Ad

சனி, 13 மே, 2023

"இனி ஜம்மு காஷ்மீரில் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பாஜக-வுக்கு இருக்காது!" - உமர் அப்துல்லா

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் இந்திய அளவில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. பிரதமர் மோடி சுமார் 40 முறைக்கும் மேல் கர்நாடகாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பலமுறை தேர்தல் பிரசாரத்துக்காக கர்நாடகாவில் வலம் வந்தனர்.

மோடி

இந்த நிலையில்தான், கர்நாடகத் தேர்தலை ஒட்டுமொத்த இந்தியாவும் கவனித்தது. இந்தத் தேர்தல் அடுத்த ஆண்டு வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகவே கருதப்பட்டது. ஆனால், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியமைக்கவிருக்கிறது. இந்த வெற்றிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.

இந்த தேர்தல் வெற்றி குறித்து ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாடு கட்சித் தலைவருமான உமர் அப்துல்லா, ``பா.ஜ.க தங்கள் வழக்கம்போல் தேர்தல் சூழ்நிலையை வகுப்புவாதமாக்க முடிந்தவரை முயன்றது. அதற்காக பஜ்ரங் பலி, இந்து-முஸ்லிம், இந்து மதம் ஆகியவற்றைக்கூட பிரசாரத்தில் பயன்படுத்தினர். ஜனநாயக நாட்டின் பிரதமர் மத அடிப்படையில் தீவிரமாக சொற்பொழிவு செய்துவந்தார். இருந்தபோதிலும், மக்கள் இந்த வெறுப்புப் பிரசாரத்தைக் கண்டுகொள்ளாமல், காங்கிரஸ் மூலம் பா.ஜ.க-வை ஓரங்கட்டியிருக்கிறார்கள்.

உமர் அப்துல்லா

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவிருப்பதால், இது ஒரு நல்ல செய்தி. நாடு முழுவதும் உள்ள மக்களும் வகுப்புவாத அரசியலை நிராகரித்து, நாட்டின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்காக வாக்களிப்பார்கள் என்று நான் நம்புகிறேன். இந்தத் தேர்தலின் தாக்கத்தால்...இனி ஜம்மு காஷ்மீரில் தேர்தலை அனுமதிக்கும் தைரியம் பா.ஜ.க-வுக்கு இருக்காது" எனத் தெரிவித்திருக்கிறார். 



source https://www.vikatan.com/government-and-politics/politics/no-way-bjp-will-have-courage-omar-abdullahs-prophecy-for-jk-after-karnataka

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக