Ad

வியாழன், 26 நவம்பர், 2020

சென்னை: 7 ஆண்டுகளுக்கு முன் தோண்டப்பட்ட செப்டிக் டேங்க் - சிறுவனின் உயிரைப்பறித்த சோகம்

சென்னையை அடுத்த ஆவடி அருகே உள்ள வெள்ளானூர், ஆர்ச் அந்தோணி நகரைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (34). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவரின் மனைவி சங்கீதா (29). இந்தத் தம்பதியினரின் மகன் மோகன்ராஜ் (6). இவன், அந்தப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தான். இவர்கள் கடந்தாண்டு வெள்ளானூர் பகுதிக்குக் குடிவந்தனர்.

சிறுவன் மோகன்ராஜ்

கமலக்கண்ணனின் வீட்டுக்கு அருகே வீடு கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக 7 ஆண்டுகளுக்கு முன் செப்டிக் டேங்க் தோண்டப்பட்டிருக்கிறது. ஆனால், அதை மூடிவைக்கவில்லை. இந்தநிலையில் நிவர் புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் செப்டிக் டேங்க், நிரம்பியது. மழையால் அந்தப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இந்தச் சமயத்தில் வீட்டின் அருகே மோகன்ராஜ் நேற்று மாலை விளையாடினான்.

வெளியில் சென்ற மோகன்ராஜ், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால் அவனின் பெற்றோர் தேடினர். அப்போது வீட்டின் அருகே உள்ள செப்டிக் டேங்கில் மோகன்ராஜ், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அதைப்பார்த்த அவனின் பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் மோகன்ராஜை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read: தாமிரபரணி புஷ்கர விழா - தூத்துக்குடியில் பாதுகாப்பில்லாத படித்துறையில் நீராடிய சிறுவன் பலி!

சிறுவன் மோகன்ராஜ்

அங்கு சிறுவனைப் பரிசோதித்த டாக்டர்கள், மோகன்ராஜ் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ஆவடி டேங்க் பேட்டரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நடராஜ் மற்றும் போலீஸார் வழக்குபதிவு செய்து சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டின் உரிமையாளரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.



source https://www.vikatan.com/news/crime/avadi-police-file-case-over-6-year-olds-death

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக