Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

IPL 2020: வாட்டோ பேக் டு ஃபார்ம், டு பிளஸ்ஸி மிரட்டல்... பஞ்சாப் சொதப்பியது எங்கே? #KXIPvCSK

ஒரு சின்ன கொசுவர்த்தி சுருள். 2013ம் ஆண்டு மொஹாலியில் போட்டி நடக்கிறது. முதலில் பேட் செய்த பஞ்சாப் 138 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்தப் போட்டியில் ஓப்பனிங் ஆடிய மந்தீப் சிங் 9 ரன்கள் எடுத்து அவுட்டானார். அப்போது பஞ்சாபில் இருந்த சாவ்லா, இப்போது சென்னை அணியில் இருக்கிறார். விக்கெட் இழப்பின்றி கூலாக 17.2 ஓவரில் அந்த ரன்களை சேஸ் செய்து கெத்துக் காட்டியது சென்னை. முரளி விஜய் 50 ரன்களும், ஹஸ்ஸி 86 ரன்களும் அதிரடியாய் ஆடி எடுத்திருந்தனர். கிட்டத்தட்ட அதே ஆட்டத்தை இந்த முறை டு பிளெஸ்ஸியும், வாட்டோவும் ரீப்ளே காட்டியிருக்கிறார்கள்.

சென்னை மீண்டும் அதன் இழந்த ஃபார்மை மீட்டெடுத்திருக்கிறது. டெத் ஓவர்களில் பஞ்சாபை 40 ரண்களுக்குள் கட்டுப்படுத்தியது, வாட்டோ டுப்பிளெஸ்ஸி ஸ்டைலிஷ் அரைசதம் என கொளுத்தாமையே சென்னைக்கு இந்த ஞாயிறு பட்டாசாய் வெடித்திருக்கிறது.
#KXIPvCSK

இந்த ஐபிஎல் சீசனில் நான்கு போட்டிகள் முடிவில் பஞ்சாபும், சென்னையும் கடைசி இடத்தில் இருப்பார்கள் என சொல்லியிருந்தால், யாரும் முதலில் நம்பியிருக்க மாட்டார்கள். பஞ்சாபுக்காவது டெல்லிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவர் தோல்வி, ஷார்ஜாவில் 200+ ரன்கள், பெங்களூரை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது என திரும்பிப் பார்த்தால், சற்று சுவாரஸ்யமான ஃபிளாஷ் பேக் இருந்தது. சென்னைக்கு, முதல் போட்டியில் மும்பையை வென்றதைத் தவிர, அடுத்த மூன்று போட்டிகளிலும் தொடர் தோல்வி. நோ பால், கேட்ச் டிராப் எல்லாம் செய்தால் எப்படி வெல்ல முடியும் என நேரடியாகவே பேசினார் தோனி. சென்னையின் பேட்டிங்கும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ரெய்னா, ஹர்பஜன் மீண்டும் வருவார்களா எனக் கேட்காத குறையாக இருந்தார்கள் சென்னை ரசிகர்கள்.

பஞ்சாப் என்றாலே தோனி குஷியாகிவிடுவார். இர்பான் பதான் பந்துவீச்சில் 20 ரன்களுக்கு மேல் விளாசி அடுத்து சுற்றுக்கு சென்றது, ஐந்து அரைசதம் என 21 இன்னிங்ஸில் 595 ரன்கள் எடுத்திருக்கிறார் தோனி. டாஸ் வென்ற ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். கருண் நாயர், கௌதம், ஜிம்மி நீஷம் பதிலாக மந்தீப் சிங், ஹர்ப்ரீத், ஜோர்டான் அணியில் சேர்க்கப்பட்டனர். சென்னை அணியில் எந்த மாற்றமும் இல்லை. தோனியின் செல்ல பிள்ளையான கேதார் ஜாதவ் இந்தப் போட்டியிலும் விளையாடினார்.

#KXIPvCSK

ஆரஞ்சு கேப்பை மாற்றி மாற்றி அணிந்துவரும் இந்த ஐபிஎல் சீசனின் டாப் ரன் ஸ்கோரர்களான ராகுலும், மயாங்கும் வழக்கம் போல ஓப்பனிங் இறங்கினார்கள். தீபக் சஷார், தாக்கூர், சாம் கர்ரன் என மூவர் வீசிய பந்துகளும் அவர்களைப் பெரிதாக பாதிக்கவில்லை. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 46 ரன்கள் சேர்த்திருந்தது பஞ்சாப். ஒன்பதாவது ஓவரை வீச வந்தார் சீனியர் அமுல் சாவ்லா. லெக் ஸ்பின்னரின் முதல் பந்தையே அடித்து ஆட மயாங்க் முற்பட டீப் மிட் விக்கெட்டில் நின்றுகொண்டிருந்த சாம் கர்ரனிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். சாவ்லாவின் அடுத்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் அடித்த மந்தீப் சிங், ஜடேஜாவின் ஓவரில் அவுட்டானார். 12 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது பஞ்சாப். வழக்கத்தைவிடவும் மெதுவாக ஆடினார் ராகுல். ஜடேஜா ஓவரில் பவுண்டரி சிக்ஸர் என நிக்கோலஸ் பூரன் அடிக்க, ஆனது ஆச்சு என தாக்கூர் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி அடித்து அரைசதம் கடந்தார் ராகுல்.

ஓவருக்கு ஒரு சிக்ஸர் என அடித்துவந்த பூரனிடம் இதெல்லாம் பத்தாதே என யாரோ சொல்லியிருப்பார்கள் போல. தாகூர் வீசிய 18வது ஓவரின் முதல் பந்தில், மீண்டும் ஓங்கி அடித்தார். அது உயரமாக சென்றதே தவிர, பவுண்டரியை தாண்டவில்லை. ஜடேஜாவின் கைகளில் லேண்ட் ஆனது. போன போட்டியில், கேட்ச் விட்ட ஜடேஜா, இதில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த பூரனைக் காலி செய்தார். அவ்வளவு நேரம் பொறுமையாக ஆடிக்கொண்டிருந்த ராகுல், அடுத்த பந்திலேயே தோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். ஒய்டு டெலிவரியை ராகுல் பவுண்டரிக்கு தொட்டு அனுப்ப முயல, அதை டைவ் அடித்து பிடித்து அசத்தினார் தோனி. இது ஐபிஎல்லில் தோனி பிடிக்கும் 100வது கேட்ச். இந்த இருவர்தான் அணியை நல்ல ஸ்கோருக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இவர்களே அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டானதால், பெங்களூரு அணியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்ப்ஃராஸ் கானும், அதிரடி நாயகன் மேக்ஸியும் களமிறங்கினார்கள்.

#KXIPvCSK

மேக்ஸியை இப்போது எல்லாம் பார்த்தால், மெட்ராஸ் பட ஜானி கதாபாத்திரம்தான் நினைவுக்கு வருகிறது. எப்படி இருந்த பிளேயர் தெரியுமாடா, ஸ்விட்ச் ஹிட் தெரியுமாடா என்றெல்லாம் சொல்ல வேண்டியிருக்கிறது. தாக்கூர் வீசிய கடைசி ஓவரில், சர்ப்ஃபராஸ் கான் கூட இரண்டு பவுண்டரி அடித்தார். மேக்ஸி ம்ஹூம். இப்படி அடிக்கலாமா அப்படி அடிக்கலாமா என க்ரீஸில் நின்று பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்தது பஞ்சாப். நினைத்ததை விட பத்து ரன்கள் அதிகமாக அடித்திருக்கிறோம் எனப் பெருமிதம் கொண்டார் மந்தீப் சிங். சென்னையின் பேட்டிங்கை பார்த்ததும் கொஞ்சம் சிரித்திருப்பார், நிறைய அழுதிருப்பார்.

வாட்டோவும், டூ பிளெஸ்ஸியும் சேஸிங் ஆட வந்தார்கள். ஹாட்ரிக் தோல்வி வேறு கண் முன் வந்து போனது. இருக்கும் அணிகளிலேயே வீக் லின்க் ஆன பஞ்சாபை விட்டால், வேறு வழியில்லை என்பதை உணராமல் இல்லை வாட்டோ. கார்டெல்லின் முதல் ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி. அதுவும் மிட் ஆன் திசையில் அவர் அடித்த பவுண்டரி எல்லாம் பக்கா வாட்டோ ஸ்டைல். பவர்பிளேயின் ஆறாவது ஓவரில் 18 ரன்கள் எடுத்தார் டுப்பிளெஸ்ஸி. ஆளே இல்லாத இடங்களில் பக்காவாக பிளான் செய்து அடித்தார் டூ பிளெஸ்ஸி. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 60 ரன்கள் எடுத்தது சென்னை. ஃபிளெமிங் மெல்ல சிரிக்க ஆரம்பித்திருந்தார். இந்த ஐபிஎல் சீசனில் சென்னையின் அதிகபட்ச பவர்பிளே ஸ்கோர் இதுதான்.

#KXIPvCSK

தேவைப்படும் ரன் ரேட்டை பற்றிக் கவலைப்படாமல், ஓவருக்கு 15 ரன்கள் அடித்து வந்தது இந்த ஜோடி. இதைத்தான இத்தனை நாளா எதிர்பார்த்தோம், 'மேட்ச் வரம் வேண்டி வந்தோம் வாட்டம்மா' என பாட ஆரம்பித்தனர் ரசிகர்கள். ரவி பிஷ்னாயின் பந்துவீச்சில் வாட்டோ அடித்த சிக்ஸ், 100 மீட்டரைக் கடந்து சென்றது. இந்த சீசனில், ஜோஃப்ரா ஆர்ச்சரின் சிக்ஸுக்கு அடுத்து பெரிய சிக்ஸ் இதுதான். பத்து ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 101 ரன்கள் எடுத்திருந்தது சென்னை. 11வது ஓவரை வீச வந்தார் ஜோர்டன். ராகுலிடம் ஃபீல்ட் செட்டப் பற்றி பேச, அடப்போட என்பது போல், 'என்னவென்று சொல்வதம்மா' என அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார் ராகுல். ஜோர்டானே அந்த ஓவரை செட் செய்து வீசினார். அதிலும் 11 ரன்கள். ஆமா, நோ லாஸூக்கு அடிச்சா ரன் ரேட் எவ்ளோ ஏறும் என அப்போதே கணக்கு போட ஆரம்பித்தனர் சென்னை ரசிகர்கள். ஜோர்டானின் ஓவரிலேயே இருவரும் கூலாக அரை சதத்தை கடந்தார்கள்.

பர்த்டே பாய் ஜோர்டான் வீசிய 17வது ஓவரில் 12 ரன்கள். ஷமியின் பந்துவீச்சை எல்லாம் ஒரு பொருட்டாகக்கூட இந்த ஜோடி மதிக்கவில்லை. யார்க்கரை எல்லாம் சிக்ஸுக்கு நகர்த்தினார் டு பிளெஸ்ஸி. பவுண்டரி அடித்து வெற்றி ரன்களை அடித்தார் டு பிளெஸ்ஸி. இருவருமே 53 பந்துகள் பிடித்திருந்தனர். இருவருமே 11 பவுண்டரி. வாட்டோ 83 ரன்கள், டு பிளஸ்ஸி 87 ரன்கள். ஒரு போட்டியில் ஓப்பனர்கள் சிறப்பாக ஆடினால், அந்த அணி எவ்வளவு எளிதாக வெல்ல முடியும் என்பதை பாடம் எடுத்து காட்டியது சென்னை.

#KXIPvCSK

இன்னும் தோனி சரி செய்ய வேண்டியது மிடில் ஆர்டரை மட்டும்தான். சூப்பர் சீனியர் அணியின் டீசல் எஞ்சின் சூடு பிடித்துவிட்டது. இனி எல்லாமே நலம் என நம்புவோம். பஞ்சாபை பொறுத்தவரை ராகுலும் மயாங்கும் கடைசி வரை ஆரஞ்சு கேப்புக்கு சண்டை போடுவார்கள் போல. மற்றபடி அந்த அணியில் எந்த அச்சுறத்தலும் இல்லை. டெத் பவுலிங் மட்டுமே மோசம் என இருந்த பஞ்சாப், இந்தப் போட்டியில் எல்லா ஓவர்களிலும் சொதப்பியது. பந்து ஒரு கட்டத்துக்கு மேல், நகர மறுத்தாலும், போட்டியில் மீண்டு வெற்றி பெற வேண்டும் என்கிற எண்ணம் துளியும் பஞ்சாப் வீரர்களின் முகத்தில் இல்லை. ஹர்ப்ரீத்தும், பிஷ்னாயும்தான் 'ஔசாட் ஔசாட்' என பூரானுடன் இணைந்து கத்தினர். மற்றபடி ம்ஹூம்!

"வாட்டோ என்று வேண்டுமானாலும் ஃபார்முக்கு திரும்பிவிடுவார். அதேதான் கேதார் ஜாதவுக்கும். இருவருமே அணிக்கு எப்படி உதவலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். அழுத்தம் இருக்கிறதா என்றால், நான் சொல்வதைவிட அவர்களுக்கே அது நன்றாக தெரியும்" என ஆட்டத்தின் ஆரம்பத்தில் பேட்டியளித்தார் ஃபிளெமிங்.

#KXIPvCSK

ஃபிளெமிங் சொன்னது போலவே, வாட்டோ ஃபார்முக்கு வந்துவிட்டார். மூன்றாண்டுகளில் இல்லாத ஃபார்மை புதிதாகக் கண்டுபிடித்து கேதார் ஜாதவையும் சென்னை அணிக்குக் கொண்டு வந்துவிட்டால், சென்னையை யாரும் அசைத்துக்கூட பார்க்க முடியாது என்பதில் ஐயமில்லை.

மூன்று சிக்ஸர்கள் அடித்து மீண்டும் ஃபார்முக்கு வந்த வாட்டோ ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-chennai-super-kings-sealed-a-10-wicket-win-against-kings-xi-punjab

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக