Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

IPL 2020: வெற்றிகளால் மிரட்டும் மும்பை... வலுவிழந்து வீழ்ந்த ஹைதராபாத்! #MIvSRH

5 போட்டிகளில் இரண்டில் தோல்வி, மூன்றில் வெற்றி என மீண்டும் 2020 ஐபிஎல்-லின் டேபிள்டாப்பராகி இருக்கிறது மும்பை. சிக்ஸர் மழை பொழியும் ஷார்ஜாவில் மீண்டும் ஒரு 200 ப்ளஸ் ஸ்கோரைப் பதிவு செய்த மும்பை பெரிய போராட்டங்கள் எதுவும் இல்லாமல் வெற்றிபெற்றிருக்கிறது. ஷார்ஜாவில் நடந்தது என்ன?!

டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். மும்பை எந்த மாற்றங்களும் இல்லாமல் களமிறங்க, சென்னையை தோற்கடித்த ஹைதராபாத்தின் ப்ளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்திருந்தார் டேவிட் வார்னர். சிக்ஸர்கள் சிதறும் மைதானம் என்பதால் புவனேஷ்வர் குமாருக்கு ப்ரஷர் கொடுக்காமல் அவருக்குப் பதிலாக சந்தீப் ஷர்மாவும், கலீலுக்கு பதிலாக சித்தார்த் கவுலும் அணியில் இடம்பிடித்திருந்தார்கள்.

#MIvSRH

ரோஹித் 100, 150 ரன்கள் அடிக்க ஏதுவான மைதானம் என்பதால் எல்லோரும் ரோஹித்தின் மெகா இன்னிங்ஸை எதிர்பார்த்து காத்திருக்க சந்தீப் ஷர்மாவின் முதல் ஓவரிலேயே கீப்பரிடம் எட்ஜாகி அவுட்டானார் ரோஹித். இதுவரை ஃபார்மில் இல்லாமல் இருந்த குவின்டன் டிகாக் பொறுப்போடு ஆட ஆரம்பித்தார்.

சித்தார்த் கெளலின் பெளலிங்கில் ஹாட்ரிக் பவுண்டரிகளாக அடித்து மிரட்டிக்கொண்டிருந்த சூர்யகுமார் யாதவ், கெளலின் பெளலிங்கிலேயே வீழ்ந்தார். 18 பந்துகளில் 27 ரன்கள் அடித்திருந்தார் சூர்யகுமார். இரண்டாவது டவுன் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் வந்தார். பவர்ப்ளேவின் முடிவில் 48 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது மும்பை.

#MIvSRH

பவர்ப்ளே வரை 12 பந்துகளில் 13 ரன்கள் மட்டுமே அடித்திருந்த டி காக், ரஷித் கானை அமைதியாகக் கடந்துவிட்டு, அப்துல் சமத்தின் லெக் ஸ்பின்னில் அடிக்க ஆரம்பித்தார். அப்துல் சமத் வீசிய ஆட்டத்தின் ஒன்பதாவது ஓவரில் 16 ரன்கள் அடித்தது மும்பை. டிகாக்கும், இஷான் கிஷனும் பார்ட்னர்ஷிப் போட்டதால், இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களின் கணக்கையும் முடிக்க, டேவிட் வார்னருக்கு ஆஃப் ஸ்பின்னர் தேவைப்பட்டார். ஆஃப் ஸ்பின் வீச அவர் தேர்ந்தெடுத்தவர் கேன் வில்லியம்சன். முதல் ஓவரில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்த வில்லியம்சனின் இரண்டாவது ஓவரில் டிகாக், கிஷன் என இருவரும் சிக்ஸர்கள் பறக்கவிட இந்த ஓவரில் மட்டும் 17 ரன்கள் கிடைத்தது. 32 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார் டிகாக்.

200 ரன்களுக்கு மேல் டார்கெட் கொடுக்கவேண்டும் என்பதால் ரஷித் கானின் ஒவரிலும் அடிக்க ஆசைப்பட்டார் டிகாக். ஆனால், பேட்டில் எட்ஜாகி உயரமாகப் பறந்து பந்தை கேட்ச் பிடித்தவரும் ரஷித் கானே. 39 பந்துகளில் 67 ரன்கள் அடித்திருந்தார் டிகாக். சந்தீஷ் ஷர்மாவும் அடுத்த சில ஓவர்களிலேயே அவுட் ஆனார். அவர் 23 பந்துகளில் 31 ரன்கள் அடித்திருந்தார்.

#MIvSRH

டெத் ஓவர்களை எதிர்கொண்டது பாண்டியாவும் பொலார்டும். சிக்ஸர்கள் பறக்க ஆரம்பித்தன. ஹர்திக் பாண்டியா 2 பவுண்டரி, 2 சிக்ஸர் என 19 பந்துகளில் 28 ரன்கள் அடித்து சித்தார்த் கெளலின் பெளலிங்கில் அவுட் ஆனார். அப்போது மும்பையின் இன்னிங்ஸ் முடிய நான்கு பந்துகள் இருந்தன. மும்பையின் ஸ்கோர் 188 ரன்கள். 200-ஐ மும்பை தொடவில்லை என்றாலே அது ஹைதராபாத்தின் பெளலிங்கிற்குக் கிடைத்த வெற்றிதான் என பெருமைப்பட்ட தருணத்தில்தான் கடைசி நான்கு பந்துகளில் இரண்டு பவுண்டரியும், இரண்டு சிக்ஸரும் கொடுத்தார் கெளல். 4 பந்துகளில் 20 ரன்கள் அடித்தவர் க்ருணால் பாண்டியா. மும்பை 208 ரன்கள் அடித்தது இன்னிங்ஸை முடித்தது.

208 ரன்கள் அடித்தாலும் ஷார்ஜா மைதானத்தில் வெற்றிக்கு உத்திரவாதம் இல்லை. அதுவும் வார்னர், பேர்ஸ்ட்டோ ஓப்பனிங் கூட்டணி பல அதிசயங்களை நிகழ்த்தக்கூடியது என்பதால் பரபரப்புடனேயே சேஸிங் தொடங்கியது. ட்ரென்ட் போல்ட் வீசிய ஆட்டத்தின் மூன்றாவது பந்தையே சிக்ஸருக்குப் பறக்கவிட்டார் பேர்ஸ்டோ. பேட்டின்சன் வீசிய இரண்டாவது ஓவரில் 12 ரன்கள் அடித்தது ஹைதராபாத். வார்னர் வழக்கம்போல டாட் பால் இன்னிங்ஸ் ஆடினாலும் பேர்ஸ்டோ செம ஃப்ளோவில் ஆட ஆரம்பித்த நேரத்தில் விக்கெட் விழுந்தது. 15 பந்துகளில் 25 ரன்கள் அடித்து அவுட் ஆனார் பேர்ஸ்டோ. அடுத்து வந்த மனிஷ் பாண்டேவும் பேர்ஸ்டோ ஸ்டைலில் அதிரடி ஆட்டம் ஆடினார்.

#MIvSRH

பவர்ப்ளேவின் முடிவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 56 ரன்கள் அடித்திருந்தது ஹைதராபாத். மணிஷ் பாண்டே, வார்னர் இருவரும் மாறி மாறி பவுண்டரிகள் அடித்து வெற்றிகரமாக சேஸிங்கை நோக்கிப்போய்கொண்டிருக்க 10வது ஓவரில் மனிஷ் பாண்டே அவுட் ஆனார். 19 பந்துகளில் 30 ரன்கள் அடித்திருந்த மனிஷ் பாண்டே, பேட்டின்சன் பெளலிங்கில் அவுட் ஆனார். பாண்டே அவுட் ஆனதுமே ஹைதராபாத்தின் வேகம் குறைய ஆரம்பித்தது. வார்னர் ஒருபக்கம் லூஸ் பால்களை மட்டுமே பவுண்டரிகளாக்கிக் கொண்டிருந்தாலும் சரியான பார்ட்னர்கள் அமையவில்லை. வில்லியம்சன் 3 ரன்னில் அவுட் ஆக, அடுத்துவந்த பிரியம் கார்க் 8 ரன்களில் அவுட் ஆனார்.

Also Read: பால்காரர் மகன், ஸ்ட்ரீட் கிரிக்கெட்டர்... சிஎஸ்கேவை சுழற்றிய பிரியம் கார்கின் பின்னணி! #PriyamGarg

16வது ஓவரில் 44 பந்துகளில் 60 ரன்கள் அடித்திருந்த டேவிட் வார்னர் பேட்டின்சன் பெளலிங்கில் வீழ்ந்தார். அடுத்த பும்ராவின் ஓவரில் அப்துல் சமத் சிக்ஸர், பவுண்டரி என அடித்து நம்பிக்கை கொடுத்தாலும் 208 ரன்களை சேஸ் செய்யக்கூடிய பவர் அப்துல் சமத், அபிஷேக்கிடம் இல்லை. அடுத்த பும்ராவின் ஓவரிலேயே ஒரு சிக்ஸர் அடித்துவிட்டு அடுத்த பந்தில் அவுட் ஆனார் அப்துல் சமத். இந்த ஓவரிலேயே அபிஷேக் ஷர்மாவின் விக்கெட்டையும் தூக்கினார் பும்ரா. 20 ஓவர்களில் 174 ரன்கள் மட்டுமே அடித்து ஹைதராபாத் வீழ்ந்தது. 5 போட்டிகளில் விளையாடியிருக்கும் ஹைதராபாத்தின் மூன்றாவது தோல்வி இது.

#MIvSRH
மும்பை, டெல்லி, பெங்களூரு அணிகள் 6 புள்ளிகளுடன் டாப் 3 இடங்களில் இருக்க, பஞ்சாபும், சென்னையும் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன. 2020 ஐபிஎல் சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-mumbai-indians-tops-the-table-again-by-defeating-sunrisers-hyderabad

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக