Ad

வெள்ளி, 5 மே, 2023

இன்ஸ்டாகிராம் மூலம் ஆர்டர்கள்; ஓவியத்தில் அசத்தும் மாற்றுத்திறனாளி மாணவி!

பிறவியிலேயே பேச்சுத்திறன் இழந்தபோதும் பெற்றோரின் ஆதரவோடு தனித்திறமைகளை மேம்படுத்தி, ஓவியங்களை வரைவதன் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெற்று ஜொலிக்கிறார், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த மாணவி அப்ரா சாலிஹா.

பெற்றோருடன்...

கோவை, மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அப்ரா சாலிஹா. பிறவியிலேயே இவருக்கு செவித்திறன் மற்றும் பேச்சுத் திறன் இல்லை. தற்போது 19 வயதாகும் இவர், தன் தனித்திறமைகளை வளர்த்துக்கொண்டு, அதில் அசத்தியும் வருகிறார். 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தற்போது டிப்ளோமா இன் மல்டிமீடியா இன்ஜினீயரிங் படித்து வருகிறார். அவரைச் சந்திக்க மேட்டுப்பாளையம் சென்ற நம்மை, அப்ரா சாலிஹாவின் தந்தை முகமது அப்துல்லா வரவேற்றார். அவரிடம் பேசினோம்.

``எங்கள் குடும்பம் ஒரு விவசாயக் குடும்பம். கொரோனா தொற்றுக் காலத்துக்கு முன்பு, முழு நேரமாக விவசாயம்தான் செய்து வந்தேன். தற்போது வீட்டிலேயே ஹேண்ட்மேட் சோப்பு செய்து வருகிறேன். என் மூத்த மகள் அப்ராவுக்கு செவித்திறன் பிரச்னை, பிறந்து மூன்று மாதங்களுக்குப் பின் எங்களுக்குத் தெரிய வந்தது.

செவித்திறன் குறைபாட்டால், ஆங்கில வழிக்கல்வி கற்பதில் சில சவால்கள் இருந்தன. அதனால், தமிழ் மீடியம் பள்ளியில் சேர்க்க முடிவு செய்தோம். அப்சராவின் படிப்புக்காக சொந்த ஊரான குன்னூரை விட்டு, மேட்டுப்பாளையம் பகுதிக்கு வந்தோம். சிறுவயதிலேயே அவருக்கு ஓவியத்தின் மீது தனி ஆர்வம் இருந்தது. அவரை வளர்த்தெடுத்ததில் என் மனைவிக்கும் இந்தச் சமூகத்துக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு" என்றார்.

ஓவியம் வரையும் அப்ரா சாலிஹா

அப்ராவின் அம்மா அனீஸ் பாத்திமா கூறும்போது, ``குழந்தைக்கு பிரச்னை இருப்பது தெரிய வந்தபோது உடைந்துபோனோம். செவித்திறன் குறைபாட்டால் அப்ராவின் பேச்சுத் திறனும் பாதிக்கப்பட்டது. போகாத மருத்துவமனை இல்லை, பார்க்காத மருத்துவர் இல்லை. பல மருத்துவர்கள், எலெக்ட்ரானிக் சாதனம் பொருத்த வேண்டிய `cochlear implant’ சிகிச்சை செய்ய வேண்டியது இருக்கும் என்று அறிவுறுத்தினர். அன்றைக்கு, அரசு மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை செய்யும் வசதிகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்கும் அளவுக்கு அப்போது எங்களிடம் பொருளாதாரம் இல்லை. அதைப் பற்றிய விழிப்புணர்வும் இல்லை.

அப்ராவை வளர்ப்பதில் சிரமம் என்று எதுவும் இருந்தது இல்லை. சிறுவயதில் இருந்தே அவருக்கு கலைகளின் மீது ஆர்வம் இருந்தது. கொரோனா காலத்தில், ஓவியத்தை திறன்பட வரையப் பழகினாள். ஒருவரின் புகைப்படத்தைப் பார்த்து அப்படியே ஓவியமாக வரையும் திறமை அவருக்கு உண்டு. அவர் ஓவியமாகத் தீட்டும் படங்களை, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரே எடிட் செய்து பதிவிடுவார். ஒரு கட்டத்தில் அதற்கு வரவேற்பு கிடைக்கவே, நிறைய ஆர்டர்கள் வரத் தொடங்கின. அது ஒரு கூடுதல் வருமானமாக அமைந்தது. ஓவியக் கண்காட்சிகளுக்கும் ஓவியங்களை வரைவது உண்டு.

சமீபத்தில் புத்தக கண்காட்சியில் அப்ராவின் ஓவியத்தைப் பார்த்த ராசா எம்.பி மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் எஸ்.பி அம்ரித் ஆகியோர் பாராட்டினர். அப்ரா, எது செய்தாலும் அதைச் சிறப்பாகச் செய்ய ஊக்குவிக்கிறோம். `உன்னால் முடியாது’ என்று நாங்கள் எதையும் அவரிடம் கூறியதில்லை.

குழந்தைகளுக்கு குறைபாடு எதுவும் இருக்கும்பட்சத்தில் அவர்களுக்கு நிச்சயமாகத் தனித்திறமையும் இருக்கும். அதைக் கண்டறிய பெற்றோர்கள் உதவ வேண்டும். சிறப்புக் குழந்தைகளை பாரமாகக் கருதாமல் வரமாக எண்ண வேண்டும்" என்றார்‌ அனீஸ் பாத்திமா.

தன் நேர்த்தியான ஓவியங்களின் மூலம் பல நூறு வார்த்தைகள் பேசிய அப்ராவுக்கு, இன்னும் பல சாதனைகள் செய்ய நம் வாழ்த்துகளைச் சேர்த்தோம்.



source https://www.vikatan.com/features/physically-challenged-girl-s-achievement-in-painting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக