தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை என்றால் இருவரில் யாரிடம் குறை இருந்தாலும் பெண்ணையே விமர்சிக்கிறது இச்சமூகம். இவ்வாறான பேச்சுகளில் இருந்து தப்பிப்பதற்காகவும், குழந்தை பெறும் ஆசையை நிவர்த்தி செய்து கொள்ளவும் மக்கள் கருத்தரிப்பு மையங்களை அணுகுகிறார்கள். ஆனால் கருத்தரிப்பு மையங்கள், அனைத்தும் தனியார் கைவசம் உள்ளன, அரசு மருத்துவமனைகளில் கருத்தரிப்பு மையங்கள் இல்லை. இதனால் குழந்தை பெறும் கனவு பெரும்பான்மையான ஏழை எளிய தம்பதிகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது.
மாவட்டம்தோறும் அரசு செயற்கை கருத்தரிப்பு மையங்கள் அமைக்க வலியுறுத்தி, சமூக ஆர்வலர் அய்யா என்பவர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு அளித்துள்ளார். செயற்கை கருத்தரிப்பு மையம் வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவரிடம் பேசினோம்...
``தமிழ்நாட்டில் அதிகளவில் தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் உள்ளன. செயற்கை கருத்தரிப்புக்கு சுமார் 90 ஆயிரம் ரூபாயிலிருந்து 14 லட்சம் வரை செலவாகிறது. இந்தச் செலவுகளை பார்த்தால் அறிவியல் கண்டுபிடிப்புகள் ஏழைகளுக்குப் பயன்படுவது இல்லை என்பது விளங்கும். தனியார் செயற்கை கருத்தரிப்பு மையங்களுக்கு கட்டண வரையறையும் அரசால் நிர்ணயிக்கப்பட வில்லை.
இதனால் தனியார் மருத்துவமனைகள் அதிக லாபத்திற்காக மக்களைச் சுரண்டுகின்றன. கருத்தரித்தலில் சிக்கல் இருந்தால் பெண்ணையே குறைசொல்கிறது சமூகம். இப்பேச்சுகளை தவிர்க்க, வசதி படைத்த பெண்ணாக இருந்தால் எளிதில் கருத்தரிப்பு சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
ஆனால் ஏழை எளிய மக்கள் கடன் வாங்கி செயற்கை கருத்தரித்தல் சிகிச்சைக்கு செலவு செய்கின்றனர். ஒருமுறை கருத்தரித்தல் சிகிச்சை தோல்வியுற்றால், மறுபடியும் கடன் பெற்றே அந்தச் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். இதனால் அவர்களுக்கு பொருளாதாரச்சுமை அதிகமாகிறது. செயற்கை கருத்தரிப்பு மையங்களை அரசு தொடங்கினால் குறைந்த கட்டணத்தில் கருத்தரித்தல் சேவை சாத்தியமாகும்.
இதனால் ஏழை எளிய மக்களும் பயன்பெறுவர். தனியார் கருத்தரித்தல் மையங்களில் சட்டத்துக்குப் புறம்பான குற்றங்கள் நடப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகின்றன. இந்தத் தவறுகள் அரசின் கருத்தரிப்பு மையங்களில் நடப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. மக்களுக்குத் தேவையான சேவை அம்சங்களை அரசு நடத்தும்போது நம்பகத்தன்மை இருக்கும்.
தனியார் மருத்துவமனைகளில் இதயம், மூளை உள்ளிட்ட உடலுறுப்பு சிகிச்சைகளில் ஏற்படும் தவறுகள் குறித்த வழக்குகளை நீதிமன்றத்தில் விசாரிக்கும்போது, அது குறித்து விளக்கம் கேட்க அரசு தரப்பு மருத்துவரிடம் என்ன தவறு நேர்ந்திருக்கும் என்பதை நீதிமன்றம் கேட்டு அறியும். ஆனால் அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் சிறப்பு மருத்துவர்கள் என யாரும் இல்லை. அப்படியிருக்கையில் தனியார் கருத்தரிப்பு மருத்துவமனை சிகிச்சையில் தவறு நேர்ந்தால் காரணங்களை அரசு மருத்துவர்களிடம் கேட்க வாய்ப்பே இல்லாமல் போய்விடுமே....
எனவே மாவட்டம்தோறும் செயற்கை கருத்தரிப்பு மையங்களை அரசு தொடங்க வேண்டும், தனியார் கருத்தரிப்பு மையங்களுக்கு கட்டண வரையறை நிர்ணயிக்க வேண்டும். இதனால் ஏழை எளிய பெண்களுக்கு குழந்தையின்மையால் ஏற்படும் மன உளைச்சலும் சமூக தாக்குதலும் குறையும்.
உயர்நீதிமன்றத்தில் மனு அளித்த பிறகு எந்தவித நேர்மறையான பதிலும், முன்னெடுப்பும் அரசு தரப்பிலிருந்து வரவில்லை. திருச்சியில் மட்டும் தொடங்குவோம் என்ற அறிவிப்பை மட்டும் அரசு வெளியிட்டுள்ளது. ஆனால் அதற்கு எந்த நிதியும் இதுவரை ஒதுக்கப்படவில்ல'' என்றார் அய்யா.
source https://www.vikatan.com/health/women/a-petition-arise-for-requesting-government-fertility-center
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக