Ad

செவ்வாய், 10 ஜனவரி, 2023

சைபர் வழக்குகளை பதிவு செய்வது எப்படி? #CyberCrime

இன்றைய உலகமானது, சமூக ஊடகங்களை சார்ந்த டிஜிட்டல் உலகம் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு மக்கள் சமூக ஊடக உலகத்தில் சஞ்சரித்து வருகிறார்கள். டிஜிட்டல் உலகத்தில் பயனர்கள் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, சைபர் குற்றங்களும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

cyber crime

சைபர் குற்றங்களில் பாதிக்கப்படும் பலர், தாங்கள் பாதிக்கப்பட்டது குறித்து புகார் செய்ய தயங்குகிறார்கள். இதற்கு தீர்வாகத்தான் https://cybercrime.gov.in என்னும் தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தை தொடங்கிய மத்திய அரசு, புகார்களை இதில் பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளது.

சைபர் வழக்குப்பதிவின் நடைமுறை குறித்து சைபர் சட்டம் வழக்கறிஞர் கார்த்திகேயன் விளக்குகிறார்...

``மாநிலங்களை எடுத்துக் கொண்டால், சைபர் குற்றங்களுக்கு என தனிப்பிரிவு கிடையாது. மாநிலங்களில் அனைத்து குற்றங்களையும் பதிவு செய்யும் வகையில் பொது இணையதளம்தான் உள்ளது. பலருக்கும் சைபர் வழக்குகளை பதிவு செய்வது தெரியாமலும் இருக்கலாம் அல்லது கடினமாகவும் இருக்கலாம். இதனால், சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட பலர் தங்களது புகார்களை பதிவு செய்யாமலே போய் விடுகின்றனர்.

வழக்கறிஞர் கார்த்திக்கேயன்

மேலும் சைபர் குற்றப் புகார்களை, காவல் நிலையங்களில் எடுத்துக் கொள்ளவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. இந்த இரு காரணங்களினாலும், சைபர் புகார்கள் வேறு எங்கும் பதிவாக வாய்ப்பில்லை. இதனால்தான் நாட்டில் நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கைக்கும், பதிவாகும் குற்றங்களின் எண்ணிக்கைக்கும் வித்தியாசம் இருந்து வருகிறது.

https://cybercrime.gov.in என்ற இணையதளம் சைபர் வழக்குகளுக்கான மத்திய அரசின் பிரத்யேக இணையதளம் ஆகும். பாதிக்கப்பட்டவர்கள், இந்த இணையதளத்தில் புகார் செய்யும்போது பெயர், மாநிலம் உள்ளிட்ட சில தகவல்களை பதிவு செய்யவேண்டும். இப்படி இணையதளத்தில் பதிவாகியுள்ள புகாரை மத்திய தேசிய சைபர் குற்றப்பிரிவு ஆய்வு செய்து, பின்னர் புகாரை அந்தந்த மாநில குற்றப்பிரிவுக்கு அனுப்பி வைப்பார்கள். காவல் மற்றும் குற்றம் மாநிலப் பிரிவை சேர்ந்தது என்பதால் புகார்களை மாநிலப் பிரிவிற்குதான் அனுப்பி வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

https://ift.tt/dPLu9Ye

மத்திய பிரிவில் இருந்து மாநிலப் பிரிவிற்கு புகார் வந்தவுடன், அந்த புகாரின் மீது தேவையான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்டவர்களின் பகுதியில் இருக்கும் காவல் நிலைய அதிகாரிகள் எடுப்பார்கள். பின்னர் புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் நாட்டில் நடக்கும் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை தகவல்கள் மற்றும் அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என அனைத்தும் பாதுகாக்கப்படும். இதனால்தான் சைபர் குற்ற புகார்கள் அனைத்தையும் தேசிய சைபர் குற்றப்பிரிவு இணையதளத்தில் பதிய வேண்டும் என்று கூறப்படுகிறது" என்று கூறினார்.



source https://www.vikatan.com/news/crime/how-to-register-cyber-crime-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக