Ad

புதன், 1 மார்ச், 2023

`வெறும் ரூ.12 கோடி ஒதுக்கீடு, புதிய தலைவர் நியமனம்...’ - மீண்டும் வலுக்கும் மதுரை எய்ம்ஸ் சர்ச்சை!

மதுரை எய்ம்ஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருந்த நாகராஜன் வெங்கடராமன் சமீபத்தில் மரணமடைந்தார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கட்டடம் கூட எழுப்பாத நிலையில், புதிய தலைவராக உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டாக்டர் பிரசாந்த் லவானியா நியமிக்கப்பட்டது விமர்சனத்தைக் கிளப்பியது. இந்த நிலையில், ஆர்.டி.ஐ வாயிலாக கிடைத்த மதுரை எய்ம்ஸ் நிதி ஒதுக்கீடு குறித்த தகவல் மேலும் ஒரு விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான தொகையாக மத்திய அரசு மதிப்பீடு செய்திருப்பது ரூ. 1,997 கோடி. ஆனால் தற்போது வரை ரூ.12.35 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

ஆர்.டி.ஐ தகவல்

இந்த தகவல் வெளியாகி சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. தொடக்கம் முதலே எய்ம்ஸ் மருத்துவமையின் பிரச்னைகளைத் தொடர்ந்து பேசி வரும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தன் ட்விட்டர் பக்கத்தில், ``மதுரை எய்ம்ஸ்க்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை ரூ.12.35 கோடி மட்டுமே. இது RTI கேள்விக்கான பதில். இதையே நாடாளுமன்றத்தில் கேட்டிருந்தால் அமைச்சர் கொந்தளித்திருப்பார். “தனியார் கல்லூரிகளின் ஏஜென்ட்கள்” என்று வசையைத் துவக்கி “கழுத்தை நெரிப்பது” வரை பேசியிருப்பார்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வரிசைகட்டிய எய்ம்ஸ் சர்ச்சைகள்!

எய்ம்ஸ் தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் அமைக்கும் அறிவிப்பு கடந்த 2015-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. பின்பு, தமிழக அரசு நிலம் ஒதுக்கவில்லை என்னும் காரணம் முன்வைக்கப்பட்டு எய்ம்ஸ் அமைவது தள்ளிப்போனது. பிறகு 2018-ம் ஆண்டு மதுரை தோப்பூரில் 201.75 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.

2019-ம் ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார். அதன்பின்பும்கூட பணிகள் தொடங்கவில்லை.

2021-ம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில், பிரதமர் அடிக்கல் நாட்டிய செங்கல், திமுக-வின் பிரசார ஆயுதமாக மாற்றப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விவாதங்கள் எழவே, 2022-ம் ஆண்டு தமிழகத்துக்கு வருகை தந்த பாஜக தலைவர் நட்டா, எய்ம்ஸ் பணிகள் 94% முடிவடைந்துவிட்டது என கூறினார். இவரின் கருத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்ப, கோப்பு பணிகள் மட்டும் நிறைவடந்திருப்பதாக தெரிவித்தார்.

பிரதமர் மோடியால் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய போது

இந்த நிலையில், கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை எய்ம்ஸ் பணிகள் முடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது, `மத்திய அரசு நிதி ஒதுக்கப்பட்டுவிட்டது. பணிகள் தொடங்கப்பட்டு இன்னும் 5 ஆண்டுகளில் பணிகள் முடியும்’ தெரிவித்தனர். ஆனால், வெறும் ரூ, 12 கோடி மட்டுமே மத்திய அரசால் ஒதுக்கப்பட்டிருப்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.

எய்ம்ஸ் பணிக்கு ரூ.1,100 கோடி ஜப்பான் நிறுவனம் தரும், மீதி தொகையை மத்திய அரசு ஒதுக்க வேண்டும். இதில் இடம் வழங்குவது மட்டுமே தமிழக அரசு செய்ய வேண்டியது. ஆனால், கட்டுமானம் மற்றும் தொடரும் செலவினங்களை மத்திய அரசு தான் ஏற்க வேண்டும். ஆனால், தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தற்போதைய நிதியை வைத்து 2026-ம் ஆண்டுக்குள் எப்படி பணியை முடிப்பார்கள் என்னும் கேள்வி எழுகிறது.

எய்ம்ஸ்

இது தொடர்பாக நம்மிடம் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ”தற்போது வெளியாகியிருக்கும் நிதி ஒதுக்கீட்டால் மதுரை எய்ம்ஸ் பணி நடக்கவே இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. எய்ம்ஸ் கட்டப்படும் என்னும் அறிவிப்பை மட்டும்தான் செய்தார்கள். வெறும் அறிவிப்பை மட்டும் வைத்துக் கொண்டு சேர்க்கை அனுமதிக்க மாட்டோம் என்பதை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொல்லி இருக்க வேண்டும். ஆனால், கௌரவத்திற்கு மதுரை எய்ம்ஸ் கல்லூரிகளில் சேர்க்கை நடைபெறும் என அறிவித்தார். அதன் விளைவாக, ராமநாதபுரம் மருத்துவ கல்லூரிகளில் கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கொடுமை இல்லையா?. ஒரு தனியார் மருத்துவ கல்லூரி தொடங்க வேண்டும் என்றால், அதன் கட்டமைப்பு வசதிகளை ஆய்வு செய்யும் மத்திய அரசு, கட்டடமே இல்லாமல் வெறும் சுற்றுசுவர் உள்ள ஒரு கல்லூரிக்கு சேர்க்கையை அனுமதித்தது எப்படி என்னும் கேள்வி எழாமல் இல்லை. இப்படி கோமாளித்தனமான செயல்களை பாஜக அரசு மட்டுமே செய்ய முடியும்.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

மத்திய அரசு தமிழகத்துக்கு எந்த நலத்திட்டத்தையும் செய்ய முன்வராது. எதாவது ஒரு திட்டத்துக்கு அவர்கள் சரியாக நிதி ஒதுக்கி இருக்கிறார்களா? புயல்,மழை என எத்தனையோ பேரிடர்கள் வந்தபோதும், அதற்கு சரியாக நிதி உதவி செய்யாமல் தமிழக மக்களைத் தவிர்த்தனர். காரணம், தமிழகத்தைச் சுரண்ட மட்டுமே மத்திய பாஜக அரசு பயன்படுத்திக் கொள்கிறது. முன்பு ஆட்சி செய்த காங்கிரஸ், தமிழகத்தில் இருந்து 60% நிதியை எடுத்துக்கொண்டால், 40% நிதியைத் திருப்பி அளிப்பார்கள். ஆனால், பாஜக 90% நிதியை எடுத்துக்கொண்டு, திருப்பி அளிப்பது 10% நிதியாக மட்டுமே இருக்கிறது.

மத்திய அரசு

தற்போது மதுரை எய்ம்ஸ் பொறுத்தவரையிலும், கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து அதன் அறிவிப்பு, அடிக்கல் என சில முன்னெடுப்புகளை செய்தனர். ஆனால் அந்த யுக்தி மற்ற மாநிலங்களில் வெற்றியடைந்தது. ஆனால், தமிழகத்தில் அவர்கள் நினைத்தது நடக்கவில்லை. அவர்கள் தமிழக தேர்தலில் படுதோல்வியடைந்தனர். எனவே, மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான நிதியை அப்படியே நிறுத்திவிட்டனர். அதுதான் ஆர்டிஐ வாயிலாக தெரியவந்துள்ளது. தமிழகத்தில், திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், வெல்ல வாய்ப்பிருக்கும் என்பது உறுதியானால் திட்டம் தொடரும். ஆனால், தமிழக மக்கள் நிச்சயம் பாஜக-வை ஏற்க மாட்டார்கள். எனவே, எய்ம்ஸ் குறித்த அறிவிப்பு வருவது சந்தேகம்தான்,” என்றார்.

நாராயணன் திருப்பதி

இது தொடர்பாக நம்மிடம் பேசிய தமிழக பாஜக-வின் மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ” 2016-ம்ஆண்டு, மற்ற மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான பணி துவங்கப்பட்டது. தமிழகத்தில் மாநில அரசு நிலம் வழங்கவில்லை என்பதால் பணி துவங்கப்படாமல் இருந்தது. அதேபோல், ஜப்பான் நிறுவனம் தான் கட்டுமான பணிகளுக்கான நிதியை பெருமளவில் ஒதுக்க இருக்கிறது. சிமெண்ட், செங்கல் இருந்தால் தான் கட்டடத்தை எழுப்ப முடியும். ஆனால், இன்னும் ஜப்பான் நிறுவனம் நிதி ஒதுக்காமல் இருக்கும் நிலையில் எப்படி வேலையைத் தொடங்க முடியும். அதற்கான பேச்சுவார்த்தை நடந்து முடிந்திருக்கிறது. விரைவில் நிதி ஒதுக்கப்படும். இது குறித்த போதுமான விளக்கங்கள் மத்திய அமைச்சர் அளித்த பிறகும் கூட நிதி ஒதுக்கீடு வைத்து அரசியல் செய்ய சிலர் எண்ணுகின்றனர். ஆனால்,  கடந்த 9 ஆண்டுகளில் 11 மருத்துவகல்லூர்கள் மற்றும் 3000 மருத்துவ படிப்புக்கான இடங்களை தமிழகத்துக்கு பாஜக அரசு வழங்யிருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அது எங்களின் பெரும் சாதனை என்பதை மக்கள் உணர்ந்து கொள்வார்கள்,” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/governance/only-rs12-crore-allotted-for-madurai-aims-construction-in-tamilnadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக