Ad

புதன், 7 செப்டம்பர், 2022

விரைவில் தமிழ்நாட்டின் புதிய கல்விக் கொள்கை - மத்திய அரசு அனுமதி வேண்டுமா?! | ஓர் அலசல்

``தமிழ்நாட்டுக்கென தனியான ஒரு கல்விக் கொள்கையை உருவாக்கும் பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. அந்த மாநில கல்விக் கொள்கை விரைவில் வெளியிடப்படும்” எனத் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி கூறியிருக்கிறார். சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு அமைச்சர் பொன்முடி, செய்தியாளர்கள் இடையே பேசினார். அதில், ``தமிழ்நாட்டில் அதிக உயர்கல்வி நிறுவனங்கள் இருப்பதற்கு, திராவிட மாடல் ஆட்சிதான் காரணம். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் உள்ள பாடத்திட்டங்கள் தற்போதைய காலத்துக்கேற்ப மாற்றப்பட்டு வருகின்றன. மாணவர்களும் தங்கள் துறை சார்ந்த பல்வேறு படிப்புகளை கற்க வேண்டியது அவசியமாகும்.

3, 5, 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முரணான அம்சங்கள் உள்ளதால் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முழுவதுமாக எதிர்க்கிறது. தொடக்க வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமல்படுத்தினால், இடைநிற்றல் அதிகரிக்கும். எனவே, மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டும் பொதுத்தேர்வு இருந்தால் போதுமானது. மேலும், தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைதான் எப்போதும் அமலில் இருக்கும். தேசியக் கல்விக் கொள்கை விவகாரத்தில், ஒன்றிய கல்வி அமைச்சகத்திடம் எழுத்துப்பூர்வமான எதிர்ப்பு பதிவுசெய்ப்பட்டுள்ளது. சுபாஷ் சர்க்கார் கல்வித் துறை இணையமைச்சர் என்பதால், அதுகுறித்த அறிந்திருக்க வாய்ப்பில்லை. மாநில கல்விக் கொள்கை வடிவமைப்புப் பணிகள் துரிதமாக முடிக்கப்பட்டு, விரைவில் வெளியிடப்படும்.” எனப் பேசியிருக்கிறார்.

அமைச்சர் பொன்முடி

தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருக்கும் பல்வேறு தீர்மானங்கள், சட்டத் திருத்தங்கள் இன்னும் ஆளுநர் மாளிகையிலேயே தேங்கிக் கிடக்கின்றன. அப்படியிருக்கும்போது மாநிலத்துக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி அதை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டுமா... அப்படி அனுப்பினால் மத்திய அரசு அனுமதி அளிக்குமா என்ற விசாரணையில் இறங்கினோம்…

மாநிலத்துக்கான கல்விக் கொள்கையை உருவாக்கி மத்திய அரசின் ஒப்புதல் வாங்கப்படுமா என மனோண்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சபாபதி மோகனிடம் பேசினோம். ``மாநில அரசு உருவாக்கும் கல்விக் கொள்கைக்கு ஒன்றிய அரசின் அனுமதி தேவையில்லை. கடந்த காலங்களில் நமது கல்வி முறையிலும் பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவந்தோம். ஆனால், அவை எதற்கும் ஒன்றிய அரசிடம் சென்று அனுமதி வாங்கவில்லை. பல்கலைக்கழக மானியக் குழு ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மாநிலக் கல்லூரிகளை ஆய்வு செய்து அந்தக் கல்லூரிகளின் வளர்ச்சிக்கு ஐந்து கோடி ரூபாய் கொடுக்கும். ஏ.ஐ.சி.டி.இ பொறியியல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கும். இவற்றைத் தாண்டி மாநிலக் கல்வி உரிமையில் இந்த அமைப்புகளுக்கு வேறு வேலையே இல்லை.

சபாபதி மோகன் முன்னாள் துணை வேந்தர்

கல்லூரி நடத்துவது, கல்லூரியில் என்ன பாடத்திட்டம் வைக்க வேண்டும் என்பதெல்லாம் அந்தந்தக் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டக் குழு முடிவு செய்யும். அதன்படிதான் நடக்கும். எனவே, மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்குவது, என்ன பாடத்திட்டம் வைப்பது என்பது குறித்தெல்லாம் யாருக்கும் சொல்ல வேண்டியதில்லை. தமிழ்நாடு அரசு உருவாக்கும் மாநிலக் கல்விக் கொள்கையின்படி கல்வித்துறை நாம் வடிவமைத்துக்கொள்ளலாம்” என்றார்.

தமிழ்நாடு அரசின் கல்வித்துறை சார்ந்த நடவடிக்கைகள் குறித்து கல்வியாளர்கள் சிலரிடம் பேசினோம். “புதிய தேசியக் கல்விக்கொள்கையில் மாநில அரசுக்கென சில இடங்களில் சுதந்திரம் கொடுத்திருக்கிறார்கள். பாடத்திட்டத்தில் என்னவெல்லாம் இருக்க வேண்டும், எதெல்லாம் இருக்க வேண்டும் என்பதுதான் அந்த சுதந்திரம். ஆனால், வடிவம் அவர்கள் கொடுப்பதுதான். கலை, அறிவியல் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வு என்பதைத்தான் நாம் அதில் எதிர்க்க வேண்டும். புதிய கல்விக் கொள்கை உருவாக்க குழு அமைத்தே ஓராண்டு ஆகிவிட்டது. இதுவரை சும்மாதானே இருந்தார்கள். மேலும், அந்த குழுவில் கல்வியாளர்கள் யாரும் இல்லை. ரமேஷ் பிரபா, நெடுஞ்செழியன், சதீஸ் என கல்வித்துறையில் கொள்கை ரீதியில் வேலை பார்த்தவர்களை விட்டுவிட்டு, ஓய்வு பெற்ற துணை வேந்தர், அகரம் அமைப்பின் மேனேஜர், எழுத்தாளர்கள் எல்லாம் இணைந்து என்ன கல்விக் கொள்கையை உருவாக்கிவிடுவார்கள் என்று தெரியவில்லை. மாநிலக் கல்விக் கொள்கையையே இவர்கள் உருவாக்க முடியாது. கலை அறிவியல் கல்லூரிகளுக்கு யு.ஜி.ஜி, பொறியியல் கல்லூரிகளுக்கு ஏ.ஐ.சி.டி.இ இப்படி ஒவ்வொருன்றுக்கும் ஒவ்வொரு அமைப்பு கொள்கைகளை உருவாக்கி அவை நடைமுறைப்படுத்தும்போது மாநில அரசு கொள்கைகளை உருவாக்கி அதை நடைமுறைப்படுத்துவார்கள் என்பதே நகைப்புக்குரியது.

அரசுப் பள்ளி மாணவர்கள்

நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவோம் என எப்படிப் பேசிக்கொண்டிருக்கிறார்களோ, அதேபோலத்தான் மாநிலக் கல்விக்கொள்கையும் பேச்சளவிலேயே இருக்கும். இதை வைத்தும் இறுதி வரை அரசியல் மட்டுமே செய்ய முடியும். எந்த மாற்றமும் ஏற்படாது” என்கின்றனர்.

கல்வியில் அரசியல் கலக்காமல் வருங்கால இளைய சமுதாயத்துக்கு பயனுள்ளதை மத்திய, மாநில அரசுகள் இணைந்து செய்ய வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பும்…



source https://www.vikatan.com/government-and-politics/politics/will-central-government-allow-state-government-education-policy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக