Ad

வியாழன், 12 நவம்பர், 2020

5 நிமிடங்களில் 3 மரங்கள்... தென்னை மரம் ஏறுவதில் அசத்தும் 7 வயது சிறுமி!

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் நகரின் பசுக்கிளைவிளை மணிநகரைச் சேர்ந்தவர்கள் மார்ட்டின் விஜயதுரை - ரேணுகா தம்பதி. இவர்களுக்கு 10 வயதில் சாம் ஆல்வின் என்ற மகனும் 7 வயதில் ஹெப்சி ஹேனா என்ற மகளும் உள்ளனர்.

சிறுமி ஹெப்சி ஹேனா

மார்ட்டின் விஜயதுரை, அம்பாசமுத்திரத்தில் ஹோட்டல் தொழில் செய்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக ஐந்தாம் வகுப்புப் படிக்கும் அவரின் மகன் சாம் ஆல்வினும், இரண்டாம் வகுப்புப் படிக்கும் ஹெப்சி ஹேனாவும் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்கள்.

எப்போதும் துறுதுறுவென ஏதாவது செய்துகொண்டிருக்கும் மகள் ஹெப்சி ஹேனா, வீட்டில் உள்ள மரங்களில் ஏறி விளையாடத் தொடங்கியிருக்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் இருக்கும் 25 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் அச்சமின்றி ஏறியுள்ளார். தற்போது அவர் வேகமாக மரத்தின் மீது ஏறி இறங்குகிறார்.

தென்னை மரத்தின் மீது ஹெப்சி ஹேனா

இது பற்றி ஹெப்சி ஹேனாவின் தந்தை மார்ட்டின் விஜயதுரை கூறுகையில், ``கொரோனா ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் திறக்கப்படாததால என் மகனும் மகளும் வீட்டிலேயே இருக்காங்க. போன மாசம் ஒருநாள் நான் வீட்டிலிருந்தபோது ஹெப்சி வேகமா தென்னை மரத்தில் ஏறினாள்.

ரொம்பவும் அனுபவம் வாய்ந்தவங்க ஏறுவது மாதிரியே அவளும் ஏறியதைப் பார்த்ததும் வியப்பா இருந்துச்சு. அதனால அவகிட்ட, `உனக்குத் தென்னை மரத்துல ஏற ஆசையா’னு கேட்டேன். வேகமா தலையாட்டினாள். அதனால அவளுக்கு தென்னை ஏற பயிற்சி கொடுக்க ஆரம்பிச்சேன். ஒரே மாசத்துல நல்லா மரம் ஏறப் பழகிட்டாள்.

இப்போ 5 நிமிஷத்துல மூணு தென்னை மரங்கள்ல ஏறி இறங்குற அளவுக்குப் பழகிட்டாள்.

நான், படிக்கும் காலத்துல கால்பந்து விளையாட்டில் ஆர்வமா இருந்தேன். ஆனா, எனக்கு அதுக்கான பயிற்சியும் விளையாடுவதற்கான வசதி வாய்ப்பும் கிடைக்கல. அதனால என்னால கால்பந்து விளையாட்டுல சாதிக்க முடியாமலே போயிருச்சு.

சாதனைக்காக மரம் ஏறப் பயிற்சி எடுக்கும் சிறுமி

அந்த மாதிரி என் மகளுக்கும் அவ ஆசைப்பட்ட பயிற்சி கிடைக்காம போயிடக் கூடாதுனு நினைச்சேன். அவகிட்ட இருக்கும் திறமையை வெளிப்படுத்த தினமும் பயிற்சி கொடுக்கிறேன். அவளை இன்னும் வேகமா தென்னை மரம் ஏறவெச்சு கின்னஸ் சாதனை படைக்க வைக்கணும்ங்கிறதுதான் என் ஆசை'' என்றார்.

``எனக்கு தென்னை மரம் ஏறுறது ஒரு விளையாட்டு மாதிரி இருக்கு. நானா ஏறிப் பழகிட்டு இருந்தேன். அப்பா பார்த்தா திட்டுவாங்கனு நெனச்சேன். அப்பாவே மரம் ஏற சொல்லிக்கொடுக்க வந்ததும் சந்தோஷமா இருக்கு'' என்கிறார் ஹெப்சி ஹேனா உற்சாகத்துடன்.



source https://www.vikatan.com/news/general-news/7-old-tirunelveli-girl-climbs-3-coconut-trees-in-5-minutes

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக