Ad

சனி, 24 அக்டோபர், 2020

திருச்சி: `வாரிசு’ வெல்லமண்டி vs பரஞ்ஜோதி; அப்செட் மா.செ! -முதல்வர் விசிட்டும் கட்சி சச்சரவுகளும்!

`அமைச்சர் வெல்லமண்டி நடராஜனுக்கும், மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதிக்கும் இடையே வாக்குவாதம்’, `புறநகர் மாவட்டச் செயலாளர் குமார் கடும் அப்செட்’, `முதல்வரின் பார்வை தன்பக்கம் திரும்பி விடாதா என்று காத்துக்கிடந்த என்.ஆர் சிவபதி’ என முதல்வரின் திருச்சி வருகை பல்வேறு சச்சரவுகளோடு முடிந்திருக்கிறது. அப்படி என்னதான் சச்சரவுகள் நடந்தது?

எடப்பாடி

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனா தடுப்புப் பணிகள் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக, சென்னையிலிருந்து திருச்சிக்கு (அக். 22ம்தேதி) முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலம் வந்தார். பின்னர், அங்கிருந்து கார் மூலம் விராலிமலைக்குச் சென்றார்.

முதல்வர் எடப்பாடி

அங்கு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், அங்குள்ள ஐ.டி.சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த நுகர்வோர் பொருட்கள் தயாரிப்புப் பிரிவை முதல்வர் திறந்து வைத்தார்.

பின்னர், ஜல்லிக்கட்டுக் காளையை வீரர் ஒருவர் அடக்குவது போன்ற உலோகச் சிலையைத் திறந்து வைத்தார். புதுக்கோட்டை அருகே கவிநாடு கண்மாய்ப் பகுதிக்கு வந்த தமிழக முதல்வருக்குக் காவிரி - குண்டாறு திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளைத் தொடங்கி உள்ளதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக 250 மாட்டுவண்டிகள், முளைப்பாரிகளோடு விவசாயிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முதல்வருடன் அமைச்சர்கள்

பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிவிட்டு மீண்டும் திருச்சியிலிருந்து சென்னை கிளம்பினார் முதல்வர். இதில் தான் பல்வேறு அரசியல் விவகாரம் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள் அ.தி.மு.க தரப்பினர்.

என்ன நடந்தது என்று திருச்சி அ.தி.மு.க-வில் உள்விவகாரம் அறிந்தவர்கள் சிலரிடம் பேசினோம். ”சென்னையிலிருந்து வரும் முதல்வரை வரவேற்பதற்குத் திருச்சி விமானநிலையத்திற்குள் 15 நபர்கள் மட்டுமே இருக்கவேண்டும் என்று முதல்வரின் பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தியுள்ளனர். அதற்கு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டு அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

முதல்வரை மருத்துவர் குழுவினர் வரவேற்பு

விமானநிலையத்திற்குள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், காமராஜ், வளர்மதி, ரெத்தனவேல், புறநகர் வடக்கு மாவட்டச்செயலாளர் பரஞ்ஜோதி, புறநகர் தெற்கு மாவட்டச்செயலாளர் குமார் உள்ளிட்ட பலர் இருந்துள்ளனர். இந்த நிலையில், முதல்வர் வரும் நேரத்தில் பரஞ்ஜோதியின் ஆதரவாளர்கள் சிலர் வெளியில் நின்றுகொண்டிருந்தபோது அவர்களை பரஞ்ஜோதி உள்ளே வரச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்

அதனைப்பார்த்த சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி, `ஏப்பா, 15 பேர் தான் இருக்கனும்னு சொல்லிருக்காங்க. அது தெரியுமா? தெரியாதா? நீ பாட்டுக்கு ஆட்களை அழைச்சிகிட்டு இருந்தால் முதல்வர் டென்ஷன் ஆகமாட்டாரா?’ என்று சொல்ல, அதற்கு, பரஞ்ஜோதி, `அவர்களும் நமது நிர்வாகிகள் தானே’ என்று சொல்ல இருவருக்கும் காரசாரமான விவாதங்கள் நடந்துள்ளன. பின்பு அருகிலிருந்த அமைச்சர்கள், பிறகு பேசிக்கொள்ளலாம் என்று சமரசம் செய்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்கப் புறநகர் மாவட்டச் செயலாளர் குமார், பெரிய அளவில் ஆட்களைத் திரட்ட முடியாமல் சோர்ந்துபோய் இருந்ததாகவும், அவர் அடித்த போஸ்டர்களில் துணை முதல்வரின் படத்தைப் பெரிதாகப் போட்டதாகவும் தகவல் தலைமைக்குச் சென்றிருக்கிறது. முதல்வரின் தனி டீம் போலீஸார் வட்டாரத்தில் இது குறித்து தகவல் கேட்க, அவர்களும் விசாரித்துக் கொண்டிருக்கிறார்களாம். அதனைத்தொடர்ந்து அமைச்சர் சிவபதி, முதல்வரின் பார்வை தம்பக்கம் விழுந்து விடாதா என்று முதல்வரைக் கவர்வதற்காகப் பல வேலைகளைச் செய்தார். ஆனால் முதல்வர் கொஞ்சம்கூட சட்டை செய்யவில்லை என்கிறார்கள்.

மாவட்டச் செயலாளர் குமார்

அதனைத்தொடர்ந்து, வழக்கத்தை விட இந்த முறை அமைச்சர் வெல்லமண்டியின் மகன் ஜவர்கலால் நேரு புகைப்படம் தான் திருச்சி மாவட்டம் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தது. இதற்குக் காரணம் அமைச்சருக்கு சீட் கொடுக்கவில்லை என்றாலும் பரவில்லை. எனது மகனுக்கு சீட் கொடுக்கவேண்டும் என தலைமையை நாடிக்கொண்டிருக்கிறார். அதற்காகத் தான் தொகுதி முழுவதும் மகனின் புகைப்படத்தை மக்கள் மத்தியில் பதிய வைக்கும் வேலையில் அமைச்சரின் ஆதரவாளர்கள் இறங்கியிருப்பதாகச் சொல்கிறார்கள்.

விமான நிலையத்தில் தொண்டர்கள்

முன்பே, `வாரிசு அரசியலைத் தூக்கிப் பிடிக்கிறீர்கள்’ என்று வெல்ல மண்டி நடராஜனிடம் தலைமை கடுமையாக எச்சரித்தும் பிறகு மீண்டும் தனது மகனை முன்னிலைப் படுத்திக் கொண்டிருக்கிறார் என்று சச்சரவுகளும் எழுந்துள்ளது. இது போன்று பல்வேறு சச்சரவுகளுடன் முடிந்திருக்கிறது முதல்வரின் புதுக்கோட்டை விசிட் என்கின்றனர் அ.தி.மு.க-வினர்.



source https://www.vikatan.com/news/politics/chief-minister-trichy-visit-and-admk-cadres-issues

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக