ஐ.பி.எல்லில் ஹைதராபாத்தைப் பொறுத்தவரை அதற்கென பரம வைரிகள் கிடையாது. எல்லா அணி ரசிகர்களின் இரண்டாவது பேவரைட்டாகவோ மூன்றாவது பேவரைட்டாகவோ ஹைதராபாத் அணியே இருக்கும். எல்லாம் போன சீசன் வரைதான். வார்னர் வெளியே உட்கார வைக்கப்பட்டதிலிருந்தே அணிக்கு இருந்த நல்ல பெயர் மங்கத் தொடங்கியது. ஏலத்தில் வார்னரை டெல்லி அணி யாரும் எதிர்பார்த்திடாத விலையில் வாங்க, அன்றே சென்னை - மும்பை, சென்னை - பெங்களூரு ஆட்டங்கள் அளவுக்கு டெல்லி - சன்ரைசர்ஸ் போட்டிக்கும் எதிர்பார்ப்பு எழுந்தது. வெளியே இருந்தவர்களைவிட வார்னர் இன்னும் அதிக எதிர்பார்ப்போடே இருந்திருப்பார்.
ஒருவழியாய் எல்லாரும் எதிர்பார்த்த அந்த ஆட்டமும் வந்தேவிட்டது. ஏதோ கவுன்சிலிங் முடிந்தபின் மேனேஜ்மென்ட் கோட்டாவில் காலேஜ் மாறி சேர்ந்ததைப் போல அணிகளின் ப்ளேயிங் லெவனில் அவ்வளவு மாற்றங்கள். சன்ரைசர்ஸில் எதிர்பார்த்தது போலவே கடந்த ஆட்டத்தில் காயம்பட்ட வாஷிங்டன் சுந்தர், நடராஜன் இரண்டு பேருமே இல்லை. ஸ்பின்னர் வேண்டுமென்பதால் ஸ்ரேயாஸ் கோபால் உள்ளே வந்திருந்தார். நடராஜனுக்கு பதில் கார்த்திக் தியாகி. கடையேழு வள்ளல்களோடு கடந்த சில ஆட்டங்களாய் போட்டி போடும் மார்க்கோ ஜென்சனுக்கு பதில் பி.பி.எல் புண்ணியத்தில் ஆல்ரவுண்டராகவே உருமாறிவிட்ட ஷீன் அப்பாட்.
டெல்லி அணியில் ப்ருத்வி ஷாவும் அக்ஷர் படேலும் காயம் காரணமாக ஆடவில்லை. அவர்களுக்கு பதில் மந்தீப் சிங்கும் ரிப்பல் படேலும். கலீல் அஹமதுக்கு பதிலாய் வந்த சக்காரியா மறுபடியும் பெஞ்ச்சுக்கே போக கலீல் உள்ளே வந்தார். பலகோடி கொடுத்து ரீட்டெயின் செய்த நார்க்கியா ஆடவேண்டுமென்பதால் முஷ்டபிசுர் ரஹ்மானும் வெளியே.
ஓப்பனிங் ஓவர் புவவேனஷ்வர் குமார். இந்திய பிட்ச்களில் இப்போதைக்கு புவிதான் ஸ்விங் கிங். அந்தப் பக்கம் மந்தீப்பை அவர் க்ரீஸிலேயே டான்ஸ் ஆடவைக்க, 'நான் பாட்டுக்கு பஃபே டின்னர் சாபிட்டுகிட்டு ஜாலியா இருந்தேன். இந்த ப்ருத்வி பயபுள்ளையால வந்த வினை' என வேண்டாவெறுப்பாகவே பந்தை தடுத்துக்கொண்டிருந்தார். ஐந்தாவது பந்தில் அவுட்சைட் ஆப் லைனில் வந்த பந்தைத் தட்ட அது சமர்த்தாக கீப்பர் பூரன் கையில் தஞ்சமடைந்தது.
அடுத்து வந்த அப்பாட் ஓவரில் 11 ரன்கள். வெற்றிகரமாய் தன் முன்னாள் டீமிற்கு எதிராக பவுண்டரியோடு கணக்கைத் தொடங்கினார் வார்னர். மூன்றாவது ஓவரில் மீண்டும் தன் அற்புதமான ஸ்விங்கினால் ஒரே ஒரு ரன் மட்டுமே கொடுத்தார் புவி. குட்டிக்கரணம் எல்லாம் அடித்தும் வார்னரால் பந்தை டைமிங் செய்யவே முடியவில்லை அந்த ஓவரில். அந்த காண்டை எல்லாம் வைத்து அடுத்து வந்த உம்ரான் மாலிக்கின் ஓவரை வெளுவெளுவென வெளுத்தார். 21 ரன்கள். டவுன் பஸ் போல தடவிக்கொண்டிருந்த ஸ்கோர் சடாரென ஹைவேஸில் போகும் ஸ்கேனியா பஸ் போல வேகமெடுத்தது.
அந்தப் பக்கம் மிட்செல் மார்ஷ் அவுட்டானது, நான்காவதாய் இறங்கிய பண்ட் பந்தை நடுகிரவுண்டிலேயே தேடிக்கொண்டிருந்தது ஆகியவற்றை எல்லாம் வார்னர் கண்டுகொள்ளவே இல்லை. கார்த்திக் தியாகி வீசிய ஆறாவது ஓவரில் தொடர்ந்து இரண்டு பவுண்டரிகள், மார்க்ரம் வீசிய எட்டாவது ஓவரில் ஒரு சிக்ஸர் என பறக்கவிட்டுக்கொண்டிருந்தார்.
மறுமுனையில் 11 பந்துகளில் நான்கே ரன்கள் எடுத்திருந்த பண்ட் என்ன நினைத்தாரோ ஸ்ரேயாஸ் கோபால் வீசிய ஒன்பதாவது ஓவரில் கீரைக்கட்டை சாப்பிட்டுவிட்டு திடீரென வெறிவந்து பொளக்கும் பாப்பாய் போல பொளந்தார். ஹாட்ரிக் சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என நான்கே பந்துகளில் 22 ரன்கள். கடைசி பந்தையும் தூக்கியடிக்க பார்க்க, கல்லி கிரிக்கெட்டில் போடும் லட்டு புல்டாஸை போட்டு எளிதாக போல்ட்டாக்கினார் ஸ்ரேயாஸ். டெபாசிட் வாங்கிவிட்ட சுயேட்சை வேட்பாளரைப் போல நம்பமுடியாமல் பார்த்துக்கொண்டிருந்தார் பண்ட்.
களத்திற்குள் இப்போது வந்தது கடந்த சில ஆட்டங்களாய் செம பார்மில் இருக்கும் ரோவ்மேன் பவல். 'உனக்காவது உன் முன்னாள் டீம் மேலதான் காண்டு. எனக்கு பௌலர்னு யாரைப் பாத்தாலுமே காண்டுதான்' மோடிலேயே மேட்ச் முடியும்வரை இருந்தார் பவல். ஸ்டைலாக உம்ரான் மாலிக்கின் பந்தில் பவுண்டரி அடித்து ஐ.பி.எல்லில் தன் 54வது அரைசதத்தை எடுத்தார் வார்னர். ஐ.பி.எல்லில் அதிக அரைசதங்கள் பட்டியலில் முதலிடம் பலகாலமாய் வார்னருக்கே. அதை மீண்டுமொரு முறை உறுதி செய்தார். இவரைத் தொட வாய்ப்பிருக்கும் ஒரே வீரர் ஷிகர் தவான் மட்டும்தான்.
கிடைத்த கேப்பில் சிங்கிள்கள், இரண்டு ரன்கள் எடுப்பது. சிக்கும் பந்தில் சிக்ஸரோ பவுண்டரியோ தட்டுவது என இவர்கள் இருவரும் ப்ளூப்ரின்ட் போட்டு ஆடியதில் ரன்கள் சகட்டுமேனிக்கு வந்து குவிந்தன. 12, 13, 14வது ஓவர்களில் முறையே 11, 11, 12 என 34 ரன்கள். ஸ்கோர் 135/3.
முதல் இரண்டு ஓவர்களில் முத்து பட ப்ளாஷ்பேக் ரஜினி போல வாரி வாரி கொடுத்த உம்ரான் தன் மூன்றாவது ஓவரில் சிட்டியின் குருஜி வசீகரன் போல ஸ்ட்ரிக்ட்டாய் இருக்க, வந்தது இரண்டே ரன்கள்தான். கடைசி ஐந்து ஓவர்கள். இரண்டு இன் பார்ம் பேட்ஸ்மேன்கள். சொல்லவா வேண்டும்? புவியின் மூன்றாவது ஓவரில் 10 ரன்கள். ஷீன் அப்பாட்டின் கடைசி ஓவரில் 18 ரன்கள். கார்த்திக் தியாகியின் கடைசி ஓவரில் ஒன்பது ரன்கள் என இரக்கமே காட்டாமல், டூவே லேனில் மற்றவர்களுக்கு வழியேவிடாமல் பறக்கும் டிப்பர் லாரி போல ஸ்கோரை பறக்கவிட்டார்கள் இருவரும்.
19வது ஓவரில் மீண்டும் புவி. முதல் பந்தையே மேஜிக் போல ஸ்விட்ச் ஹிட்டில் பவுண்டரி தட்டிவிட்டார் வார்னர். அடுத்தடுத்து பவுண்டரிகளை தட்டிவிட ஓவரின் முடிவில் 92 ரன்களில் வந்து நின்றார் வார்னர். ஸ்கோர் 188/3. கடைசி ஓவர். எட்டே ரன்கள் சதத்திற்கு. மறுமுனையில் 49 ரன்களில் பவல். முதல் பந்தில் சிங்கிள் தட்டி அரைசதம் கடந்து வார்னருக்கு ஸ்ட்ரைக் கொடுப்பார் பவல் என்றுதான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் வார்னர் எழுதிய ஸ்கிரிப்ட்டோ வேறுமாதிரி இருந்தது. முதல் பந்தில் சிக்ஸர், அடுத்தடுத்து ஹாட்ரிக் பவுண்டரி என பவல் ஐந்தாவது கியரில் பாய்ந்துகொண்டிருக்க, மறுமுனையில் பவலின் ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஆரவாரமாய் கைதட்டிக்கொண்டிருந்தார் வார்னர். அந்த ஓவரில் மட்டும் 19 ரன்கள். ஸ்கோர் 207/3.
`எனக்காக சிங்கிள் தட்டாதே. கிரிக்கெட் அப்படி ஆடப்படுவதில்லை. சிக்ஸர்களாக சாத்து' என கடைசி ஓவருக்கு முன் வார்னர் தன்னிடம் சொன்னதாக முதல் இன்னிங்ஸ் பிரேக்கில் சொன்னார் ரோவ்மேன் பவல். சிலருக்கு அதைக் கேட்டதும் `சட்டை சைஸ் என்னவா இருந்தா என்ன அண்ணே? மாத்தி மாத்தி நாம எல்லாருமே போட்டுக்கலாம்ல' என சொல்லும் வானத்தைப் போல விஜயகாந்த் மீம் டெம்ப்ளேட் ஞாபகம் வந்தது. சிலருக்கு, `நீ லவ் பண்ணா என்ன நான் லவ் பண்ணா என்ன, மொத்தத்துல அந்த வீடு வெளங்காமப் போகணும்' எனச் சொல்லும் வின்னர் வடிவேலு டெம்ப்ளேட் ஞாபகத்திற்கு வந்தது.
சேஸிங்கில் ஷர்துல் வீசிய முதல் ஓவரில் வெறும் நான்கே ரன்கள். அந்தப் பிரஷரில் தூக்கியடிக்க ஆசைப்பட்டு அடுத்த ஓவரில் கலீல் பந்தில் அவுட்டாகி வெளியேறினார் அபிஷேக் ஷர்மா. ஹைதராபாத் சேஸ் செய்து ஜெயித்த ஆட்டங்களில் அபிஷேக்கின் பங்கு முக்கியமானது. இப்போது இரண்டாவது ஓவரிலேயே அவர் காலி. பிரஷர் குடிகொண்டது சன்ரைசர்ஸ் முகாமில். ஆனாலும் எவ்வளவு முக்கியும் ரன்கள் மட்டும் எந்தத் திசையிலிருந்தும் வரவில்லை. முதல் நான்கு ஓவர்களில் 23 ரன்களே. இந்த முறை ஸ்கோர் போர்டு பிரஷருக்கு பலியானது கேன் வில்லியம்சன். அநேகமாய் இந்த சீசனில் தங்கள் கேப்டன் அவுட்டானதற்கு சந்தோஷப்படும் ரசிகர்கள் ஹைதராபாத் அணிக்கே அதிகம் இருப்பார்கள். கடந்த சீசன் வரை இதை கொல்கத்தா ரசிகர்கள் மார்கனுக்கு செய்துகொண்டிருந்தார்கள்.
பந்துக்கு 'இதுதான் பவுண்டரி' என கொஞ்சமாவது சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்த ராகுல் திரிபாதியும் மிட்செல் மார்ஷ் புண்ணியத்தில் கிளம்ப, களத்தில் இப்போது பூரனும் மார்க்ரமும். முதல் இன்னிங்க்ஸில் வார்னரும் பவலும் செய்ததை இந்த இன்னிங்க்ஸில் இவர்கள் இருவரும் செய்தார்கள். குல்தீப் வீசிய பத்தாவது ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், மிட்செல் மார்ஷின் அடுத்த ஓவரில் மூன்று பவுண்டரிகள், குல்தீப்பின் அடுத்த ஓவரில் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்கள் என பிரஷரை கட்டுக்குள் வைத்திருந்த இந்த இணையை மீண்டும் கலீல் வந்துதான் பிரிக்கவேண்டியது இருந்தது. 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்திருந்த மார்க்ரம் லாங் ஆப்பில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். ஸ்கோர் 13 ஓவர்கள் முடிவில் 101/4.
அவர் போனதும் ட்ரைவிங் சீட்டில் ஏறி நின்று ஆக்ஸிலேட்டரை மிதிக்கத் தொடங்கினார் பூரன். நார்க்கியா, தாக்கூர் என யாரும் அவர் தாக்குதலுக்கு தப்பிக்கவில்லை. தப்பவில்லை என்பதைத் தாண்டி, 'இந்தாப்பா அடிச்சுக்க' என பூரனுக்கு வேண்டிய லைனிலேயே பந்தைப் போட்டபடி இருந்தார்கள். அவரும் 'உனை அடிக்காத நாளின்று நாளில்லையே' என கரகரகவென கதக் ஆடி சுழலும் விஸ்வரூபம் கமல் போல சுத்தி சுத்தி அடித்தார். அந்த முனையில் ஷஷாங்க், அப்பாட் என பேட்ஸ்மேன்கள் வந்து வந்து போய்க்கொண்டிருந்தபோதும் கவலையே படவில்லை. அடித்த அடியில் அடுத்த நான்கு ஓவர்களில் 52 ரன்கள். 29 பந்துகளில் பூரன் அரைசதம். ஒருகட்டத்தில் தூரத்து நட்சத்திரம் போலத் தெரிந்த டார்கெட் இப்போது சன்ரைசர்ஸ் பேட்ஸ்மேன்களுக்கு மொட்டைமாடி குண்டுபல்ப் போல தொட்டுவிடும் தூரத்தில் தெரிந்தது.
ஆனால் அந்த பல்ப் பியூஸை 18வது ஓவரில் பிடுங்கிவிட்டார் ஷர்துல். ஏற்கெனவே இந்த ஓவரில் 12 ரன்கள் அடித்திருந்த பூரனுக்கு டாஸ் பாலை போட்டுக்கொடுக்க அவர் டைமிங் மிஸ் செய்து தூக்கியடிக்க பவலிடம் கேட்ச் ஆனது பந்து. உயரத்திற்காக பூரன் நோ பால் கேட்க, மூன்றாவது அம்பயரோ, 'தம்பி க்ரீஸ் கோயம்பேடுல இருந்தா நீங்க என்ன திருச்சி பைபாஸ்ல நிக்கிறீங்க? அப்படியே பஸ் ஏறிப்போங்க' என அவுட் கொடுத்து அனுப்பிவைத்தார். அதன்பின் ரன்ரேட்டைக் குறைக்கும் சம்பிரதாய ஆட்டத்தை இரு அணிகளுமே ஆட, 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் எட்டு விக்கெட்களை இழந்து 186 ரன்கள் மட்டுமே எடுத்தது.
'செஞ்சுரி போடும் வேலையை பட்லரே செய்துகொள்ளட்டும். எனக்கு என் அணி ஜெயித்தால் போதும்' என சிரித்தபடி ஆட்டநாயகன் விருதை வாங்கிவிட்டு சொன்னார் வார்னர். செஞ்சுரிகளை விட்டுக்கொடுத்தாலும் டேபிளில் தன் இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுப்பதாய் இல்லை டெல்லி அணி. கிட்டத்தட்ட இரண்டு அணிகள் ப்ளே ஆப் உள்ளேயும் இரண்டு அணிகள் தொடருக்கு வெளியேயும் போய்விட்ட நிலையில் மீதமிருக்கும் இரண்டு இடங்களுக்குத்தான் ஆறு அணிகள் மல்லுகட்டிக்கொண்டிருக்கின்றன.
அதிலும் ப்ளே ஆப்பிற்கு நெருக்கடி இல்லாமல் செல்ல, கொல்கத்தாவிற்கு எஞ்சிய எல்லா போட்டிகளிலும் வெல்ல வேண்டும்; டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப் அணிகள் நான்கில் மூன்றில் வெல்ல வேண்டும் என்பதால் இனி வரும் ஒவ்வொரு ஆட்டமும் ஒவ்வொரு அணிக்கும் முக்கியம். இப்படியாக, லட்சோப லட்சம் எதிர்பார்ப்புகளை கனவுகளை சுமந்தபடி இந்த சீசனின் இறுதிக்கட்டத்திற்குள் நுழைந்திருக்கிறது ஐ,பி.எல்.
source https://sports.vikatan.com/ipl/ipl-2022-warner-and-powell-put-delhi-in-the-driver-seat-against-hyderabad
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக