Ad

புதன், 14 அக்டோபர், 2020

`` 'மாட்டுச்சாண சிப்' செல்போன் கதிர்வீச்சைத் தடுக்கும்”- ராஷ்டிரிய காமதேனு ஆயோக்

மத்திய வேளாண்துறையின் பிரிவான ராஷ்டிரிய காமதேனு ஆயோக்-ன் தலைவர் வல்லபாய் கத்திரியா மாட்டுச்சாணத்தால் ஆன செல்போன் சிப்புகளை வெளியிட்டிருக்கிறார்.

ராஷ்டிரிய காமதேனு ஆயோக் என்பது மத்திய அரசின் வேளாண் துறையின் கீழ் இயங்கும் பிரிவு. மாட்டின் பால் பொருள்கள் தவிர்த்து மாட்டுச்சாணம், சிறுநீர் ஆகியவற்றையும் சந்தைப்படுத்த நினைக்கும் மத்திய அரசு, இந்தப் பிரிவை உருவாக்கியிருக்கிறது. இதன் தலைவராக வல்லபாய் கத்திரியா (Vallabhbhai Kathiria) உள்ளார்.

வல்லபாய் கத்திரியா, மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட சிப் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இந்த சிப் செல்போன்களிலிருந்து வெளிப்படும் கதிர்வீச்சைக் குறைக்கும் என்றும், நோய்களை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்தது என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்திருந்த பேட்டியில், ``மாட்டுச்சாணம் ஒவ்வொருவரையும் காப்பாற்றும். வீட்டில் இந்த மாட்டுச்சாணத்தை வைத்தால், கதிர்வீச்சிலிருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

செல்போனிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு மனிதரைத் தாக்காமல் இந்த மாட்டுச்சாணத்தால் செய்யப்பட்ட சிப் பாதுகாக்கும். இந்த சிப்பை செல்போன்களில் பயன்படுத்தலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும். மாட்டுச்சாணத்தால் ஆன இந்த சிப்புக்கு `கவ்சத்வ கவாச்’ (Gausatva Kavach) என்று பெயரிடப்பட்டிருக்கிறது’’ என்றார்.

`கதிர்வீச்சால் ஏற்படும் ஆபத்திலிருந்து ஒருவர் தன்னை பாதுகாத்துக்கொள்ள இந்த சிப்பைப் பயன்படுத்துங்கள்’ என்றும் கத்திரியா கேட்டுக்கொண்டிருக்கிறார். இந்த சிப்பை குஜராத்தில் ராஜ்கோட்டைச் சேர்ந்த ஸ்ரீஜி கௌசலா 2019-ம் ஆண்டில் கண்டுபிடித்தது.

பசு

ராஷ்டிரிய காமதேனு ஆயோக், பசுக்களின் பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறது. மீன்வள, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் இந்த அமைப்பு, பண்டிகைகளின்போது மாட்டுச்சாணம் சார்ந்த பொருள்களைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், நாடு தழுவிய பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறது. வல்லபாய் கத்திரியா, தீபாவளிப் பண்டிகைக்கு சீனப் பொருள்களைப் பயன்படுத்துவதைத் தவிர்த்துவிட்டு, இந்தியப் பொருள்களை மக்கள் பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருக்கிறார். மேலும், மாட்டுச்சாண சிப் பிரதமரின் மேக் இந்தியா திட்டத்தை ஊக்கப்படுத்துவதாகவும் கூறியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/india/cow-dung-chip-protects-from-radiation-says-rashtriya-kamdhenu-aayog-chief

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக