Ad

வெள்ளி, 20 நவம்பர், 2020

`மாநிலப் பொறுப்புக்கு வந்த பிறகும் சீண்ட வேண்டுமா?!'- பிரசாரத்துக்கு முன்னதாகக் கொதித்த உதயநிதி!

டெல்டா மாவட்டங்களில் இருந்து சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். ` நேற்று சென்னையில் இருந்து கிளம்புவதற்கு முன்பாக, ஸ்டாலினிடம் சீனியர்கள் நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகள் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார் உதயநிதி' என்கின்றனர் அறிவாலய நிர்வாகிகள்.

திருச்சியில் உதயநிதி

2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கத்துடன் பல்வேறு வியூகங்களை வகுத்துள்ளது தி.மு.க. இதன் ஒருபகுதியாக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், மாவட்டம்தோறும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களையும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேசி வருகின்றனர். அதேநேரம், `தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரிலும் காணொலி மூலமாக முதற்கட்ட தேர்தல் பிரசாரத்தை நடத்தி முடித்துவிட்டார் ஸ்டாலின். இந்தநிலையில், தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், 100 நாள் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த திருக்குவளையில் இருந்து பிரசாரத்தைத் தொடங்குவதற்காகச் சென்ற அவருக்கு, திருச்சியில் பிரமாண்ட வரவேற்பைக் கொடுத்திருக்கிறார் திருச்சி தெற்கு மா.செ அன்பில் மகேஷ்.

உதயநிதிக்காக வடிமைக்கப்பட்ட பிரசாரத் திட்டத்தின்படி, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இரண்டு நாள்களும் அடுத்து தஞ்சை என, டிசம்பர் 1-ம் தேதி வரையில் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறார். அதேநேரம், உதயநிதியின் தேர்தல் பிரசாரப் பயணத்துக்கு ஆளும்தரப்பில் இருந்து தடையை ஏற்படுத்தும் வேலைகளும் தொடங்கிவிட்டன. அதன்படி, திருக்குவளையில் நேற்று மாலை பிரசார பயணத்தைத் தொடங்கிய உதயநிதியை, மேடையில் இருந்து இறங்கிய உடனே கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர். இந்தநிலையில், உதயநிதியின் பிரசாரப் பயணம் தொடங்குவதற்கு முன்னதாக குடும்பத்துக்குள் நடந்த சில விஷயங்களை நம்மிடம் பட்டியலிட்டனர் அறிவாலய நிர்வாகிகள் சிலர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் நம்மிடம் பேசியவர்கள், `` தேர்தல் பிரசாரப் பயணம் ஒருபுறம் இருந்தாலும் தேர்தலை எதிர்கொள்வதற்காக மண்டல பொறுப்பாளர்களைத் தலைமை நியமித்துள்ளது. அந்த வரிசையில், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளின் பொறுப்பாளராக ஆ.ராசா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

ஸ்டாலின்

இதில், சேலம் செல்வகணபதி உடல்நலமில்லாமல் இருப்பதால், விரைவில் அவரும் ஆ.ராசாவுடன் இணைந்து பணி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதேநேரம், ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஒட்டன்சத்திரம் சக்ரபாணியை பொறுப்பாளராக நியமித்துள்ளனர். நாகை, திருவாரூர், கடலூர் ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளராக தொ.மு.ச சண்முகமும் விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் பொறுப்பாளராக எ.வ.வேலுவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தலைமையில்தான் தேர்தல் பணிகள் நடக்க உள்ளன. இவர்களில் சிலர், மாவட்ட அரசியலில் தலையிடுவதுதான் பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது" என விவரித்தவர்கள்,

Also Read: திருச்சி: `தொகுதி மேம்பாட்டு நிதி; உதயநிதி படம்!’ - நிழற்குடை சர்ச்சையில் மகேஷ் பொய்யாமொழி

`` அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ பாளை அமரமூர்த்தி, கடந்த மாதம் அ.ம.மு.க-வின் அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகி தி.மு.க-வில் சேர்ந்தார். இவருக்கு ஆதரவாக உள்ளூரில் சில சீனியர் கட்சிக்காரர்கள் செயல்படுகின்றனர். இவர்கள், அமரமூர்த்தியை வரவேற்று கல்லக்குடி, வைப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பேனர்கள் வைத்தனர். இது மாவட்ட செயலாளர் சிவசங்கருக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அகற்றுமாறு அவர் காவல்துறையில் புகார் கூறியதாகத் தெரிகிறது. இதனையடுத்து, பேனர்கள் அகற்றப்பட்டுவிட்டன. தொடர்ந்து சிவசங்கருக்கு எதிராக, `மண்ணின் மைந்தர்தான் தேர்தலில் நிற்க வேண்டும்' எனவும் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, ` சிவசங்கர் மீது ஏராளமான புகார்கள் வருகின்றன. அவருக்கு இந்தமுறை சீட் கொடுக்கக் கூடாது' எனக் கட்சியின் தலைமை நிர்வாகி ஒருவர் ஸ்டாலினிடம் கூறியிருக்கிறார். ஏற்கெனவே, கடந்த முறை குன்னம் தொகுதியில் போட்டியிட இருந்த சிவசங்கரை, அரியலூரை நோக்கித் தள்ளிவிட்டதே அந்த சீனியர்தான். இப்போது பேனர் விவகாரத்தை வைத்தே, அவரை மொத்தமாக முடக்குவதற்கும் திட்டமிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் திருச்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ஒருவரும் கைகோத்துள்ளார்.

சிவசங்கர்

இதனை அறிந்த சிவசங்கர், உதயநிதியின் கவனத்துக்குப் புகாரைக் கொண்டு சென்றுள்ளார். தேர்தல் பிரசாரப் பயணத்துக்கான பரபரப்பிலும் ஸ்டாலினிடம் பேசிய உதயநிதி, `` உங்களுக்குத் தெரிந்துதான் எல்லாம் நடக்கிறதா? ஒரு மாவட்ட செயலாளருக்கு இவ்வளவு இடையூறுகளைக் கொடுக்க வேண்டுமா.. மாநிலப் பொறுப்புக்கு வந்துவிட்ட பிறகும், மாவட்டச் செயலாளருக்கு எதிராக ஏன் செயல்படுகிறார்கள்" எனக் கோபத்தைக் காட்டியுள்ளார். இதற்குப் பதில் கொடுத்த ஸ்டாலின், ``என் கவனத்துக்கும் புகார் வந்தது. நான் பார்த்துக் கொள்கிறேன்" எனக் கூறிவிட்டார். அரியலூர் விவகாரத்தின் புகைச்சல், எப்போது தீரும் எனத் தெரியவில்லை" என்றனர் விரிவாக.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/udhayanithi-stalin-angry-over-party-cadres-activities

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக