Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

`மக்கள் பணிகள் தொடரட்டும்..!’ - மக்கள் இயக்கம் நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனையில் நடிகர் விஜய்

`விஜய் மக்கள் இயக்கம் என்ற அமைப்பு தேவைப்படும்போது அரசியல் கட்சியாக மாறும். மக்கள் விருப்பப்படும்போது மாறும். மக்கள் கூப்பிடும்போது நாங்கள் வருவோம். நாங்களாக வந்து மக்களைக் கூப்பிடுவதை விட, மக்கள் 'வா' என்று கூப்பிடும் போது இன்னும் பவர்ஃபுல்லாக இருக்கும்" என்று இயக்குநரும், மக்கள் இயக்கத்தின் நிறுவனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அண்மையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்.

விஜய்

இதனை தொடர்ந்து விஜய் ரசிகர்கள் 2021 -ம் ஆண்டு தேர்தலில், விஜய் மக்கள் இயக்கத்தின் பங்களிப்பும் இருக்கும் என தெரிவித்து வருகிறார்கள். திருச்சி, புதுவை, மதுரை உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் நேற்று விஜய் ரசிகர்கள் அரசியல் போஸ்டர்களை ஒட்டியிருந்தார்கள்.

Also Read: `அப்பா சொல்லிட்டாரு; ஆட்சிக் கட்டிலில் அமர வைப்போம்!' - போஸ்டரில் அதகளப்படுத்தும் விஜய் ரசிகர்கள்

இந்த நிலையில் இன்று காலை முதலே நடிகர் விஜய், சென்னை அருகே உள்ள தனது பனையூர் இல்லத்தில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். திருச்சி வடக்கு, திருச்சி தெற்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு நிர்வாகிகள் மற்றும் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளும் மகாராஷ்டிராவை சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் ஆலோசனையில் கலந்து கொண்டனர் என்று கூறப்படுகிறது. வரும் நாள்களில் மற்ற மாவட்ட நிர்வாகிகளையும் அவர் சந்தித்து பேசுவார் என்றும் கூறப்படுகிறது.

மாஸ்டர் விஜய்

இந்த ஆலோசனை கூட்டத்தில், விஜய் நிர்வாகிகளிடம், மக்கள் பணிகளை தொடர்ந்து செய்யுங்கள் என கேட்டு கொண்டதாகவும், வழக்கமாக தன்னிடம் இருந்து வரும் உதவிகள் தொடரும் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அரசியல் கட்சி அல்லது தேர்தல் குறித்த ஆலோசனைகள் நடந்தது குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை. எனினும் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில், இந்த நடிகர் விஜயின் இந்த திடீர் நிர்வாகிகள் சந்திப்பு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



source https://www.vikatan.com/news/politics/actor-vijay-had-discussions-with-makkal-iyakkam-members

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக