சத்தியமூர்த்தி பவனில் ஜன.11-ம் தேதி 'அரசியலமைப்பைப் பாதுகாப்போம் கையோடு கை கோர்ப்போம்' என்ற பரப்புரை இயக்கத்தை முன்னெடுப்பது குறித்த கலந்தாலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், மேலிடப் பார்வையாளர் கொடிக்குனில் சுரேஷ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சிறிவெல்ல பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் திருமகன் ஈவேராவின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. ``தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டது முதல் அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் அதிகாரங்களை மீறுகிற வகையில் தமிழக அரசுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். ஆளுநர் மாளிகையில் அமர்ந்து கொண்டு பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்களின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வருகிறார்.
ஆளுநரை பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தும் வகையில் 234 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் ஜன.19-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும். ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் விரிவாக்கமாக `அரசமைப்பு சட்டத்தைப் பாதுகாப்போம் - கையோடு கைகோர்ப்போம்’ என்கிற பரப்புரை இயக்கத்தை வரும் ஜன.26-ம் தேதி முதல் 2 மாதங்களுக்கு மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, ``அரசியலமைப்பை பாதுகாப்போம் - கையோடு கை கோர்ப்போம் என்ற பிரசார இயக்கத்தை ஜனவரி 26-ம் தேதி தொடங்கி அடுத்த இரண்டு மாத காலத்திற்கு தமிழகம் முழுவதும் இந்த நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் வரலாறு காணாத மரபு மீறிய, மக்கள் முகம் சுளிக்கிற காரியத்தை ஆளுநர் ரவி செய்திருக்கிறார்.
தமிழ்நாடு போன்ற ஜனநாயக பூங்காவில் ரவியை போன்ற ஆளுநர் செயல்பட முடியாது. காவல்துறையின் பின்புலம் கொண்டவருக்கு ஜனநாயகத்தைப் பற்றி தெரியாது. சட்டசபையிலிருந்து தேசிய கீதம் பாடுவதற்கு முன்பு ஆளுநர் வெளியே சென்றிருக்கிறார். மத்திய அரசின் அறிக்கையை குடியரசு தலைவர் மாற்றி படித்தால் பாஜக மற்றும் மோடி ஏற்றுக்கொள்வார்களா?. அதிகாரத்தை வைத்து ஆர்எஸ்எஸ் தமிழகத்தை மிரட்டிப் பார்க்கிறது" என்றார்.
பின்னர் பேசிய தினேஷ் குண்டுராவ், "மக்களின் தினசரி பிரச்னைகளை ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பேசியிருக்கிறது. வன்முறை மற்றும் பிரிவினைவாதம் தற்போது இந்தியாவில் நடைபெறும் மிகப்பெரிய சமூக பிரச்னையாக இருக்கிறது. பல்வேறு மதங்களை மக்கள் பின்பற்றினாலும் நாம் அனைவரும் ஒருவர் தான். அரசியலமைப்பைப் பாதுகாப்போம் கையோடு கைகோர்ப்பும் பிரசார இயக்க மூலம் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் நகரங்களை வீடு வீடாக காங்கிரஸ் கட்சி சென்றடையும். மேலும் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு மாநிலங்களின் அமைதியை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/rss-is-threatening-tamil-nadu-with-power-says-ks-alagiri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக