Ad

வியாழன், 22 அக்டோபர், 2020

`முதலில் இலவசம், இப்போது 2 சதவீத கமிஷன்!' - பேடிஎம் கிரெடிட் கார்டு பயனர்கள் கவனத்திற்கு

கையில் பணமின்றி, கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்குவது பலருடைய வழக்கமாக உள்ளது. இப்படி கிரெடிட் கார்டு மூலம் பொருள்கள் வாங்குவதற்கு கடைகளில் ஸ்வைப்பிங் மிஷின் இருக்க வேண்டும். இந்த வசதி பெருவாரியான சிறு கடைகளில் இருப்பதில்லை. மேலும், பல கடைகளில் 200 ரூபாய்க்கு மேல் பொருள் வாங்கினால் மட்டுமே கடன் அட்டை பயன்படுத்த முடியும் என்பது போன்ற கட்டுப்பாடுகளும் உண்டு. அதனால் வாடிக்கையாளர்கள் கடன் அட்டை வைத்திருந்தாலும் அவர்களால் அனைத்துப் பொருள்களையும் கடனுக்குப் பெற முடியாது. மேலும் வங்கிகள் வியாபாரிகளிடம் பணப் பரிவர்த்தனைக்கு ஏற்ப கட்டணம் விதிக்கும்.

உதாரணமாக, ஒரு வாடிக்கையாளர் ஆயிரம் ரூபாய்க்கு கடன் அட்டை மூலம் ஒரு கடையில் பொருள் வாங்கினால் அந்த கடை உரிமையாளருக்கு வங்கி 15 ரூபாய் பிடித்தம் செய்துகொண்டு 985 ரூபாய் மட்டுமே வரவு வைக்கும். ஏறக்குறைய ஒன்றரை சதவிகிதம் பணத்தை கட்டணமாக வங்கி வியாபாரிகளிடம் வசூலிக்கும். அதனால் சில வியாபாரிகள் தமது கடைகளில் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு செய்து தருவதில்லை.

Paytm First

இந்தப் பிரச்னையை தீர்ப்பதற்கு பேடிஎம் தமது வாடிக்கையாளர்களுக்கு ஓர் எளிய வசதியை செய்து தந்தது. அதன்படி மாதம் 10,000 ரூபாய் வரை ஒருவர் தன்னுடைய பேடிஎம் அக்கவுன்ட்டில் தன்னுடைய கடன் அட்டை மூலம் பணம் செலுத்த முடியும். அந்தப் பணத்தை வைத்து வாடிக்கையாளர் தனது பேடிஎம் அக்கவுன்ட் மூலம் சிறு கடைகளில் பொருள்கள் வாங்க முடியும். பேடிஎம் நிறுவனம் வியாபாரிகளிடம் எந்தக் கட்டணமும் பெறுவதில்லை. அதனால் வியாபாரிகளும் தமது வாடிக்கையாளர்களுக்கு பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வசதியை செய்து தருவதற்கு ஆர்வமுடன் இருந்தார்கள்.

சுங்கச் சாவடிகளிலும் FASTag மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலும் பேடிஎம் மூலமே சுங்கச்சாவடி கட்டணங்களைச் செலுத்துகின்றனர். இவ்வாறாக பேடிஎம் இப்போது பெரும்பான்மையான இந்திய வாடிக்கையாளர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. இந்நிலையில், இப்போது வாடிக்கையாளர்கள் கடன் அட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு பேடிஎம் நிறுவனம் 2 சதவிகித தொகையை கட்டணமாக நிர்ணயித்துள்ளது. அதன் மூலம் ஒரு வாடிக்கையாளர் 10,000 ரூபாயை தனது பேடிஎம் அக்கவுன்டில் செலுத்தினால் அதற்கு இப்போது 200 ரூபாய் வாடிக்கையாளர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

Paytm First card Launching

இத்துடன் அந்த நிறுவனம் கடன் அட்டை மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 சதவிகித கேஷ்பேக் சலுகையும் வழங்குகிறது. மேலும் பண்டிகைக் கால சலுகையாக பேடிஎம்மில் இருந்து வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கிற்கு அல்லது மற்ற யு.பி.ஐ கணக்கிற்கு இலவசமாகப் பணத்தை அனுப்பும் சலுகையையும் வழங்கியுள்ளது. இதற்கு முன்பு இதுபோன்ற பணத்தை அனுப்புவதற்கு 5% கட்டணம் வசூல் செய்யப்பட்டது. கூகுள் பே, அமேசான் பே போன்ற மற்ற யு.பி.ஐ ஆப்களில் இதுபோன்ற பணம் அனுப்புவதற்கு கட்டணம் எதுவும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

பேடிஎம் நிறுவனம் கடந்த ஆண்டும் இதுபோல கடன் அட்டை மூலம் பணம் செலுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கத் தொடங்கியது. ஆனால், பெரும்பான்மையான வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு எழுந்ததால் இந்தக் கட்டணம் திரும்ப பெறப்பட்டது. என்றாலும் அந்த நிறுவனம் மீண்டும் அந்தக் கட்டணத்தைக் கொண்டு வந்திருப்பதன் மூலம் இந்தமுறை திரும்பப் பெறும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என்பதை அறிய முடிகிறது.

Paytm

``கடந்த பல மாதங்களாக ஒரு வாடிக்கையாளர் பேடிஎம் மூலம் கையில் பணம் இல்லாமல் பொருள்கள் வாங்கப் பழகியிருப்பார். மேலும் சிறிய கடைகளில்கூட பேடிஎம் மூலம் வாங்குவதற்கு வாடிக்கையாளர் பழக்கப்பட்டிருப்பார். இதன் மூலம் பெருவாரியான வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய கட்டணத்தைச் செலுத்தத் தொடங்குவார்கள். இதன் மூலம் நிறுவனத்திற்கு லாபம் கிடைக்கத் தொடங்கும்." என்பது பேடிஎம்மின் எண்ணம்.

இதேபோல இதுவரை வியாபாரிகளுக்கு இலவசமாகச் சேவை புரிந்து வரும் பேடிஎம் நிறுவனம் காலப்போக்கில் அதற்கும் கடன் அட்டை வழங்கும் வங்கிகள் போல கட்டணங்கள் வசூலிப்பதற்கு வாய்ப்புள்ளது. பேடிஎம் நிறுவனம் 2019-20-ம் ஆண்டு 2597 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2018-19-ம் ஆண்டு 4000 கோடி ரூபாய் வரை நஷ்டத்தைச் சந்தித்திருந்தது. 2020-ம் ஆண்டு இந்த நிறுவனம் தனது நஷ்டத்தை பெருமளவு குறைத்து இருக்கிறது. நிறுவனத்தின் தற்போதைய நடவடிக்கை லாப பாதையில் நிறுவனத்தைக் கொண்டு செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.

இப்போதைய டிஜிட்டல் இந்தியா காலத்தில் பணம் என்பது ஒரு லாபம் ஈட்டும் பண்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்திய ஜனத்தொகையில் நடக்கும் பணப் பரிவர்த்தனைகளை டிஜிட்டலாக மாற்றும்போது அதற்கு உதவும் நிறுவனங்கள் அதிக அளவு லாபம் ஈட்ட முடியும். அதனை இலக்காக வைத்துதான் பேடிஎம், அமேசான், கூகுள் போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் கால் பதித்துள்ளன. இந்திய மக்களை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு பழக்கப்படுத்துவதற்கு பல சலுகைகளை வாரி வழங்குகின்றனர்.

ஷியாம் சுந்தர்

இப்போது மக்களை டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு பழக்கப்படுத்திவிட்டதால் நிறுவனத்திற்கு லாபம் ஈட்டும் நோக்கில் கட்டணங்களை விதிக்கத் தொடங்குகிறார்கள். இனி கடன் அட்டை மூலம் பேடிஎம் wallet-ல் பணம் செலுத்தும்போது கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதனால் முடிந்த அளவு டெபிட் கார்டு, நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தி இந்தக் கட்டண விகிதங்களில் இருந்து வாடிக்கையாளர் தம்மை தற்காத்துக்கொள்ள வேண்டும்.

கடன் கலாசாரத்திற்கு பழக்கப்பட்ட சமூகம் அதிலிருந்து மீள்வது கடினம். அதனால் முடிந்தவரை கையிலோ, வங்கியிலோ காசிருந்தால் மட்டும் பொருள்கள் வாங்க வேண்டும் என்ற மனநிலையை வாடிக்கையாளர்கள் அடைய வேண்டும். இதன் மூலம் தேவையில்லாத பொருள்களை வாங்கிக் குவிப்பதும் தடுக்கப்படும். நம்முடைய சேமிப்பும் பத்திரமாக இருக்கும்.

- ஷியாம் சுந்தர்


source https://www.vikatan.com/business/news/paytm-charges-2-percent-to-users-who-topup-wallets-using-credit-card

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக