ஓய்வு பெற்றபிறகு அதிகமாக பென்ஷன் பெற விரும்புகிறவர்கள் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதியை மூன்றாவது முறையாக நீட்டித்திருக்கிறது தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு (EPFO). கூடுதல் பென்ஷன் பெற விரும்புகிறவர்கள் வருகிற 11-ம் தேதிக்குள் விண்ணப்பதை சமர்ப்பித்துவிட வேண்டும் என்று சொல்லி இருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தில் நிலவும் குழப்பமான நடைமுறைகளைப் பார்த்தால், கடைசி தேதியானது இன்னொரு முறைகூட நீட்டிக்கப்படுமோ என்கிற கேள்விதான் பிறக்கிறது!
தற்போதைய நிலையில், அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் மிகக் குறைந்த அளவிலேயே பென்ஷன் பெறுகின்றனர். இவர்கள் அதிகமாக பென்ஷன் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்தபின், இந்தக் கூடுதல் பென்ஷன் பெறும் திட்டத்தை தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு அறிவித்தது. இந்தத் திட்டத்தைக் கொண்டுவரும்போதே, இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், கூடுதல் பென்ஷனுக்கான பணம் எப்படிக் கிடைக்கும், எந்தப் பணத்தில் இருந்து எடுத்துத் தரப்படும், தற்போது கிடைக்கும் பென்ஷன் பணத்தைவிட எவ்வளவு அதிக பணம் கூடுதல் பென்ஷனாகக் கிடைக்கும் என்பது போன்ற கேள்விகளுக்கு எந்தத் தெளிவான விளக்கமும் இல்லை.
இதனால், கூடுதலாக எவ்வளவு பென்ஷன் கிடைக்கும் என்பது பற்றி ஒவ்வொருவரும் ஒரு கணக்கை சொல்கின்றனர். சிலர், நமது பி.எஃப் பணத்தில் இருக்கும் பணத்தை எடுத்து நமக்கே கூடுதல் பென்ஷனாகத் தரப்போவதாகச் சொல்கிறார்கள். இதனால், ஓய்வு பெற்றபிறகு நமக்குக் கிடைக்கும் பி.எஃப் பணம் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள். அப்படியானால், பி.எஃப் தொகை குறைவதை ஊழியர்கள் எப்படி சரிக்கட்டுவார்கள்? இன்னும் சிலர், கூடுதல் பென்ஷன் பெற கணிசமான தொகையை பி.எஃப் கணக்கில் கட்ட வேண்டும். அந்தப் பணத்தில் இருந்து கூடுதல் பென்ஷன் தரப்படும் என்கிறார்கள். ஆக, நம் பி.எஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து நமக்கே திரும்பத் தருவதுதான் கூடுதல் பென்ஷனா?
இப்படி பல கேள்விகள் இருக்க, இந்தக் கேள்விகளுக்கெல்லாம் சரியான பதிலைச் சொல்லி, பி.எஃப் சந்தாதாரர்கள் தெளிவான முடிவை எடுக்க உதவி செய்யாமல், கடைசி தேதியை மட்டும் தள்ளிவைத்துக்கொண்டே போவது சரியான விஷயமா? இந்தத் திட்டத்தில் இருக்கும் சாதக, பாதகங்கள் பற்றித் தெரியாமலேயே இதுவரை 16 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருக்கிறார்கள். இந்த விண்ணப்பங்களை எல்லாம் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு எப்போது பரிசீலனை செய்யும், கூடுதல் பென்ஷன் எப்போது தர ஆரம்பிக்கும் என்கிற கேள்விகளுக்கும் இப்போது விடை இல்லை!
பென்ஷன் என்பது ஓய்வு பெற்ற மக்களின் அடிப்படை வாழ்வாதாரம். ஓய்வு பெற்றவர்களுக்குக் கூடுதல் பென்ஷன் தர விரும்பினால், அதைப் பற்றி நன்கு யோசித்து, விவாதித்து, முன்கூட்டியே எடுத்துச் சொல்லி, மக்கள் சரியான முடிவை எடுக்க உதவுவதுதான் தொழிலாளர் சேமநல நிதி அமைப்பு செய்யும் வேலையாக இருக்கும். அதை விட்டுவிட்டு, தானும் குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதால் என்ன பயன்?
- ஆசிரியர்
source https://www.vikatan.com/personal-finance/money/confused-in-hike-pension-plan