Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

இந்தியாவில் இந்த சவால்களை சமாளிக்குமா டெஸ்லா... எலான் மஸ்க் டவீட்டும், சில சிக்கல்களும்!

சமீபத்தில் சீனாவில் டெஸ்லா நிறுவனம் செயல்பாட்டினைத் தொடங்கியது. அந்நிறுவனத்தின்`மாடல் 3’ என்னும் எலெக்ட்ரிக் கார் கடந்த டிசம்பரிலிருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் சீனாவில் 11,000 கார்களை விற்பனை செய்திருக்கிறது டெஸ்லா. இந்த நிலையில், சீனாவுக்கு அடுத்து இந்தியா மிகப்பெரிய சந்தை எனத் தெரிவித்திருக்கிறார் மஸ்க்.

``காத்திருப்பு முடிந்தது. நிச்சயமாக, அடுத்த ஆண்டு இந்தியாவில் செயல்பாட்டினைத் தொடங்குவோம்'' என சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில் எலான் மஸ்க் தெரிவித்திருக்கிறார். எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இந்தியா முக்கியத்துவம் அளித்துவரும் வேலையில் எலான் மஸ்க் இந்தக் கருத்தைத் தெரிவித்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.

முதல்முறை அல்ல...

ஆனால், இந்தியாவுக்கு வருவோம் என எலான் மஸ்க் தெரிவித்திருப்பது இது முதல்முறை அல்ல. ``எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான இறக்குமதி வரி இந்தியாவில் அதிகம். இதனால் டெஸ்லாவின் கார்கள் இந்தியர்களால் பயன்படுத்தப்பட முடியாத விலையில் இருக்கும்'' எனச் சில ஆண்டுகளுக்கு முன்பு ட்வீட் செய்திருந்தார் மஸ்க். இதேபோல, 2017-ம் ஆண்டும் இந்தியா வருவதாக அறிவித்திருந்தார். ஆனால், அப்போது 30% உதிரிபாகங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டதாக இருக்க வேண்டும் என அரசு அறிவித்தது. அதனால் 2017-ம் ஆண்டு இந்தியாவுக்கு டெஸ்லாவால் வரமுடியவில்லை.

Tesla plant in Fremont, California

கர்நாடகாவில் டெஸ்லா

இந்த நிலையில், டெஸ்லா ஆராய்ச்சி மையம் கர்நாடகாவில் அமையவிருப்பதாகவும், இதற்காக டெஸ்லா உயர் அதிகாரிகள் மற்றும் கர்நாடக அரசு அதிகாரிகள் சந்தித்து பேசியிருப்பதாவும் தெரிகிறது. இந்தியாவில் விற்பனையாகும் வாகனங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பங்களிப்பு என்பது 1% -க்கும் கீழ். ஆனால், ஆண்டுக்கு ஆண்டு இது சீராக உயர்ந்து வருகிறது.

யோசிக்க வைக்கும் மத்திய அரசின் முடிவு...

``அடுத்த ஆண்டு இந்தியாவில் இருப்போம்'' என எலான் மஸ்க் சொல்லியிருந்தாலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் குறித்து இந்திய அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் சில கொள்கை முடிவுகள் பற்றி டெஸ்லா நிறுவனம் கருத்து இதுவும் தெரிவிக்கவில்லை என்பது முக்கியமான விஷயம். மத்திய அரசாங்கம் அப்படி என்ன கொள்கை முடிவு வெளியிட்டது?

எலெக்ட்ரிக் வாகனங்களைப் பொறுத்தவரை, பேட்டரிதான் முக்கிய பங்கு வகிக்கிறது. வாகனத்தின் மொத்த விலையில் சுமார் 40% வரை பேட்டரியின் பங்கு இருக்கிறது. அதனால் எலெக்ட்ரிக் வாகனங்களை ஊக்குவிக்கும் விதமாக எலெக்ட்ரிக் வாகனத்திலிருந்து பேட்டரியைப் பிரிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அதாவது, வாகனத்தை வாங்கும்போது பேட்டரி இல்லாமல் வாங்கலாம். வாகனத்தை வாங்கியபின், அதை நிறுவனத்தின் பேட்டரியை வாங்கிக்கொள்ளலாம் அல்லது வேறு நிறுவனத்தின் பேட்டரியை வாங்கிப் பொருத்திக் கொள்ளலாம். இப்படிச் செய்வதன்மூலம் பேட்டரியின் விலை குறையும்; எலெக்ட்ரிக் வாகனத்தைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை உயரும் என மத்திய அரசு கருதுகிறது.

எதிர்க்கும் கார் நிறுவனங்கள்

இதன் தொடர்ச்சியாக இரு சக்கர மற்றும் மூன்று சக்கர எலெக்ட்ரிக் வாகனத்தை பேட்டரி இல்லாமல் பதிவு செய்வதற்கு சாலைப் போக்குவரத்து துறை அமைச்சகம் அனுமதி வழங்கியிருக்கிறது. அரசின் இந்த அனுமதிக்கு வரவேற்பு மட்டுமல்லாமல் எதிர்ப்பும் கிளம்பி இருக்கிறது.

``துறை சார்ந்த வல்லுநர்களின் பங்களிப்பு இல்லாமல், எந்தவொரு விவாதமும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது'' என மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மகேஷ் பாபு தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``உலகத்தின் எந்தவொரு நாடும் இப்படி ஒரு நடவடிக்கையை எடுத்ததில்லை. இதன் மூலம் பல குழப்பங்களுக்கு இந்த உத்தரவு விதை போட்டிருக்கிறது. ஒரு வாகனத்தைத் தயாரித்து சோதனை செய்து ஒரு நிறுவனம் விற்பனை செய்யும். இந்த நிலையில், பேட்டரி இல்லாமல் வேறு நிறுவனத்தின் பேட்டரியை இணைக்கும்பட்சத்தில் செயல்பாடு, பாதுகாப்புக்கு யார் பொறுப்பு ஏற்பார்கள் எனத் தெரியவில்லை'' என்றும் அவர் சொல்லி இருக்கிறார். ``ஒருவேளை வாகனத்தில் பிரச்னை ஏற்பட்டால் அது பேட்டரியால் ஏற்பட்டதா அல்லது வேறு பாகங்களால் உருவானதா என எப்படி அறிந்துகொள்ள முடியும்? இதன் மூலம் வாரண்டி கொடுப்பதில் சிக்கல் ஏற்படும். இதுகுறித்து மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்'' என்றும் அவர் கூறியிருக்கிறார்.

Tesla

எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பல கட்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, பேட்டரி மற்றும் வாகனத்தை வடிவமைத்து விற்பனை செய்கின்றன. இந்த நிலையில், பேட்டரி இல்லாமல் விற்க வேண்டும் என உற்பத்தியாளர்களை அரசு நிர்பந்திக்க முடியாது என்னும் கருத்தும் இருக்கிறது.

பேட்டரியின் விலை அதிகம் என்பதால், பேட்டரி இல்லாமல் விற்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஒரு வாகனத்தை விற்கும்போது அதிக விலையுள்ள பொருளுக்கான பங்கு, உற்பத்தி செய்தவர்களுக்குக் கிடைக்கவில்லை எனில், உற்பத்தியாளர்கள் ஏன் அந்தப் பொருளைத் தயாரித்து விற்க வேண்டும் என்னும் கேள்வியும் எழுந்திருக்கிறது.

இது தவிர, எலெக்ட்ரிக் வாகனங்களில் பல சிக்கல்கள் உள்ளன. விலை, சார்ஜ் ஏற்றும் மையத்தின் எண்ணிக்கை எனச் சில விஷயங்கள் உள்ளன.

எலெக்ட்ரிக் வாகனங்கள் பற்றிய கருத்துகள்

மேலும், இந்த வாகனம் வேகமாக ஓடாது, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்காது, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஏற்ற நாடு இந்தியா அல்ல, மின் கட்டணம் உயரும், அதிக தூரம் செல்ல முடியாது போன்ற கருத்துகளும் நிலவி வருகின்றன. இவை எல்லாம் உண்மைதானா அல்லது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட விஷயங்களா என்பதை மத்திய அரசாங்கம் விளக்க வேண்டும். இப்படி பல விதமான பிரச்னைகள் இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டாவது இந்திய சாலைகளில் டெஸ்லாவின் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஓடுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.



source https://www.vikatan.com/business/news/challenges-for-elon-musk-to-start-tesla-operations-in-india

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக