Ad

வியாழன், 5 ஜனவரி, 2023

ராமநாதபுரம்: 2011-ல் நகைக்கடையில் கொள்ளை... 11 ஆண்டுகளுக்குபின் கைரேகையால் சிக்கிய திருடன்!

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் கடந்த மாதம் 30-ம் தேதி 6 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி நடைபெற்றது. இதில் எதுவும் திருட்டு போகவில்லை என்றாலும் கைரேகை நிபுணர்கள் தீவிரமாக கைரேகைகளை ஆய்வு செய்தனர். இதனையடுத்து கடலாடி போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தியதில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது கமுதி அருகே உள்ள நெறிஞ்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் சேவுகராஜ் (60) என்பது தெரியவந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

கடந்த 2011-ம் ஆண்டு சாயல்குடியில் உள்ள ஜானகி ஜுவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் பூட்டை உடைத்து 4 கிலோ 300 கிராம் தங்க நகை மற்றும் 1 லட்சத்து 26 ஆயிரம் பணம் திருடு போனது. அப்போது எடுக்கப்பட்ட கைரேகையும் தற்போது கடலாடியில் 6 வீடுகளில் பூட்டை உடைக்க முற்பட்டபோது எடுத்த கைரேகையும் ஒத்து போனதால் கடந்த 11 வருடங்களாக கமுதி, கடலாடி, முதுகுளத்தூர், சாயல்குடி உள்ளிட்ட பகுதிகளில் பூட்டப்பட்ட வீடு, கடைகளை குறிவைத்து பூட்டை உடைத்து திருடி தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி சேவுகராஜ் என்பது தெரியவந்தது.

கொள்ளையடிப்பதற்காக பூட்டிய வீட்டை நோட்டமிடும் சேவுகராஜ்

தற்போது, சேவுகராஜிடம் இருந்து ரூ.5,540 ரொக்க பணமும், இரண்டு தங்கத்தோடு, ஒரு தங்கத் தாலி கைப்பற்றப்பட்டு மீதமுள்ள நகைகளை தனியார் அடகு பேங்கில் வைத்த நகை ரசீதும் கிடைக்கப் பெற்றுள்ளது.

சேவுகராஜூக்கு துணையாக திருடிய நகையை அவரின் மகன்கள் இரண்டு பேர் அடகு வைத்ததும் தெரியவந்து விசாரணை நீண்டு வருகிறது.

2011 ஆம் ஆண்டு நகை கடை கொள்ளைக்கு பிறகு, 2014 ஆம் ஆண்டு கமுதியில் உள்ள ஒரு வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகையை திருடி உள்ளார். அதன் பிறகு எவ்வித திருட்டு சம்பவத்திலும் ஈடுபடாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் முதல் தொடர்ச்சியாக கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஏழு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார். கடலாடியில் பூட்டை உடைத்து திருட முயற்சித்த நிலையில் அதன் சிசிடிவி காட்சிகள் மூலம் தற்போது இவர் சிக்கியுள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடலாடி காவல் நிலையம்

கடந்த 2011-ம் ஆண்டு முதல் 9 இடங்களில் திருடி தலைமறைவாக இருந்து, 10-வது இடத்தில் திருட முயற்சித்த போது ஒன்றுமே கிடைக்காமல் திரும்பிய நிலையில் பிடிபட்ட சேவுகராஜ் தற்போது கடலாடி போலீஸாரின் தீவிர விசாரணையில் உள்ளார்.

இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் பேசினோம், "கடந்த 11 ஆண்டுகளாக தொடர் கொள்ளையில் ஈடுபட்டு வந்த சேவுகராஜை கைது செய்துள்ளோம். அவருடன் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கூட்டாளிகள் குறித்தும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கு உள்ளது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். விரைவில் அவரிடமிருந்து கொள்ளை அடிக்கப்பட்ட நகைகளை மீட்டு, அவரின் கூட்டாளிகளும் கைது செய்யப்படுவார்கள்” என கூறினார்.



source https://www.vikatan.com/news/crime/an-old-man-was-arrested-after-11-years-of-continuous-theft

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக