தனிநபர் வரி செலுத்துவோர் வருமான வரியைச் சேமிப்பதற்காக நிதியாண்டு முடிவதற்குள் முதலீடுகளைச் செய்ய விரைகின்றனர். வருமான வரிச் சட்டத்தின் 80-சி பிரிவின் கீழ் வரிச் சேமிப்பை வழங்கும் பல்வேறு முதலீட்டுத் திட்டங்கள் உள்ளன.
இந்தத் திட்டங்களில் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், ஈக்விட்டி இணைக்கப்பட்ட சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், பொது வருங்கால வைப்பு நிதி (Public Provident Fund), சுகன்யா ஸ்மிருத்தி யோஜனா, மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), யூனிட் லிங்க்கிட் இன்சூரன்ஸ் திட்டம், 5 ஆண்டுகளுக்கு வரி சேமிப்பு வைப்பு நிதி போன்றவை அடங்கும்.
ஒவ்வொரு திட்டத்திற்கும் அதன் சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. மேலும் ஒருவர் தனது தேவையின் அடிப்படையில் திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். இங்கே பொது வருங்கால வைப்பு நிதியின் (Public Provident Fund) சில தனித்துவமான அம்சங்களை பார்ப்போம். சேமிப்பாளர்கள் சரியான முடிவெடுக்க இந்த சிறப்பு அம்சங்களை சரியாக புரிந்து கொள்வது அவசியம்.
சிறப்பு அம்சம்:
இந்த கணக்கு 15 வருடங்களுக்கானது. ஆனால் முதிர்ச்சியடையும் போது, எத்தனை முறை வேண்டுமானாலும் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்க முடியும்.
நீண்ட கால செல்வத்தை உருவாக்க இந்தத் திட்டத்தை பயன்படுத்தலாம். மற்ற பெரும்பாலான சேமிப்பு கணக்குகள் இந்த வசதியை வழங்குவதில்லை. எடுத்துக்காட்டாக, வங்கியில் தொடங்கும் வரி சேமிப்பு வைப்புக் கணக்கை (Tax saving FD) தனித்தனியாக புதுப்பிக்க வேண்டும். தேசிய சேமிப்புச் சான்றிதழை (National Savings Certificate) நீட்டிக்க முடியாது.
இந்த கணக்கிலிருந்து ஆறாவது வருடத்திற்கு பிறகு வருடம் ஒரு முறை பணத்தை திரும்ப பெறமுடியும். மூன்றாம் ஆண்டிலிருந்து ஆறாம் ஆண்டு வரை கணக்கில் உள்ள தொகையில் 25 சதவீதம் வரை கடன் வாங்க முடியும்.
ஐந்து வருடத்திற்கு பிறகு மருத்துவச் செலவு, மேற்படிப்பு போன்ற காரணத்திற்காக கணக்கை முடித்து மொத்த தொகையும் பெற முடியும்.
முக்கியத்துவம்
இந்தத் திட்டம் பணப் புழக்கத்திற்கான அனைத்து நெகிழ்வுத்தன்மையையும் வழங்குகிறது. ஒருவரின் தேவையைப் பொறுத்து ஒருவர் கடன் வாங்கலாம். அல்லது பகுதியளவு திரும்ப பெறலாம். அல்லது முன்கூட்டியே கணக்கை முடித்துக்கொள்ளலாம். எனவே இத்திட்டம் 15 ஆண்டுகளாக இருந்தாலும், இந்தத் திட்டத்தில் சேமிப்பை திரும்பப்பெற்று அதை செலவுக்கோ அல்லது வேறு முதலீட்டிற்கோ பயன்படுத்த முடியும்.
நிதி ஆண்டில் கணக்கில் குறைந்தபட்சமாக ரூபாய் 500, அதிகபட்சமாக ரூபாய் 1,50,000 வரையும் செலுத்தலாம். மாதம் ஒரு முறை பணம் செலுத்தலாம். ஒவ்வொரு மாதமும் 5-வது மற்றும் கடைசி நாளுக்கு இடையே உள்ள குறைந்தபட்ச இருப்பில் வட்டி கணக்கிடப்படுகிறது.
இது நிறைய நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. ஆயுள் காப்பீடு, யூலிப் போன்ற பிற வரி சேமிப்பு திட்டங்கள் இந்த அளவிற்கு நெகிழ்வுத் தன்மையை வழங்குவதில்லை.
இலக்கு முதலீட்டை அடைய ஒருவர் தனது பணப்புழக்க நிலைக்கு ஏற்ப டெபாசிட் செய்ய திட்டமிடலாம். மாதம் 5-ம் தேதி பிபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்வதன் மூலம் முழு மாத வட்டியையும் பெறலாம். ஒரு வருடத்தில் ரூ.1,50,000க்கு மேல் பணம் செலுத்த முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த கணக்கை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட வங்கிகளில் தொடங்கலாம். ஓர் அஞ்சல் நிலையத்திலிருந்து மற்றொரு அஞ்சல் நிலையத்திற்கோ, அஞ்சல் நிலையத்திலிருந்து ஒரு வங்கிக்கோ, வங்கியிலிருந்து அஞ்சல் நிலையத்திற்கோ மற்றும் ஒரு வங்கிக் கிளையிலிருந்து மற்றொன்றிற்கோ கணக்கை மாற்றலாம்.
இந்த நெகிழ்வுத்தன்மை ஒருவரின் வசதிக்கேற்ப எங்கும் கணக்கு வைத்திருக்கும் வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக மாற்றத்தக்க வேலைகளில் இருப்பவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த கணக்கிற்கான வட்டி மூன்று மாததுக்கு ஒரு முறை மாற்றத்துக்கு உள்ளாகும்.. வட்டி மாதந்தோறும் கணக்கிடப்பட்டு, ஆண்டின் இறுதியில் வரவு வைக்கப்படும். வட்டி விகிதம் இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.10 சதவீதம்.
இந்தத் திட்டம் நீண்ட காலத்திற்கு இருப்பதால் சாதாரண வட்டியை (Simple interest) விட கூட்டு வட்டி (Compound interest) நன்மை பயக்கும்.
கணக்கில் உள்ள இருப்பு, நீதிமன்றத்தின் எந்த உத்தரவு அல்லது ஆணையின் கீழும் இணைக்கப்பட முடியாது. இருப்பினும் வருமான வரி மற்றும் பிற அரசு அதிகாரிகள் வரி நிலுவைகளை மீட்டெடுப்பதற்கு கணக்கை இணைக்கலாம்.
இந்தக் கணக்கின் மூலம் சேமிக்கப்படும் தொகை ஒருவரின் ஓய்வூதியத்திற்கு பாதுகாப்பானது என்பதை இது உறுதி செய்கிறது. வங்கிக்கு செலுத்த வேண்டிய பிற நிலுவைத் தொகைகள் அல்லது கடனுக்காக வங்கிகள் இந்த கணக்கில் உள்ள தொகையை இணைக்க முடியாது. வங்கிகள் இந்த கணக்கில் உள்ள தொகையை மற்ற பாக்கிகளுக்கு பயன்படுத்த முயற்சிக்கும் போதெல்லாம், நீதிமன்றங்கள் அதை சட்டவிரோதமாகவும் நியாயமற்றதாகவும் கருதுகின்றன.
இத்திட்டத்திற்கு மத்திய அரசு முழு உத்தரவாதம் அளிக்கிறது. இது முதலீட்டுக்கான அதிகபட்ச பாதுகாப்பை உறுதி செய்கிறது. ரிசர்வ் வங்கி, செபி மற்றும் ஐ.ஆர்.டி.ஏ.ஐ போன்ற ஓழுங்குமுறை நிறுவனங்கள் கட்டுப்படுத்தும் எந்த முதலீட்டிற்கும் இதுபோன்ற ஒரு பாதுகாப்பு இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
- எஸ் கல்யாணசுந்தரம், ஓய்வு பெற்ற வங்கியாளர்.
source https://www.vikatan.com/business/finance/interest-rates-tax-benefits-what-are-the-special-features-of-general-provident-fund
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக