Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

சென்னை: கஞ்சா வியாபாரியாக காவலர் மாறியது ஏன்? - அதிர்ச்சித் தகவல்கள்

சென்னை தலைமைச் செயலகம் அருகில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியில் கோட்டை காவல் நிலைய போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு கஞ்சா போதையிலிருந்த இரண்டு இளைஞர்கள் போலீஸாரிடம் சிக்கினர். அவர்களிடம் விசாரித்தபோது இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த ஜீவா, பாலமுருகன் எனத் தெரிய வந்தது. மேலும், அவர்கள் சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த பிரேம்குமாரிடம் கஞ்சா வாங்கிய தகவலைத் தெரிவித்தனர். அதனால், கோட்டை போலீஸார் பிரேம்குமாரிடம் விசாரித்தனர். அவரிடம் விசாரித்தபோதுதான் சென்னை ஆயுதப்படையில் காவலராகப் பணியாற்றும் அருண்பிரசாத், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதைக்கேட்டு கோட்டை போலீஸார் அதிர்ச்சியடைந்தனர்.

கஞ்சா பொட்டலம்

இதையடுத்து, காவலர் அருண்பிரசாத் குறித்த தகவல்களை போலீஸார் ரகசியமாக சேகரித்தனர். பின்னர் இதுகுறித்த தகவல் காவல் துறை உயரதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடனே அவர்கள், சட்டம் அனைவருக்கும் சமம். அதனால் காவலர் அருண்பிரசாத் மீது நடவடிக்கை எடுக்க க்ரீன் சிக்னல் காட்டினர். அதைத்தொடர்ந்து காவலர் அருண்பிரசாத்தை போலீஸார் கைது செய்து விசாரித்தனர். கஞ்சா வழக்கில் காவலர் அருண்பிரசாத் கைது செய்யப்பட்ட தகவல் காட்டு தீ போல காவல்துறையில் பரவியது.

Also Read: `180 கிலோ கடத்தல் கஞ்சா பறிமுதல்; எஸ்.ஐ சஸ்பெண்ட்!’- அதிரடி காட்டிய புதுக்கோட்டை எஸ்.பி

கோட்டை போலீஸார் கூறுகையில், ``சென்னையில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்துவருகிறோம். சென்னை தலைமைச் செயலகக் காலனி, அன்னை சத்யா நகரில் இளைஞர்கள் கஞ்சா போதையிலிருப்பதாக எங்களுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர்களிடம் விசாரித்தபோதுதான் கஞ்சா சப்ளை செய்த பிரேம்குமார், காவலர் அருண்பிரசாத் குறித்த தகவல்கள் தெரியவந்தது. காவலர் ஒருவரே கஞ்சா விற்பனையில் ஈடுபடும் தகவல் கிடைத்ததும் ஆதாரத்துடன் அவரைப் பிடிக்க திட்டமிட்டோம்.

பறிமுதல் செய்யப்பட்ட பைக்

காவலர் அருண்பிரசாத், தருமபுரியைச் சேர்ந்தவர். இவர் 2017-ம் ஆண்டு தமிழகக் காவல் துறையில் பணிக்குச் சேர்ந்துள்ளார். தலைமைச் செயலகம் பகுதியில் அருண்பிரசாத் பாதுகாப்பு பணிக்காகச் சென்றபோதுதான் ஜீவா, பாலமுருகன் ஆகியோருடன் பழகியுள்ளார். ஜீவாவும் பாலமுருகனும் கஞ்சா போதைக்கு அடிமையானவர்கள். இந்தச் சமயத்தில் காவலர் அருண்பிரசாத்துக்கு இருவரும் கஞ்சா கொடுத்துள்ளனர். அதன்பிறகு காவலர் அருண்பிரசாத்தும் கஞ்சா போதைக்கு அடிமையாகியுள்ளார்.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் குறித்த தகவல் காவலர் அருண்பிரசாத்துக்கு தெரியவந்துள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாதபோது சென்னையில் கஞ்சா விற்பனை இருமடங்கானது. மேலும் கஞ்சாவின் தேவை அதிகரித்தால் காவலர் அருண்பிரசாத், கஞ்சா விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இதற்காக கஞ்சா சப்ளை செய்யும் ஆட்டோ டிரைவர் ரமேஷ், மயிலாப்பூரைச் சேர்ந்த பிரேம்குமார் ஆகியோருடன் சேர்ந்து காவலர் அருண்பிரசாத் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோ

இதையடுத்து அருண்பிரசாத் தங்கியிருந்த புரசைவாக்கம் விடுதியில் அதிரடியாக சோதனை நடத்தினோம். அங்கிருந்து சிகரெட் வடிவிலான 3 கிலோ எடையுள்ள கஞ்சா பார்சலை பறிமுதல் செய்துள்ளோம். இதையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஆட்டோ டிரைவர் ரமேஷ், ஆயுதப்படைக் காவலர் அருண்பிரசாத், பிரேம்குமார் ஆகிய மூன்று பேரைக் கைது செய்துள்ளோம். கஞ்சா சப்ளை செய்த பயன்படுத்திய ஆட்டோ, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

கஞ்சாவை சிகரெட்டில் வைத்து புகைப்பதுண்டு. அதற்கு ஏற்ப சிகரெட் வடிவிலேயே காவலர் அருண்பிரசாத் டீம், கஞ்சாவை விற்று வந்துள்ளது. ஒருகாலத்தில் காவலர் அருண்பிரசாத்துக்கு கஞ்சாவை கொடுத்த தலைமை செயலக காலனியைச் சேர்ந்த ஜீவா, பாலமுருகனுக்கு கஞ்சா சப்ளை செய்யும் அளவுக்கு காவலரின் கை, இந்த பிசினஸில் ஓங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். காவலர் அருண்பிரசாத்தின் செல்போன் மற்றும் அவரின் கால் ஹிஸ்டரியை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். அவருடன் யார், யார் தொடர்பில் இருந்தார்கள் என்ற விசாரணை ரகசியமாக நடந்துவருகிறது.

சிகரெட் வடிவிலான கஞ்சா

காவலர் அருண்பிரசாத்தின் கஞ்சா விற்பனை, ஆயுதப்படை பிரிவிலிருக்கும் உயரதிகாரிகளுக்கு எப்படி தெரியாமல் போனது என்ற கேள்வி எழுந்துள்ளது. போலீஸ் விசாரணையில் காவலர் அருண்பிரசாத், அமைதியாகவே இருந்துள்ளார். அதனால் அருண்பிரசாத் மற்றும் அவரின் டீம் குறித்த கூடுதல் தகவல்களை கோட்டை போலீஸாரால் விசாரிக்க முடியவில்லை. மேலும் இந்தத் தகவல் மீடியாக்களுக்கு தெரிந்ததும் காவலர் அருண்பிரசாத்தை யாரும் வீடியோ, போட்டோ எடுத்துவிடாமலிருக்க இரவில் அவரை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் போலீஸார் அடைத்துள்ளனர்.

கஞ்சா விற்பனையில் காவலர் கைதான சம்பவத்தையடுத்து அவர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்தச் சம்பவம் சென்னை ஆயுதப்படை காவலர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-ar-police-over-ganja-sales

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக