Ad

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

`இது சரியில்லை பிரபு, எம்பொண்ணை அனுப்பிடு!’ - எம்.எல்.ஏ-விடமிருந்து மீட்டுத்தர தந்தை கோரிக்கை

கள்ளக்குறிச்சி (தனி) தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ-வான பிரபு அ.தி.மு.கவைச் சேர்ந்தவர். 38 வயதான அவர் தியாகதுருகத்தைச் சேர்ந்த கோயில் குருக்கள் ஒருவரின் 19 வயது மகளை கடத்திச் சென்றுவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. தியாகதுருகம் மலையம்மன் கோயிலில் குருக்களாக பணிபுரிந்துவரும் சுவாமிநாதன் என்பவர் பேசி வெளியிட்டிருக்கும் வீடியோவில், ``வணக்கம் நான் சுவாமிநாதன், தியாகதுருகம் மலையம்மன் கோயில் குருக்களாக பணியாற்றுகிறேன். எனது மகள் திருச்செங்கோட்டில் இருக்கும் தனியார் கல்லூரியில் பி.ஏ இங்லீஷ் இரண்டாமாண்டு படிச்சிண்டிருக்கா. என்னுடைய மகளை ஆசை வார்த்தைகள் கூறி, அவரை திசை திருப்பி கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு அவர்கள் 1-ம் தேதி மாலை 4 மணியளவில் கடத்திவிட்டார்.

குருக்கள் சுவாமிநாதன்

ரொம்ப மன உளைச்சலா இருக்கு. வேதனையாக இருக்கு. இது தொடர்பாக காவல்துறையிலோ, மாவட்ட ஆட்சியரிடமோ புகார் கொடுக்கச் சென்றால், ’நான் ஒரு சட்டமன்ற உறுப்பினர். எனக்கு பொருளாதார பலமும், அதிகார பலமும் இருக்கு. என்னை ஒன்றும் செய்ய முடியாது. என்னை கொலை செய்துவிடுவேன் என்றும் எனது குடும்பத்தையே காலி செய்துவிடுவேன். இதையும் மீறி நீ புகார் அளிக்கச் சென்றால் உன் பொண்ணையே கொலை செய்துவிடுவேன்’ என்று ஆள் வைத்து மிரட்டுகிறார். எனது மகள் சிறு வயது பெண். அவரை ஆசை வார்த்தைகள் கூறி அழைத்துச் சென்றுவிட்டார். கொஞ்சம் தயவு செய்து அவரை மீட்டுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நான் தனி நபரா இருக்கேன். என்னால் புகார் குடுக்க முடியல. காவல் நிலையத்துலயும் போயி புகார் கொடுக்க முடியல. மிரட்டல்கள் வருது. கொலை மிரட்டல்கள் விடுறாங்க. சட்டமன்ற உறுப்பினருடைய தகப்பனார் ஒன்றியச் செயலாளரா இருக்காரு. அ.ம.மு.க தெற்கு மாவட்டச் செயலாளரா இருக்கும் கோமுகி மணியன் வீட்டுக்கே வந்து மிரட்டுராறு. திருநாவலூர் கூட்டுறவு சங்கத் தலைவர் குமாரவேல், என்னை கொலை செய்துவிடுவேன் என்றும் என்னிடம் ஆள்கள் இருக்கிறார்கள் என்று மிரட்டுகிறார். எனக்கு பயமா இருக்குது. வீட்டில் இருப்பதற்கும், தனியா கோயிலுக்குப் போறதுக்கும் எனக்கு பயமா இருக்குது. என் மகளை எப்படியாது மீட்டுத் தரும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று கை கூப்பிக் கும்பிடுவதுடன் அந்த வீடியோ காட்சி முடிவடைகிறது.

பிரபு எம்.எல்.ஏ

நேற்று (04.10.2020) இரவு குருக்கள் சுவாமிநாதனை தொடர்புகொண்டோம். ``கடந்த 10 வருடமாக எனது மகனைப் போல எங்களுடன் பழகி வந்தவர் பிரபு. என்னையும், என் மனைவியையும் அப்பா, அம்மா என்றுதான் அழைப்பார். கடந்த 30-ம் தேதி காலேஜுக்கு போன என் பொண்ணு வீட்டுக்கு வரல. எம்.எல்.ஏ பிரபுதான் ஆசை வார்த்தைகள் கூறி எம்பொண்ணை அழைச்சிக்கிட்டு போயிட்டாருனு கேள்விப்பட்டு அவருக்குப் போன் பண்ணேன். `இது சரியில்லை பிரபு. எம்பொண்ணை அனுப்பிடுன்னு’ கேட்டேன். அதுக்கு, ‘உன் பொண்ணை 10 வருஷமா நான் லவ் பண்றேன். அப்படில்லாம் அனுப்ப முடியாது. நான் எம்.எல்.ஏங்கறதால சபாநாயகர் உத்தரவில்லாம என் மேல வழக்குப் போட முடியாது. உன்னால முடிஞ்சத பாத்துக்கோன்னு சொன்னாரு.

எம்பொண்ணுகிட்ட நான் பேசனும்னு சொன்னேன். அதுக்கும் அவரு அனுமதிக்கல. 10 வருஷமா லவ் பண்றேன்னு எம்.எல்.ஏ சொல்றாரு. அப்படின்னா அவருக்கு 28 வயசு இருக்கும்போது என் பொண்ணுக்கு 9 வயசு சார். நான் ஜாதி பார்க்கல. காதலுக்கும் நான் எதிரி கிடையாது. ஆனால் வேலியே பயிரை மேயலாமா? 38 வயதான ஒருவர் 19 வயசுப் பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா? 10 வயது வித்தியாசம் என்றாலும் பரவாயில்லை. 20 வயசு வித்தியாசத்தை எப்படி ஏற்றுக் கொள்வது ? அதுமட்டுமல்லாமல் 20 வயது வரை பெண் குழந்தைகளுக்கு எந்த முடிவையும் சரியாக எடுக்கத் தெரியாது. காவல்துறையில் நான் எந்தப் புகாரையும் கொடுக்கவில்லை. ஆனால் எஸ்.பி அலுவலகத்தில் இருந்து எனக்குப் போன் பண்ண சி.ஐ.டி செந்தில் அப்படிங்கறவரு என்னை பத்தியும், என் பொண்ணைப் பத்தின எல்லா விவரத்தையும் கேட்டு வாங்கினாரு. இப்படி இருக்கும்போது நான் என்ன பண்ண முடியும்” என்று தழுதழுத்தார்.

Also Read: நரபலியா... கடத்தலா..! - சிக்கலில் எம்.எல்.ஏ பிரபு குடும்பம்

நேற்று இரவே கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபுவை தொடர்புகொண்டு சுவாமிநாதன் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்டபோது, ``அவர் அப்படி எல்லாம் சொல்லியிருக்க மாட்டாரே. அதற்கெல்லாம் வாய்ப்பே கிடையாது. இப்போதுதான் அவரிடம் பேசினேன். உங்களுக்கு யாரோ தவறாக சொல்லியிருக்கிறார்கள்” என்றவரிடம், குருக்கள் சுவாமிநாதனின் மகளை நீங்கள்தான் அழைத்துச் சென்றீர்களா? தற்போது அவர் உங்களுடன் தான் இருக்கிறாரா? என்று நாம் கேட்டபோது, “உடனே கான்ஃபரன்ஸ் காலில் அவரை கூப்பிட்டுவிட்டு உங்களிடம் பேசுகிறேன்” என்று தொடர்பை துண்டித்துவிட்டார்.

இந்நிலையில் இன்று காலை எம்.எல்.ஏ பிரபுவின் வீட்டில் அவருக்கும், குருக்கள் சுவாமிநாதனின் மகளுக்கும் திருமணம் நடக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதேபோல இன்று காலை 7 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட குருக்கள் சுவாமிநாதன், “நேற்றுகூட எம்.எல்.ஏ பிரபுவின் அப்பா ஐயப்பன் என் பொண்ணு எங்கே இருக்கான்னு தெரியாது என்று சொன்னாரு. ஆனா இன்னைக்கு அவருதான் முன்ன நின்னு கல்யாணத்தை பண்ணி வச்சிருக்காரு. 20 வயசு வித்தியாசத்துல நடந்த இந்தக் கல்யாணத்தையும், அவங்க எனக்கு பண்ண நம்பிக்கை துரோகத்தையும் என்னால ஏத்துக்க முடியல. அவங்க வீட்டு முன்னாடியே நான் உயிரை மாய்ச்சுக்கப் போறேன்” என்று கூறிவிட்டு தொடர்பை துண்டித்தார்.

எம்.எல்.ஏ பிரபுவின் திருமண புகைப்படம்

உடனே கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் உதவி ஆய்வாளரை தொடர்புகொண்டு, விபரத்தைக் கூறி விபரீதம் எதுவும் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டோம். அதன்படி அடுத்த சில நிமிடங்களில் குருக்கள் சுவாமிநாதனை எம்.எல்.ஏ பிரபுவின் வீட்டின் அருகில் காவல்துறையினர் மீட்டு அழைத்துச் சென்றனர்.



source https://www.vikatan.com/news/tamilnadu/priest-request-to-give-his-daughter-back-from-kallakurichi-constituency-mla-prabu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக