பாலு, செய்தித் தொடர்பாளர், பா.ம.க
``அபத்தமாகப் பேசியிருக்கிறார் ஜெயக்குமார். கூட்டணி என்பது ஒருவருக்கொருவர் தோள் கொடுக்கும் ஏற்பாடு. காரியம் முடிந்த பிறகு அதை விமர்சிப்பது அநாகரிகம். 2019-ம் ஆண்டு, 22 சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. எங்கள் கட்சி பலமாக இருந்த வடமாவட்டத் தொகுதிகள் ஒன்றில்கூட நாங்கள் போட்டியிடாமல், அத்தனையிலும் அ.தி.மு.க-வுக்கு ஆதரவு கொடுத்தோம். அந்த வெற்றியின் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி இரண்டு ஆண்டுகள் முதல்வராகத் தொடர்ந்தார். ஆனாலும், இதுவரை பா.ம.க ஆதரவால்தான் ஜெயலலிதாவும் பழனிசாமியும் முதல்வர்களாக இருந்தார்கள் என்று நாங்கள் எப்போதுமே பேசியதே கிடையாது. பா.ம.க-வுடன் கூட்டணிவைக்க அ.தி.மு.க விரும்பியது. கூட்டணிக்காக அம்மையார் ஜெயலலிதா பா.ம.க-வின் அலுவலகத்துக்கு நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதெல்லாம் வரலாறு. அ.தி.மு.க துவண்டு கிடந்த, பிளவுபட்டுக் கிடந்த நேரத்திலெல்லாம் தேர்தல் களத்தில் தோளுக்குத் தோளாக நின்ற கட்சி பா.ம.க. எனவே, ஜெயக்குமார் பா.ம.க குறித்து கருத்து சொல்வதற்கு முன்பு நடந்ததையெல்லாம் பலமுறை நன்கு யோசித்துவிட்டுப் பேச வேண்டும்.’’
கோவை சத்யன், செய்தித் தொடர்பாளர், அ.தி.மு.க
`` `ஊர்கூடித் தேர் இழுக்க வேண்டும்’ என்ற பழமொழி தேர்தல் நேரக் கூட்டணிக்கும் பொருந்தும். ஆனால், தேர்தல் வரலாற்றில் தனியாகவே தேரை இழுத்துச் சென்று வெற்றிபெற்ற பெருமை அ.தி.மு.க-வுக்கு உண்டு. எங்களுடன் கூட்டணி வைத்த ஒரே காரணத்தால்தான் தே.மு.தி.க-வுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. அ.தி.மு.க-மீது தரம் தாழ்ந்த விமர்சனங்களை வைத்தவர்களும்கூட, இதுபோன்ற பலன்களுக்காகவே எங்களுடன் கூட்டணி வைத்திருந்தார்கள். தேர்தலில் அவர்களுக்கு விழுந்த வாக்குகள் அனைத்தும் அ.தி.மு.க என்ற ஒற்றைக் கட்சிக்காக வந்தவை என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. அ.தி.மு.க-வுடன் பா.ம.க கூட்டணிக்கு வரும்போது சுயநலம் கலந்த, ஆதாயத்துடன்கூடிய கோரிக்கைகளுடன்தானே கூட்டணிக்கு வந்தார்கள்... அண்ணன் ஜெயக்குமார் நடந்ததைத்தானே பேசியிருக்கிறார். அ.தி.மு.க நிர்வாகிகள் எப்போதுமே வரம்பை மீறி அநாகரிகமான கருத்தை முன்வைக்க மாட்டார்கள். கடந்த தேர்தலில் நாங்கள் ஆட்சியிழக்கக் காரணமே, 10.5% இட ஒதுக்கீடு பிரச்னைக்கு பா.ம.க சரியாக விளக்கம் அளிக்காததுதான் என்று நாங்கள் பழி சொன்னோமா?’’
source https://www.vikatan.com/government-and-politics/politics/discussion-about-jayakumar-statement-about-pmk-and-anbumani
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக