Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

அக்., 7-ம் தேதி வாய்ப்பில்லை; இருவரையும் தவிர்த்து ஒரு முதல்வர் வேட்பாளர்! - நாஞ்சில் சம்பத் யோசனை

கன்னியாகுமரி மாவட்ட தி.மு.க முப்பெரும் விழா 48 இடங்களில் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் தி.மு.க தலைவர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பேசினார். நாகர்கோவிலில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டார். அப்போது அ.தி.மு.க-வில் நடக்கும் முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்து பற்றி அவர் கருத்து தெரிவித்தார். நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தேர்தல் நெருங்குகிற இந்த காலகட்டத்தில், தமிழக அரசியல் நூற்றுக்கு நூறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு சாதகமாக இருக்கிறது. இந்த சாதகமான அம்சத்தை சீர்குலைக்க ஏதாவது வழி கிடைக்குமா என்று டெல்லியில் இருக்கின்ற பா.ஜ.க-வும் தமிழகத்தில் இருக்கின்ற ஆட்சியும் இன்றைக்கு காய் நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

அவர்களுக்குள்ளேயே ஒரு மோசமான குழப்பம் உருவாகி இருக்கிறது. மூழ்கி கொண்டிருக்கின்ற கப்பலுக்கு யார் கேப்டன் என்று ஒரு போட்டி எழுந்திருக்கிறது. அரசு நிகழ்ச்சி அனைத்தையும் புறக்கணித்து விட்டு தேனி பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் அமர்ந்திருக்கிறார் துணை முதலமைச்சர். நாளைக்கு என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது.

நாகர்கோவிலில் நடந்த தி.மு.க முப்பெரும் விழா

`அக்டோபர் ஆறாம் தேதி சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சென்னையில் இருக்க வேண்டும்’ என்று பணித்திருக்கிறார்கள். அக்டோபர் 7-ம் தேதி முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதாக சொன்னாலும், அன்று அறிவிப்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை. ஆனால் இந்த இரண்டு பேரையும் தவிர்த்து இன்னொருவரை முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்று கூட கேசியங்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆகவே இப்போது பந்து பி.ஜே.பி-யின் வாசலில் கிடக்கிறது. அந்தப் பந்தை எங்கு அடிக்க வேண்டும் என்று பி.ஜே.பி-க்கு மட்டும்தான் தெரியும்.

Also Read: `முதல்வர் வேட்பாளர்; அக்டோபர் 7 டார்கெட்!' - 5 மணி நேரம் நீடித்த அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம்

இன்று மத்திய அரசாங்கம் அறிவித்திருக்கின்ற கொள்கைகள், புதிய கல்விக் கொள்கை, புதிய சுற்றுச்சூழல் வரைவு கொள்கை எல்லாமே தமிழர்களுடைய தலையில் இடியாக இறங்கியிருக்கிறது. இதை தேசிய அளவில் எதிர்க்கின்ற ஒரு அமைப்பாக தி.மு.க தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஒடுக்கும்விதமாக, கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டதற்கே வழக்கு போடுகிறார்கள். நாடு முழுவதும் இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்யக் கூடாது என்பதற்காக அரசாங்கமும், காவல் துறையும் கண்காணிப்பாக இருக்கிறது. இதைத்தாண்டி பயணிக்கிற வல்லமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உண்டு.

நாஞ்சில் சம்பத்

நாற்பது ஆண்டு கால அரசியல் பின்புலம் ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஆளுமை மிகுந்த தலைவராக ஸ்டாலின் இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமல்ல இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் கூட தாமரை இனி மலர்ச்சி அடையாது. உத்தரபிரதேசத்தில் ஒரு நாளைக்கு எட்டு பேர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். அந்த முதலமைச்சர் யோகியா இல்லை போகியா என்பது தெரியவில்லை" என்றார்.

Also Read: `கிரண்பேடி vs நாஞ்சில் சம்பத்' - இது புதுச்சேரி கலாட்டா!



source https://www.vikatan.com/news/politics/nanjil-sampath-talks-about-admk-cm-candidate-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக