Ad

திங்கள், 19 அக்டோபர், 2020

கூலிப்படை.. கொலை மிரட்டல்! - அமைச்சருக்கு எதிராக சாத்தூர் எம்.எல்.ஏ; விருதுநகர் அதிமுக-வில் சலசலப்பு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும், சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மனுக்கும் இடையேயான கோஷ்டிப் பூசல் சமீபகாலமாக அதிகமாகி தற்போது ஒருவரையொருவர் குற்றம்சாட்டும் அளவுக்கு சென்றுள்ளது விருதுநகர் மாவட்ட கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் மாவட்ட அமைச்சரான ராஜேந்திர பாலாஜி பல்வேறு விஷயங்களில் அதிரடியாக பேசி கடந்த காலங்களில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தார். அவருடைய பேச்சு கட்சிக்கு தர்மசங்கடத்தை தொடர்ந்து ஏற்படுத்தி வந்த நிலையில் மாவட்ட செயலாளர் பதவயிலிருந்து சில மாதங்களுக்கு முன் நீக்கப்பட்டார்.

அதன் பின்பு கொஞ்சம் அடக்கி வாசித்த ராஜேந்திர பாலாஜிக்கு மாவட்ட பொறுப்பளார் பதவி கொடுக்கபட்டது. அவருக்கு அந்த பொறுப்பு கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகள் தனி கோஷ்டியாக செயல்பட்டு வருகிறார்கள்.

ராஜேந்திர பாலாஜி நடத்திய ஆலோசனைக் கூட்டம்

இதில் ஆரம்பகாலத்திலிருந்து அவருடன் நெருக்கமாக இருந்த சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன் கடுமையாக மோதி வருகிறார். ராஜவர்மனுடன் முன்னாள் எம்.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் உட்பட அதிகப்படியான ஒன்றிய செயலாளர்கள், நகரச்செயலாளர்கள் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார்கள்.

சமீபத்தில் அ.தி.மு.க-வில் யார் முதலமைச்சர் என்ற சர்ச்சை வந்தபோது எடப்பாடிக்கு ஆதரவாக ராஜேந்திர பாலாஜி கருத்து சொன்னதால், ஓ.பி.எஸ் கோபமாகி ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தும் நிலை ஏற்பட்டது. பின்பு ஓ.பி.எஸ் தரப்பினரிடம் வருத்தம் தெரிவித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ராஜேந்திர பாலாஜி.

ராஜவர்மன் நடத்திய ஆலோசனைக் கூட்டம்

இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்துக்கு முதலமைச்சர், துணை முதலைமைச்சர் வரும்போது ராஜேந்திர பாலாஜி தனியாகவும், ராஜவர்மன் அணியினர் தனியாகவும் வரவேற்பு அளிக்கும் சம்பவங்கள் நடைபெற்றது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் ராஜேந்திர பாலாஜி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் பெரும்பாலான நிர்வாகிகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இதனால், அவர்களை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை நியமிக்க ராஜேந்திரபாலாஜி முடிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் ஆயிரக்கணக்கானோரை திரட்டி கடந்த 18-ம் தேதி சாத்தூர் தொகுதி ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய ராஜவர்மன், ''நான் எந்த பொறுப்புக்கும் ஆசைப்பட்டது கிடையாது. அவர்களாகத்தான் பதவியை கொடுத்தார்கள். இப்போது என்னை கட்சி நிர்வாகிகள் முன் தரக்குறைவாகப் பேசுவதும், வெட்டி விடுவேன், குத்தி விடுவேன், கூலிப்படையை வைத்து கொலை செய்துவிடுவேன் என்று ஒரு அமைச்சர் 6 மாதமாக கொலை மிரட்டல் விடுத்து வருகிறார்.

ராஜவர்மன்

கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருந்தாலும் அதையெல்லாம் மறந்து அ.தி.மு.க-வின் வெற்றிக்கு தொடர்ந்து பாடுபடவேண்டும். நான் இருக்கும் இடத்திற்கு விசுவாசமாக இருப்பேன். சாத்தூர் தொகுதி மக்களுக்கு வேலை செய்ய முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் என்னை வேலைக்காரனாக வைத்திருக்கிறர்கள். என் வேலை பிடிக்கவில்லை என்றால் தூக்கி எறியுங்கள்’' என்றார். இந்த விவகாரம் விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் ஜெயக்குமார், இந்த விவகாரத்தில் கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்கும் என்றார்.



source https://www.vikatan.com/news/politics/issues-in-virudhunagar-admk-party-politics

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக