Ad

ஞாயிறு, 22 நவம்பர், 2020

`டெக்னாலஜியும், தெய்வீகமும் சேர்ந்த அனுபவம் அது!' - மூக்குத்தி அம்மன் பாடல் குறித்து அருணா சாய்ராம்

கர்நாடக சங்கீத உலகில் மரியாதையின் உச்சத்தில் இருப்பவர் பத்மஸ்ரீ அருணா சாய்ராம். அதே நேரம் `மாடு மேய்க்கும் கண்ணே’ என சாமான்ய நெட்டிசன்களின் காதுகளையும் ரசிக்க வைத்தவர். இப்போது `மூக்குத்தி அம்மன்’ மூலம் முதன்முறையாகத் திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறார். `ஐகிரி நந்தினி’ பாடலை அருணா சாய்ராம் `ஜகதோம் தகுதிகு ஜகதோம்’ என அவருடைய கணீர் குரலில் பாட ஆரம்பிக்கும்போதே, உடலில் இருக்கிற ரோமக்கால்கள் சிலிர்த்தெழ ஆரம்பிக்கின்றன.

மூக்குத்தி அம்மன்

அந்தளவுக்கு அருணாவின் குரல் தெய்வீக உணர்வை நமக்குள் கடத்திவிடுகிறது. `இந்தப் பாடலை ஹெட்செட்டில் கேட்டுப் பாருங்கள். வாட் எ டிவைன் ஃபீலிங்’ என்று நெட்டிசன்களும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது லண்டனில் தன்னுடைய மகள் வீட்டில் இருக்கிற அருணா சாய்ராமை வாட்ஸ்அப் காலில் தொடர்பு கொண்டோம்.

`` `மூக்குத்தி அம்மன்' படத்தோட மியூசிக் டைரக்டர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன், லால்குடி ஜெயராமனுடைய சிஷ்யர். அந்த வகையில அவர் மேலே எனக்கு மரியாதை உண்டு. அவர்தான் படத்தோட பேரைச் சொல்லி, `இந்தப் படத்துல நீங்க ஒரு பாட்டு பாடணும். அந்தப் பாட்டை உங்களை மனசுல நினைச்சுட்டுதான் கம்போஸ் செஞ்சேன். அந்தப் பாட்டை உங்க ஸ்டைல்ல, உங்க எனர்ஜி லெவல்ல பாடணும்'னு கேட்டார். எனக்கு, `மூக்குத்தி அம்மன்'னு படத்தோட பேரை கேட்டவுடனே பிடிச்சிப் போச்சு. என்னை மனசுல வெச்சு ஒரு பாட்டை கம்போஸ் பண்ணியிருக்கார்னா அதுக்கு நிச்சயமா மரியாதை தரணும்னு நினைச்சேன்.

அருணா சாய்ராம்

படத்தைப் பத்தி கேட்டதும், `இது இந்தக் காலத்துக்கான அம்மன் படமா இருக்கும்’னு சொன்னார். அப்புறம் படத்தோட கதையைச் சொன்னார். இன்னும் இம்ப்ரஸ் ஆயிட்டேன். அப்புறம், நான் பாட வேண்டிய பாட்டுகளோட ரஃப் டிராக்கை எனக்கு அனுப்பி வெச்சார். கேட்டவுடனே மனசுக்குள்ள ஒரு தெய்வீக உணர்வு. உடனே ஓகே சொல்லிட்டேன். அப்புறம் ஆர்.ஜே. பாலாஜியும் பேசினார். ரொம்ப திறமையான இளைஞர்’’ என்கிற அருணா, `ஐகிரி நந்தினி' பாடலை அமெரிக்காவில் இருந்தபடியே பாடியிருக்கிறார். அந்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.

``பாடுறதுன்னு முடிவானதுக்கப்புறம், `நான் அமெரிக்காவுல இருக்கேன். நீங்க இந்தியாவுல இருக்கீங்க. உலகம் முழுக்க லாக்டெளன். வெளியே வர முடியாது. வந்தாலும் பல மாசமா மூடியிருக்கிற ஸ்டூடியோவுக்குள்ள போய் பாடறது பாதுகாப்பும் கிடையாது. எப்படிப் பண்ணப் போறீங்க?’னு கேட்டேன். `நாம நெனைச்சா முடியும் மேம்’னு தைரியமா சொன்னார் கிரிஷ்.

மூக்குத்தி அம்மன்

Also Read: திரைக்கு வெளியேயும் வென்றுவிட்டாள் `பொம்மி'... மஞ்சுவுக்கும் நீலாம்பரிக்கும் நடந்தது என்ன?

அமெரிக்காவுல இருக்கிற கொலாபிரேட்டரை கண்டுபிடிச்சு மைக், லேப்டாப்னு பாட்டை ரெக்கார்டிங் செய்வதற்கான உபகரணங்களையெல்லாம் என் வீட்டுக்கு டெலிவரி செய்ய வெச்சார். அப்புறம், வீடியோ கால்ல அதையெல்லாம் எப்படி செட் பண்றது, எந்த ஒயரை எங்க கனெக்ட் பண்றது, மைக்கை எப்படி ஃபிக்ஸ் பண்றதுன்னு அஞ்சு மணி நேரம் சொல்லிக் கொடுத்தார். அவர் சொன்னதையெல்லாம் தனி ஆளா செஞ்சுட்டு, நான் அமெரிக்காவுல இருந்து ஆன்லைன்ல பாட, கிரிஷ் சென்னையில இருந்து ரெக்கார்ட் பண்ண... கடவுளே... மாடர்ன் டெக்னாலஜியும் தெய்வீகமும் சேர்ந்த வொண்டர்ஃபுல் எக்ஸ்பீரியன்ஸ். இந்த அனுபவத்தை அம்மனோட அருளாதான் நான் பார்க்கிறேன்’’ - சிலிர்ப்புடன் பேச்சை முடித்தார் அருணா சாய்ராம்.



source https://cinema.vikatan.com/music/singer-aruna-sairam-shares-her-mookuthi-amman-movie-song-experience

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக