருக்கிறது. நடைபெறக்கூடிய சட்டமன்றக் கூட்டத்தில், `லவ் ஜிகாத்’துக்கு எதிராகச் சட்ட மசோதா கொண்டுவரப்படும் என்று அறிவித்த மத்தியப் பிரதேச அரசு, அதற்கு அடுத்ததாக பசு அமைச்சரவை பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. பசு அமைச்சரவை என்பது நாட்டிலேயே இதுதான் முதன்முறை. இது தொடர்பான அறிவிப்பை மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தன் ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார். கால்நடைத்துறை, விவசாயிகள் நலன், வனம், பஞ்சாயத்து - கிராமப்புற மேம்பாடு, உள்துறை, வருவாய்த்துறை ஆகிய ஆறு துறைகளை பசு அமைச்சரவை உள்ளடக்கியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சிவராஜ் சிங் சௌகான்

பசு அமைச்சரவையின் முதல் கூட்டம், அகர் மால்வா மாவட்டத்திலுள்ள பசு சரணாலயத்தில் இந்த மாதம் 22-ம் தேதி நடைபெறும் என்று முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்திருக்கிறார். அந்தக் கூட்டத்தில் முதல்வரும் கலந்துகொள்கிறார். அவர் தவிர, உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, வனத்துறை அமைச்சர் விஜய் ஷா, வேளாண் அமைச்சர் கமல் படேல், பஞ்சாயத்து மற்றும் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா, கால்நடைகள் துறை அமைச்சர் பிரேம் சிங் படேல் ஆகியோரும் பங்கேற்கவிருக்கிறார்கள்.

பசு அமைச்சரவையில் எடுக்கப்படும் முடிவுகளை இந்த ஆறு துறைகளும் கூட்டாகச் செயல்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பசும் பால் விற்பனை, சாணத்திலிருந்து வறட்டி தயாரித்தல் ஆகியவற்றின் மூலம் வருவாயை உருவாக்கவும் அரசு திட்டமிட்டிருக்கிறது. பசு அமைச்சரவை தொடர்பான பா.ஜ.க அரசின் அறிவிப்பை விமர்சித்திருக்கும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல் நாத், `சிவராஜ் சிங் சௌகானின் முந்தைய 15 ஆண்டுக்கால ஆட்சி எப்படியிருந்தது, தற்போது, கடந்த எட்டு மாதகால ஆட்சி எப்படியிருக்கிறது என்பதெல்லாம் அனைவருக்கும் தெரியும்’ என்று சாடியிருக்கிறார்.

கும்பல் தாக்குதல் பற்றிய சித்திரம்

பா.ஜ.க ஆளும் மாநிலங்களில், பசுக்களைப் பாதுகாப்பதற்காக நடவடிக்கைகளை எடுத்துவரும் வேளையில், மாட்டிறைச்சி ஏற்றுமதியில் கொடிகட்டிப் பறக்கிறது இந்தியா. மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கும்பலாகச் சேர்ந்து ஒருவரைத் தாக்கிக் கொலை செய்வது, விற்பனைக்காக அடிமாடுகளை வாகனங்களில் ஏற்றிச் செல்பவர்களைக் கும்பலாகச் சேர்ந்து தாக்குவது போன்ற வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் அதிக அளவில் நடைபெற்றன. இதனால், மாட்டிறைச்சியின் ஏற்றுமதி பாதிக்கப்படவில்லை.

Also Read: அமேஸான், நெட்ஃபிளிக்ஸ் போன்ற ஓடிடி தளங்களுக்குக் கட்டுப்பாடு அவசியமா?

உலக அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா முன்னிலை வகித்துவருகிறது. 2014-ம் ஆண்டு முதன்முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற நேரத்தில், மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்ததாக மத்திய அரசின் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. 2014-15 நிதியாண்டில் இந்தியாவிலிருந்து 14,75,540 மெட்ரிக் டன் அளவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. பத்தாண்டுகால ஏற்றுமதியில் இது மிக அதிகம்.

அடுத்த நிதியாண்டில் 13,14,161 மெட்ரிக் டன்னாக மாட்டிறைச்சி ஏற்றுமதி குறைந்தது. அதற்கு முன்னதாக, உ.பி-யில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாக, அக்லக் என்ற இஸ்லாமியரை வீடு புகுந்து ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது. `அக்லக் வீட்டில் இருந்தது மாட்டிறைச்சி அல்ல' என்பது பின்னாளில் ஆய்வில் தெரியவந்தது. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் அப்போது ஏற்பட்ட லேசான சரிவு, அக்லக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது.

மாட்டிறைச்சி

ஆனால், அக்லக் கொலைக்குப் பிறகு பல மாநிலங்களில் கும்பல் தாக்குதல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்றன. 2015-ம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம்வரை 44 பேர் கும்பல் கொலை செய்யப்பட்டதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) என்ற அமைப்பு ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த மூன்று ஆண்டுகளில் நடைபெற்ற இத்தகைய கும்பல் தாக்குதல்களில் 280 பேர் காயமடைந்தனர் என்றும் அந்த அறிக்கை கூறியது. ஆனாலும், இந்தக் காலகட்டத்தில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக புள்ளிவிரங்கள் தெரிவிக்கின்றன. 2017-18 நிதியாண்டில் 13,48,225 மெட்ரிக் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. வரும் ஆண்டுகளில் இந்தியாவின் மாட்டிறைச்சி ஏற்றுமதி ஏறுமுகமாகவே இருக்கும் என்பது ஏற்றுமதியாளர்களின் கணிப்பு. மாட்டிறைச்சி என்றால், பெரும்பாலும் எருமை மாட்டின் இறைச்சி என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/cow-protection-schemes-in-bjp-ruling-states-and-increasing-beef-exports

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக