Ad

ஞாயிறு, 7 மே, 2023

`கோளை விழுங்கிய நட்சத்திரம்' பூமிக்கு ஆபத்து வருமா...? ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்ன?

சில நாட்களுக்கு முன் நட்சத்திரம் ஒன்று ஒரு கோளை விழுங்கும் காட்சிகளை விஞ்ஞானிகள் குறும்படமாக எடுத்து வெளியிட்டனர். இந்த நிகழ்வு இங்கிலாந்திலிருந்து வரும் நேச்சர் (Nature) என்ற பத்திரிகையில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஆராய்ச்சி கட்டுரையாக வெளிவந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த மாதிரி நிகழ்வுகள் இதற்கு முன் நடந்துள்ளதா..? இனிமேலும் நடக்குமா? நாம் வசிக்கும் பூமி உள்ள சூரிய குடும்பத்தில் இதே போல நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதா என அடுத்தடுத்து பலரும் கேள்விகளை கேட்டனர்.. அதற்கான பதிலை தெரிந்துகொள்ளும் முன்பாக, இந்த சம்பவத்தைப் பற்றி கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் (California Institute of Technology) ஒரு விண்வெளி ஆராய்ச்சி கூடம் உள்ளது. இதனை கல்டெக் (Caltech) என சுருக்கமாக அழைப்பார்கள். அங்கு 2020-ம் ஆண்டு மே மாதம் கிசாலே டி (Dr. Kishalay De) என்ற இளம் ஆராய்ச்சியாளர் அகுய்லா நட்சத்திர கூட்டத்தை  (Aquila constellation) ஆய்வு செய்து கொண்டிருந்தார். இந்த நட்சத்திர கூட்டம் பார்க்கப் பருந்து போல் காட்சியளிக்கும்.

ZTF SLRN-2020 |கோளை விழுங்கிய நட்சத்திரம்

அப்போது ஒரு நட்சத்திரத்தின் ஒளி நூறு மடங்கு அதிகமானது. இப்படி பளீரென 10 நாட்களுக்குப் பிரகாசித்தது. பின்னர் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பியது. அந்த நேரத்தில் நிறைய விண்வெளி தூசிகள் தோன்றியது. அவை அமர நீண்ட நேரம் எடுத்தது.  இந்த நிகழ்வை டாக்டர் கிசாலே டி குறும்படமாகப் பதிவு செய்தார். பின்னர் இந்த நட்சத்திரம் ZTF SLRN-2020 எனப் பெயரிடப்பட்டது.

இந்த குறும்படத்தை அன்றிலிருந்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் (Harvard University),  மசசூசட்தொழில்நுட்ப நிறுவனம் (Massachusetts Institute of Technology) மற்றும் கல்டெக்கும் இணைந்து ஆராய்ச்சி செய்து வந்தனர். இந்த ஆய்வு மூன்று ஆண்டுகளாக நடந்தது.  பின்னர் ஒரு வழியாக அந்த குறும் படத்தில் ஒரு  நட்சத்திரம் தன் அருகே சுற்றிக் கொண்டிருந்த ஒரு கோளை விழுங்கும் நிகழ்வுதான் பதிவாகிறது எனக் கண்டறிந்தனர்‌. அந்த நட்சத்திரம் நம் சூரியன் போலவே உருவத்தில் இருந்தது. அது விழுங்கிய அந்த கோள், நம் பூமியை விட 11 மடங்கு பெரிய கோளான வியாழன் அளவுக்கு இருந்தது.

அறிவியல் வரலாற்றில் முதன்முறையாக...   

இது வரை, இரு நட்சத்திரங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இணையும் நிகழ்வுகளை இருபது முறைக்கும் மேலாக ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வு சிவப்பு நோவா (red novae) என அழைக்கப்படுகிறது. நட்சத்திரம் ஒன்றை ஒன்று கவர்ந்து இணையும் போது போது அதிக ஒளி உண்டாகும். ஆனால் ஒரு நட்சத்திரம் ஒரு கோளை விழுங்கும் நிகழ்வைப் பதிவு செய்வது இதுவே முதல் முறை. மேலும் இந்த நிகழ்வின் போது சிறிய அளவிலேயே ஒளி உண்டாகிறது.

`ஒரு நட்சத்திரம் தன்னைச் சுற்றிவரும் கோளை விழுங்குகிறது' என்ற உண்மை டாக்டர் கிசாலே பதிவு செய்த இந்த குறும்படம் மூலமாக இந்த உலகத்திற்கு தெரிய வந்துள்ளது. நிச்சயம் இந்த ஆராய்ச்சி எதிர்கால சந்ததிகளுக்கு அதிக பயனுள்ளதாக அமையும்.

சூரியன் தனக்கு அருகில் உள்ள புதன் கோளை விழுங்கினால் பார்க்க எப்படி இருக்கும்? இந்த கேள்வி ஆராய்ச்சியாளர்களைத் துளைத்து எடுத்தது. அவர்களின் கற்பனை ஆவலுக்கு ஏற்றார் போல நடந்துள்ளது இந்த நிகழ்வு.

இந்தக் காட்சிகளை பார்த்தவுடன் இதற்கு முன் இப்படி நடந்துள்ளதா..? நாம் வசிக்கும் பூமியும் சூரியனைச் சுற்றிவரும் ஒரு கோள் தானே. சூரிய குடும்பத்தில் இத்தகைய நிகழ்வுகள் நடக்குமா என்ற கேள்வி எழுகிறதா? அதை பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ZTF SLRN-2020 |கோளை விழுங்கிய நட்சத்திரம்

சூரியன் மாதிரி சுற்றும் எண்ணற்ற  நட்சத்திரங்கள்...

இந்த பிரபஞ்சம் விசித்திரமானது. கற்பனைக்கு எட்டாத வகையில் பரந்து விரிந்தது. மேலும் இங்கு எல்லாமே தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. பூமி தன்னைத்தானே மணிக்கு 1670 கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இவ்வளவு வேகத்தில் தன்னைத்தானே சுற்றும் பூமி  சூரியனையும் சுற்றி வருகிறது. இதன் வேகம் மணிக்கு 107,208 கிலோமீட்டர் ஆகும். இந்த வேகத்தில் பயணித்தால் நாம் சந்திரனை நான்கு மணி நேரத்தில் சென்றடையலாம். நம் பயண வேகம் இத்துடன் நிற்கவில்லை. சூரியன் நாம் வாழும் பூமியை மட்டும் அல்ல இதன் ஆளுமைக்கு  உட்பட மற்ற  கிரகங்களையும், அவைகளின் நிலாக்களையும், சுற்றியுள்ள கற்கள் மற்றும் தூசிகளையும் இழுத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. சூரியனின் இந்த பயண வேகம் மணிக்கு 8 லட்சத்து 28 ஆயிரம் கிலோமீட்டராகும்.

ஆக,  "நாம் குறட்டை விட்டுத் தூங்கினாலும் பயணித்துக் கொண்டிருக்கிறோம்" என்பது உண்மை. பூமி சூரியனைச் சுற்றி வர ஒருவருடம் எடுத்துக்கொள்கிறது என அறிவோம். "இந்த சூரியன் தலை தெரிக்க எதைச் சுற்றுகிறது?" என்ற கேள்வி சுவையானது.

நமது கிருஷ்ணர் ஆள்காட்டி விரலில் ஒரு சுற்றிக் கொண்டிருக்கும் சக்கரத்தைப் பார்த்திருப்பீர்கள். அதனை நம் நட்சத்திர கூட்டமான பால்வெளி திரளுடன் ஒப்பிடலாம். இங்கு நம் சூரியன் மாதிரி எண்ணற்ற  நட்சத்திரங்கள் சுற்றி கொண்டுள்ளன. கிருஷ்ணரின் ஆட்காட்டி விரலைக் கருந்துளையுடன் ஒப்பிடலாம். கருந்துளையின் சக்தியால்தான் அனைத்து நட்சத்திரங்களும் மட்டுமல்ல நம் சூரியனும் அதி வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

ஆமாங்க, அந்த சூரியன் கருந்துளையைச் சுற்றி வருகிறது. அந்த கருந்துளையை ஒரு முழு சுற்று சுற்றி வரச் சூரியன் சுமார் 22.5  கோடி ஆண்டு முதல் 25  கோடி ஆண்டு எடுத்துக் கொள்கிறது. இதனால் ஒவ்வொரு வினாடியும் நாம் புதுமையான இடத்தில் பயணிக்கிறோம் என புரிந்து கொள்ளலாம். இதனால் நாம் கடந்து வந்த இடத்திற்கு மீண்டும் செல்வது முடியாத காரியம் !

ZTF SLRN-2020 |கோளை விழுங்கிய நட்சத்திரம்

25 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை ஜுராசிக் காலம் என்பார்கள். இந்த காலத்தில் தான் டைனோசரஸ் தோன்றியது. பின்னர் அடுத்த 19 கோடி ஆண்டு காலம் பூமியில் இவை வியாபித்திருந்தன. ஆட்டம் போட்டன.  6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் இவை தீடீரென முற்றிலும் அழிந்தன. அதாவது நம் சூரியன்   கருந்துளையை ஒரு சுற்று சுற்றுவதற்குள் அதனுடன் பயணிக்கும் பூமியில் இத்தனையும் நடந்து முடிந்துள்ளது!

மணிக்கு 8 லட்சத்து 28 ஆயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் சூரியன்  கருந்துளையை ஒரு சுற்றுச் சுற்ற 25 கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது என்றால் பால்வெளி திரள் எவ்வளவு பெரியது எனக் கற்பனை செய்து பாருங்களேன்.

சூரியன் வேகமாக கருந்துளையை சுற்றுவது ஏன்?

"ஏன் சூரியன் அலறியடித்து இவ்வளவு வேகத்தில் கருந்துளையைச் சுற்றுகிறது?" என்ற கேள்வின் பதில் வியப்பளிக்கிறது.

 கருந்துளைக்கு அதிக உப்பு சக்தி உள்ளது.  அதனால்  அருகில் உள்ள ஒவ்வொரு நட்சத்திரங்களையும் இழுத்து விழுங்கிக் கொண்டு இருக்கிறது. அதனால் கருந்துளையின் ஈர்ப்பு சக்தி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கட்டுரையாளர்: பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம்

தண்ணீரில் ஏற்படும் சுழலைப் பார்த்திருப்பீர். அந்த சுழல் தன் அருகில் உள்ள பொருட்களைத் தன்னைச் சுற்றிச் சுற்றி வரவைக்கும். அந்த பொருள்களும் சுற்றி வந்தவாறு படிப் படியாகச் சுழல் அருகில் நெருங்கும். பின்னர் அவைகளைச் அந்த சுழல் விழுங்கிக் கொள்ளும். இது மாதிரிதான் கருந்துளை    நட்சத்திரங்களையும் கோள்களையும் தன்னைச் சுற்றவைக்கும். அவை சுற்றிக் கொண்டே கருந்துளையை நெருங்கும். பின்னர் அவைகளை ஒன்றன் பின் ஒன்றாக  விழுங்கும் ! 

 ஆமாங்க.. நம் சூரியனையும் ஒரு நாள் இந்த கருந்துளை விழுங்கி ஏப்பமிடும் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே மாதிரி  பூமி மட்டும் அல்ல பிற கோள்களும்  அதிவேகமாகச் சூரியனைச் சுற்றி வருகிறது. எட்டு கோள்களில் சூரியனுக்கு மிக அருகில் இருபது  புதன்தான். இந்த புதன் கோள்தான் பிற கோள்களை விட அதி வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. இதன் வேகம் மணிக்கு சுமார் 1,80,000 கிலோ மீட்டராகும். சூரியன் இந்த கோளை படிப்படியாக தன் நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் சூரியன் புதன் கோளை விழுங்கி ஏப்பமிடும்! புதன் கோள் மட்டும் அல்ல சூரியனைச் சுற்றிவரும் எல்லா கோள்களுக்கும் அதன் நிலாக்களுக்கும் இதுதான் நிலை!  அத்தனையையும் தின்று  தீர்த்து சூரியன் தன் பசியை ஆற்றிக் கொள்ளும்.



source https://www.vikatan.com/environment/disasters/will-the-planet-swallowed-star-be-a-danger-to-earth-what-do-the-researchers-say

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக