Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

`டெல்லியிலிருந்து வராத சிக்னல்; நாளை ஓ.பி.எஸ் முக்கிய ஆலோசனை!’ - பரபரப்பாகும் பொதிகை இல்லம்

`அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் யார்?’ என்கிற பஞ்சாயத்து உச்சத்தில் இருக்கும் நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்திலுள்ள பண்ணைவீட்டில் மூன்று நாள்களாக ஓ.பி.எஸ் ஆலோசனை நடத்தி வந்தார். கொங்கு மண்டலத்தில் இருந்து முன்னாள் காங்கேயம் எம்.எல்.ஏ செல்வி, திருப்பூர் முன்னாள் எம்.பி சிவசாமி, திருப்பூர் வடக்கு இளைஞர் பாசறை செயலாளர் சந்திரசேகர் என பல பிரமுகர்கள் ஓ.பி.எஸ்-ஐ சந்தித்துச் சென்றனர். இந்த நிலையில், இன்று மதியத்துக்கு மேல் சென்னைக்கு கிளம்பும் ஓ.பி.எஸ்., க்ரீன்வேஸ் சாலையிலுள்ள தனது இல்லத்தில் நாளை முக்கிய ஆலோசனையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓ.பி.எஸ்

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள், “வரும் 15-ம் தேதி மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாகத் தெரிகிறது. அதில், தன் மகன் ரவீந்திரநாத்-க்கு அமைச்சர் பொறுப்பு வாங்கிவிட ஓ.பி.எஸ் தீவிரமாக முயற்சிக்கிறார். ஆனால், இதுவரை டெல்லியில் இருந்து பாசிட்டிவ் சிக்னல் எதுவும் வரவில்லை.

இச்சூழலில், வழிகாட்டுதல் குழு அமைத்தே ஆகவேண்டும் என்பதில் அவர் தீர்மானமாக இருக்கிறார். ஒவ்வொரு சமூகத்திற்கும் இக்குழுவில் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ஓ.பி.எஸ் வலியுறுத்துவதால், கொங்கு பகுதி அமைச்சர்கள் இதற்கு உடன்பட மறுக்கின்றனர். சென்னையிலுள்ள ஓ.பி.எஸ்ஸின் பொதிகை இல்லத்தில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெறவிருக்கிறது. இதில்தான், அக்டோபர் 7-ம் தேதி அறிவிக்கப்பட வேண்டிய ‘யார் முதல்வர் வேட்பாளர்?’ என்கிற கேள்விக்கான விடை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. தன்னுடைய டிமாண்டுகள் நிறைவேற்றப்படவில்லை என்றால், தீவிரமான முடிவுகள் எடுக்கவும் ஓ.பி.எஸ் தயங்கமாட்டார்” என்றனர்.

Also Read: `எது நடக்கவிருக்கிறதோ, அது நன்றாகவே நடக்கும்!’ - ஓ. பன்னீர் செல்வம்

இந்த நிலையில், ‘தமிழக மக்கள் மற்றும் அ.இ.அ.தி.மு.க கழகத் தொண்டர்களின் நலனை கருத்தில் கொண்டே எனது முடிவுகள் இதுவரை இருந்துள்ளன. இனியும் அவ்வாறே இருக்கும். எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது! எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது!! எது நடக்கவிருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்!!’ என்று ஓ.பி.எஸ் இன்று காலை ட்விட் செய்திருப்பது கட்சிக்குள் அனலைக் கிளப்பியிருக்கிறது.

டீல் முடிந்துவிட்டது என்று ஒருசாராரும், பிரளயத்துக்கு ஓ.பி.எஸ் தயாராகிவிட்டார் என்று மற்றொரு சாராரும் கட்சிக்குள் ரகளையைக் கூட்டுகிறார்கள். ஆனால், `நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகுதான் ஓ.பி.எஸ் முடிவு எடுப்பார்’ என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால், அவரது `பொதிகை இல்லம்’ பரபரப்பாகியுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/ops-will-discuss-on-admk-issue-tomorrow-at-his-home

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக