Ad

சனி, 13 மே, 2023

அண்ணாமலை - சசிகாந்த் செந்தில்; கர்நாடகத் தேர்தலில் `முன்னாள் ஐ.ஏ.எஸ்' டீம் கலக்கியது எப்படி?

நாடே பரபரப்பாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த கர்நாடகத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைப்பதை உறுதி செய்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த பாரதிய ஜனதாவால் 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. அதேபோல மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இம்முறை 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்று பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. கர்நாடகத்தில் ஆளும் பா.ஜ.க-வுக்கு மக்கள் மத்தியில் இருந்த எதிர்ப்பு மனநிலையை டெல்லி மேலிடம் உணர்ந்தே இருந்தது. அதனால் வழக்கத்தைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் பிரதமர் மோடி பரப்புரைகளை மேற்கொண்டார். அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா என பல தேசியத் தலைவர்களும் கர்நாடகாவில் சுற்றிச்சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டனர். கட்சியின் மாநில முகங்களை பா.ஜ.க இந்த முறை பெரிதாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

மோடி, ஜே.பி.நட்டா

அதே சமயம் காங்கிரஸ் முகாமில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டவர்கள் பரப்புரையில் ஈடுபட்டபோதும், கட்சியின் மாநில மூத்த தலைவர்களான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரும் சுற்றிச்சுழன்று பரப்புரை நடத்தினர். இவர்களைத் தாண்டி தமிழகத்திலிருந்து இருவர் பெயரும் கர்நாடகத் தேர்தல் களத்தில் ஒலித்துக்கொண்டே இருந்தது. இருவருமே தமிழர்கள். இருவருமே கர்நாடகாவில் அரசு அதிகாரிகளாகப் பணியாற்றியவர்கள். கர்நாடகாவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றிவிட்டு, விருப்ப ஓய்வுபெற்று விலகி, இன்றைக்கு தமிழக பா.ஜ.க தலைவராக இருக்கும் அண்ணாமலை ஒருவர். மற்றொருவர் கர்நாடகாவில் ஐ.ஏ.எஸ் அதிகாரியாகப் பணியாற்றிவிட்டு விருப்ப ஓய்வுபெற்று காங்கிரஸில் இணைந்த சசிகாந்த் செந்தில்.

ராகுல் காந்தி, சித்தராமையா, டி.கே.சிவகுமார்

கர்நாடக தேர்தல் துணை பொறுப்பாளராக பா.ஜ.க மேலிடத்தால் நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. வாக்குறுதிகள், வேட்பாளர்கள் தேர்வு என எல்லாவற்றிலுமே அண்ணாமலை மிக முக்கிய நபராக இருந்தார். பெரும்பாலும் ஹெலிகாப்டரிலேயே அண்ணாமலை ஒவ்வொரு பகுதிக்கும் சென்று வந்தார். அண்ணாமலை சென்ற ஹெலிகாப்டரில் வைத்து தேர்தலுக்கு பணம் கடத்துவதாக காங்கிரஸ் கட்சி சர்ச்சையைக் கிளப்பியது. ஆனால், தேர்தல் ஆணையம் அப்படி எதுவும் நடக்கவில்லை என விளக்கமளித்தது. தேர்தல் பரப்புரை சமயத்தில் பிரதமர் மோடி தமிழகம் வந்தபோதுகூட, அவரை வரவேற்க அண்ணாமலை தமிழகம் வராமல், தேர்தல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். உடுப்பி, சிக்கமங்களூரு, தாவணகெரே, ஷிவமோகா, மாண்டியா, ஹாசன் பெங்களூரு, உத்தர கன்னடா மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கும் கோலார் உட்பட மொத்தம் 86 தொகுதிகள் நேரடியாக அண்ணாமலையின் பொறுப்பில் விடப்பட்டன. பரப்புரை முழுவதும் கன்னடத்திலேயே பேசி மக்களைக் கவர்ந்தார். ஆனால் பெங்களூருவைத் தாண்டி பிற பகுதிகளில் பா.ஜ.க-வுக்கு காங்கிரஸைவிடக் குறைவான எண்ணிக்கையிலேயே வெற்றி கிடைத்திருக்கிறது.

அண்ணாமலை பிரசாரம்

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் கர்நாடகத் தேர்தலுக்கான பணிகளை ஓராண்டுக்கு முன்பே தொடங்கிவிட்டது. அப்போதே 3 வார் ரூம்கள் அமைக்கப்பட்டிருந்தன. அதன் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர் சசிகாந்த் செந்தில். ஓராண்டாக அவர் கர்நாடகாவிலேயே தங்கிப் பணியாற்றிக் கொண்டிருந்தார். கர்நாடகாவில் அரசுக்கு எதிரான அதிருப்தி உணர்வை கட்டியெழுப்பியதில் தொடங்கி, பிரசார யுக்திகளை வடிவமைத்தது என நுணுக்கமான பணிகளை கச்சிதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார் சசிகாந்த் செந்தில்.

அவருடன் இணைந்து கர்நாடக தேர்தல் களத்தில் பணியாற்றிய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரிடம் இது தொடர்பாகப் பேசினோம். “அண்ணாமலை தமிழக பா.ஜ.க தலைவராக இருந்ததால் அவர்மீது இயல்பாகவே ஊடக வெளிச்சம் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் சசிகாந்த் செந்தில், சத்தமே இல்லாமல் அவர் பணிகளைச் செய்துகொண்டிருந்தார். இந்த ஆண்டு கர்நாடாவில் நல்ல மழை பெய்தும்கூட ஊரகப் பகுதிகளில் முறையான குடிநீர் விநியோகம் இல்லை.

சாலைகள், மின்சார வசதிகள் என கிராமப்புற மக்களிடையே பா.ஜ.க-வுக்கு எதிரான கொதிப்பான மனநிலையே இருந்தது. அதை நன்றாக உணர்ந்து பா.ஜ.க-வின் டெவலப்மென்ட் பாலிடிக்ஸ் பொய் என்பதை உடைத்துப்பேசும் வகையில் பிரசாரங்களை வடிவமைத்தார். பே-சி.எம் போன்ற முயற்சிகள் பரவலான வரவேற்பைப் பெற்றன. அரசுக்கு எதிரான ஊழல்களை கனக்கச்சிதமாக மக்கள் மத்தியில் சேர்க்கும் முயற்சிகளை மேற்கொண்டார். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோரைத் தாண்டி இந்த வெற்றியில் சசிகாந்த் செந்திலுக்கும் பெரும்பங்கு இருக்கிறது” என்கின்றனர்.

சசிகாந்த் செந்தில்

கர்நாடகத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து... சசிகாந்த் செந்திலை நாடாளுமன்றத் தேர்தலிலும் முழுமையாகப் பயன்படுத்த காங்கிரஸ் மேலிடம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பா.ஜ.க தோல்வியடைந்திருந்தாலும் அண்ணாமலையின் உழைப்பை குறைத்து மதிப்பிட முடியாது என்கின்றனர் பா.ஜ.க-வினர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/annamalai-and-sasikanth-senthil-how-ex-ias-team-succeeded-in-karnataka-assembly-polls-2023

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக