Ad

வியாழன், 5 மே, 2022

கலியன் மதவு - சமூக நாவல் | அத்தியாயம் 2

‘இரவு முழுவதும் தூக்கம் வராமல் தவித்தார் மாதய்யா. நடு நடுவே கொஞ்சம் கோழித் தூக்கம் போடுவதும், திடீரென்று உலுக்கி எழுவதும்... சிறிது நேரம் உலாத்துவதும்... வெற்றிலை சீவல் போட்டுத் துப்புவதும்... வாய் கொப்பளிப்பதும்... தூக்கமின்றிப் புரள்வதுமாக இரவைப் போராட்டத்தோடு கழித்தார்.

மாதய்யா கிராம சேவகர். கொஞ்சம் முன்கோபி. அவருடைய கோபமே அவரின் பலம் என்றால் அதுவே அவருக்கு பலவீனமும் கூட.

‘கோபம் இருக்கிற இடத்துலதான் குணம் இருக்கும்.’ என்ற பழமொழி இவருக்கு முழுமையாகப் பொருந்தும். கிராமத்தில் அவருக்கு அவ்வளவு மரியாதை.

‘காலந்தவறாமை’ என்பது அவர் ரத்தத்தில் ஊறிய விஷயம்.

சுவர் கடிகாரம் ஐந்து அடித்து ஓய்ந்தது. மாதய்யா எழுந்து மாட்டுத் தொழுவத்தை நோக்கிச் சென்றார்.

கவணையிலிருந்து பசுக்கள் இழுத்துப் பரத்திய வைக்கோலைக் குச்சியால் திரட்டி மீண்டும் கவணைக்குள்ளே போட்டார். சாணத்தை மாட்டின் குளம்புகள் மிதிபடாத தூரம் ஒதுக்கித் தள்ளினார்.

கோதாவரி, கங்கா, காவேரி, சிந்து, ரோஹிணி... என்று பெயர் சொல்லி ஒவ்வொரு பசுவின் கன்னத்தைத் தடவியும், முகம் தூக்கிக் காட்டிய பசுக்களின் கழுத்தை இதமாக வருடியும் கொடுத்தார். பசுக்களின் கழுத்தில் கட்டப் பட்டிருந்த மணிகளின் ஓசை ஜலதரங்கத்தில் வாசிக்கும் சுப்ரபாதமாய் ஒலித்து, வைகரையின் அழகுக்கு மேலும் அழகு கூட்டியது...

கோதாவரிப் பசு கோமியம் இறக்கியது. “ஈஸ்வரா...” என்று சொல்லிக்கொண்டே, உள்ளங்கையில் கோமியம் ஏந்தி தலையில் தெளித்துக்கொண்டார்.

மாதய்யாவின் மனைவி குந்தலாம்பாள், பளீரெனப் பளிச்சிடும் பால் தூக்கும், விளக்கெண்ணைக் கிண்ணத்தையும் கொண்டுவந்து வைத்தாள். கோதாவரிப் பசுவை அவிழ்த்துத் தனிக்கொட்டகையில் மாற்றிக் கட்டினார்.

கோதாவரிப் பசுவை மட்டும் வழக்கமாக அவரே கறந்துவிடுவார். மற்ற பசுக்களை கோனார் கிருஷ்ணன் வந்து கறப்பார்.

‘ஒவ்வொரு பசுவையும் தனிக் கொட்டகையில் கட்டித்தான் கறக்கவேண்டும் என்பது மாதய்யாவின் சித்தாந்தம். கன்றுகளும் குழந்தைகள்தான். ஒரு கன்று தாய் மடியில் பால் ஊட்டும்போது மற்ற கன்றுகள் அதைப் பார்த்து ஏங்கக்கூடாது...’ என்று நினைப்பவர் அவர்.

இது கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் ஒவ்வொரு பசுவையும் கறந்தபின் இடம் மாற்றி, அடுத்த கறவைப் பசுவை கொண்டு வந்து கட்டிக் கறப்பது பழகிவிட்டது கிருஷ்ணக் கோனாருக்கு.

மாதய்யா பால் கறக்கும் அழகே அழகு.

Representational Image

ஒவ்வொரு அவயத்திலும் ஒவ்வொரு தெய்வத்தை ஆவாஹனம் செய்துகொண்டு, நம்மை ரட்சிக்கும் பசுவாகிய நடமாடும் தெய்வத்திடமிருந்து, விநயமாக பிரசாதத்தைப் பெற்றுக்கொள்வது போல இருக்கும் அந்தப் பால்பிழியும் காட்சி.

தான் பிரசாதம் பெறும் முன், மற்றவரை பெறச்செய்து, பிறர் அனுபவிக்கும் ஆனந்தத்தைக் கண்டுப் பேரானந்தம் கொள்ளும் யோகிபோல் இருக்கும் அவர் செயல்.

கயிற்றுடன் கன்றை அவிழ்த்துவிட்டு, கன்று பால் குடிக்கும் ஆவலில் துள்ளி ஓடி மடியில் வாய் வைக்க, கழுத்துத் தும்பு கால்களை இடற விழுந்து எழுந்து ஊட்டும்போது கால் மிதி பட்டு, கயிறு கழுத்தை இறுக்க ஊட்டுவதில் சிரமம் ஏற்பட, கடி தாங்காமல் பசு கால்த் தூக்க, கன்றுக்கு தாய்மடியே துயரமாய் மாறும் அவலம் மாதய்யா கறவையில் இருக்காது.

கழுத்தில் தடையின்றி, கழுத்துப்பூட்டை அவிழ்த்துவிடுவார். கன்று சுதந்திரமாய் மடிமுட்டிக் குடிக்கக் குடிக்க, அந்தக் கிறக்கத்தில் பசு கன்றின் பிருஷ்டத்தை நாவால் நக்கிச் சுவைக்க, தன்னை இழந்த நிலையில் பசு, பால் முழுவதையும் மடியில் இறக்கும் வரை காத்திருப்பார்.

மடியில் பால் சுரந்து நிறைந்த சேதியை பசு வால் தூக்கி கோமியம் இறக்கித் தெரிவித்ததும், எல்லோரையும் போலக் கன்றை ஒரே இழுப்பு இழுத்து அரக்கத்தனமாக எட்டக் கட்டிவிட்டு பால் தூக்குடன் மடி தொடும் அவசரம் அவரிடம் கிடையாது.

ஊறித் திளைத்துத் திணவெடுத்துப் ‘பும்ம்...மென’ப் பம்மி நிற்கும் பால் மடியில் கன்று சுவாரஸியமாய் பால் குடிக்க, நுறை பிதுங்க வாயில் நிறைந்துள்ள பாலை தொண்டைக்குள் இறக்க, ஒரு கணம் சுரப்பிலிருந்து கன்று வாயை எடுக்கும்போது, அதை ஒரு குழந்தைபோல இரு கைகளாலும் ஏந்தி அரவணைப்போடு மெதுவாக நகர்த்திக் கட்டுவார்.

கன்றின் பிருஷ்டத்தை விட்டு, கன்றின் மேனியெங்கும் பசு நாவால் சுவைத்துக் கொண்டிருக்க, அந்தச் சுகத்தில் கன்று மெய் மறந்து, பருகிய பாலை அசை போடும் நேரத்தில், இளகிய பால் சுரப்பை விளக்கெண்ணை கொண்டு மேலும் இளக்குவார்.

தொடைகளின் நடுவே இடுக்கிய பால் தூக்கில் பால் பீய்ச்சும்போது, தொடையில் சட்டெனப் பரவும் பாலின் இதமான வெம்மை, அதுவும் குளிர்காலத்தில் அதன் சுகமே அலாதி.

Representational Image

பிழியும்போது பாலும் தூக்கும் சந்திக்கும் சங்கீதத்தை எந்த பக்க வாத்திய வித்வானும் தந்துவிட முடியாது. நுங்கும் நுரையுமாகப் பொங்கும்போது, பால் தூக்கிலிருந்து பரவும் பச்சைப் பால் மணம்.

‘இன்னும் எடுத்துக்கொள்... எடுத்துக்கொள்...’ என்று ஊற்றாய்ப் பெருக்கி, மடியை வற்றாமல் வைத்திருக்கும் பசு. மாதய்யா கை பட்டால் வற்றித் தலைமாறின அடிமாடு கூட அம்பாரம் பால் கறக்கும் என்பார்கள் ஊரில்.

வெண்மையான அந்தச் சங்கீத ஆலாபனை முடிந்து, அந்தப் பாலின் நுரை, பொங்கல் வாழ்த்து அட்டைகளில் எழுதிய பொங்கல் பானைச் சித்திரம் போல், கோபுரமாய்ப் பொங்கி நிற்க, இரண்டு கைகளாலும் பால்தூக்கைப் பிடித்தபடி, எழுவார்.

அடுத்து, கன்று பசுவின் மடியில் ஊட்டி இதம் பெற்று, இதமளிக்கும்.

“ஈஸ்வரா...” என்று சொல்லிக்கொண்டே பால் தூக்கை ஓரமாக வைத்துவிட்டு கையில் பிசுபிசுக்கும் விளக்கெண்ணையை பசுவின் முதுகில் தட்டித் தடவிவிட்டு, மாட்டை அவிழ்த்து வெட்ட வெளி முளையில் கட்டினார். கன்று தொடர்ந்து மடிமுட்டிக்கொண்டிருந்தது

செப்புக் குடமும் விபூதிச் சம்புடமும் எடுத்துக்கொண்டு மீண்டும் மாட்டுத்தொழுவம் வந்தார். காளை தயாராக இருந்தது. “வீரா போலாமா...?” என்று காளையிடம் கேட்டார்.

குதிரை தலையை அசைத்து, மணியோசை எழுப்பி, நேரமாயிற்று எஜமானே புறப்படுங்கள் என்று சொல்வதாக Stopping By Woods In A Snowy Evening என்ற கவிதையில், Robert Frost என்ற அமெரிக்கக் கவிஞர் எழுதுவாரே, அதுபோல தலை ஆட்டி மணியோசை எழுப்பி மாதய்யாவை புறப்படச் சொன்னதைப் போல இருந்தது அந்தக் காட்சி.

மாதய்யா வீரனோடு காவிரியாற்றுக்குச் செல்கையில், உயரம், குள்ளம், நோஞ்சான், கட்டை, கருப்பு, மாநிறம், சேப்பு, சோம்பேறி, ஊத்தை வாய், ரெண்டும் கெட்டான், அசடு... இப்படிப்பட்ட விதவிதமான பெண்கள், பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அறிவை, தெரிவை, பேரிளம்பெண் என அவரவர் வீட்டு வாசலில், கோலம் போட்டுக்கொண்டிருந்தார்கள்.

மாதய்யா ஓட்டிச் சென்ற வீரனின் சலங்கைச் சத்தம் அந்தப் பெண்களின் பேச்சுக்குப் பின்னணி இசையாய் லயத்தோடு ஒலித்தது.

மேலக்கோடி பெருமாள் கோவிலையும் தெருவையும் பிரிக்கும் பாதையில் வலப்புறமாகத் திரும்பினார். நாய்க்கர் ரைஸ் மில்லை ஒட்டிய ராஜம்மா தென்னந்தோப்பைத் தாண்டி நேராகச் சென்றார்.

எல்லையம்மன் கோவில் முகப்பில் மாட்டை நிறுத்திவிட்டு இடிந்து சிதிலமான கோவில் மதிலை பார்த்துக்கொண்டே நின்றார். ‘இதை சீக்கிரம் புதுப்பித்துவிடவேண்டும்...’ என்று மனதார எண்ணினார். அதை ஆமோதிப்பது போல வீரனின் சலங்கை ஒலித்தது.

எல்லையம்மன் கோவிலுக்குப் பின்புறம் மூன்று ஏக்கர் நிலம் மாதய்யாவுடையதுதான். அதில் சம்பா பட்டம் மட்டும்தான் பயிரிடுவார். கோவிலுக்குப் பின்புறம் உள்ளதாலும் அதில் சம்பாப்பட்டம் மட்டுமே பயிரிடுவதாலும் ‘கோவில் சம்பாக்காணி’ என்ற பெயரே அதற்கு நிலைத்துவிட்டது. தரிசாகக் கிடக்கும் மற்ற நாட்களில் மந்தக் கரை போல இதில் ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவார்கள்.

மாதய்யா, வீரனைப் பெரிய வாய்க்காலில் குளிப்பாட்டிவிட்டு அதைத் தன் சம்பாக் காணியில் மேய்ச்சலுக்கு விட்டார். குடமும் விபூதிச் சம்புடமுமாய் காவிரிக்குப் புறப்பட்டார். பெரிய வாய்க்கால் பாலம் தாண்டி நூறு அடியில் ரயில்வே கேட். ரயில்வே கேட்டிலிருந்து ஒரு ஃபர்லாங்கில் தார்சாலை. சாலைக்கு மறுபுறம் சாலையை ஒட்டிப் பாயும் அகண்ட காவேரி.

காவிரிக்கும் தார்ச் சாலைக்கும் இடையிலிருந்த மயானத்தில் ஆள் நடமாட்டம் தெரிந்தது.

அகண்ட காவேரியில், பாங்காக அமைக்கப்பட்ட கருங்கல் படிக்கட்டுகள். சாலையிலிருந்து நான்கு படிக்கட்டுகள் ஏறி பின் காவிரிக்கு இறங்கவேண்டும்.

படியேறும் முன்னே படித்துறையில் பெண்டுகள் பேச்சுக்குரல் கேட்டு, அதிலிருந்து பத்தடி தள்ளியிருந்த ‘கருமாதிப் படிக்கட்டில்’ இறங்கினார் மாதய்யா.

எல்லோரும் குளிக்கவும் துவைக்கவும் உபயோகப்படுத்தும் படிக்கட்டில் கருமாதி, கல்லெடுப்பு என்று செய்யும்போது, வழக்கமாகக் குளிக்க வருபவர்களுக்கு பாதகமாய் இருக்கும் என்பதால், அது போலக் காரியங்களுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட படிக்கட்டு அது.

சாதாரண நாட்களிலும் ஜனங்கள் அதை உபயோகிப்பதும் உண்டு.

மாதய்யா கருமாதிப் படிக்கட்டின் வழியாக காவிரியில் இறங்கினார்.

விடிகாலைக் காவிரிக் குளியல் ஒரு சுகானுபவம். அந்த நேரத்தில் சலசலத்து ஓடும் காவிரி நீர் இளஞ்சூடாக, உடம்புக்கு இதமாக இருப்பதன் ரசவாதம்தான் என்ன...?

தண்ணீரில் நின்றபடி கிழக்குத் திசையில் பார்த்தால் தெரியும் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம். “கஸ்தூரி ரெங்கா, காவேடி ரெங்கா, ஸ்ரீரங்க ரெங்கா... ரங்கா...” என வாய்விட்டு உச்சரித்துக்கொண்டே அழுந்தி அழுந்தித்... தலை முழுகினார்.

கரலாக்கட்டை போன்ற உறுதியான உடம்பும், எதையும் சாதிக்கும் திடமான மனோ பலமும், வயதுக்கு மீறிய வலிவும் வர இந்தக் காலை நேரக் குளியல்தான் காரணம் என்பது மாதய்யாவின் அசைக்க முடியாத நம்பிக்கை.

குளித்து, அனுஷ்டானம் முடித்துக்கொண்டு தண்ணீர் குடத்தை ஒரு கையிலும், மறு கையில் வீரனையும் பிடித்துக்கொண்டு அவர் வரும்போது, தைத்ரீயம் தவழும்.

மாதய்யருக்கு நெடிய வடிவம். நீள் வட்ட முகம். முன் வழுக்கை. சுமாரான வெளுப்பும் செம்பட்டையுமான தலைமுடியைக் விரல்களால் கோதி, நெல்லிக்காய் அளவுக்குக் கட்டிய குட்டிக் குடுமி. பத்தாறு வேட்டியை கச்சம் வைத்து கட்டிக்கொண்டு, மார்பை மூடி யோக வேஷ்டியாய்ப் போர்த்திய அங்கவஸ்திரத்தோடுதான் அவரை எப்போதும் பார்க்கமுடியும்.

காதுகளில் தொங்கும் சிகப்புக் கல் கடுக்கனுக்கு ‘மேட்ச்’சாக இருக்கும், வெற்றிலை காவி ஏறிய பற்கள்.

“மாதய்யாவின் அப்பாவை வெற்றிலைப் பெட்டி, பாக்குவெட்டி சகிதம் உட்கார வைத்து, ஓவியர் சில்பி வரைந்த கோட்டோவியம் வீட்டின் கூடத்தில் கட்டம் போட்டு மாட்டி இருக்கிறது.

“சீனிவாசா, என்னைப் பார்த்து பொம்மை போடப் போறியா? போடு என்று உரிமையோடு சொன்ன அந்த நாளை அடிக்கடி எல்லாருக்கம் சொல்வார் மாதய்யா.

அந்த ஓவியத்தைப் பார்த்தால் மாதய்யா என்றுதான் எல்லாரும் சொல்வார்கள். அப்படி ஒரு முக ஒற்றுமை அப்பாவுக்கும் மகனுக்கும்.

ஒற்றுமை உருவத்தில் மட்டுமா..? கோபம், பொறுப்பு, தர்மசிந்தனை, பரோபகாரம்... என எல்லாவற்றிலுமே அப்பாவைப்போல் பிள்ளை மாதய்யா.

காவிரியிலிருந்து திரும்பியதும் பட்டகசாலைக் கொடியில் உலர்த்திய வேஷ்டியை குச்சியால் தள்ளி எடுத்து உடுத்திக்கொண்டு நெடுஞ்சாண்கிடையாக அப்பாவின் படத்துக்கு முன் விழுந்து வணங்கினார்.

குந்தலாம்பாள் கொண்டுவந்து வைத்த அவல் கஞ்சியைக் குடித்தார்.

தாம்பாளம், செப்புக்குடம், மணி, விளக்கு, திரி, எண்ணைசம்புடம், புஷ்பம், பழம், தேங்காய், ஊதுபத்தி, தீப்பெட்டி என அனைத்து பூஜை சாமான்களையும் ஒரு மூங்கில் கூடையில் எடுத்து வைத்துக்கொண்டார்.

கூடையை வண்டியில் வைத்துவிட்டு வண்டியில் உட்கார்ந்து, வகுப்பில் நல்ல மாணவனை ஆசிரியர் முதுகில் தட்டிக் கொடுப்பது போல, வண்டி இழுக்கும் வீரன் முதுகில் தட்டிக்கொடுத்தார். வீரன் வண்டியை சீராய் இழுத்துச் சென்றான்.

சப்பட்டி மதகு கடக்கும்போது, மைனர் காணியில் வெளியூர் ஆட்கள் அரப்பறுத்துக்கொண்டிருந்தார்கள்.

கப்பி சாலையில், ‘கடக்... முடக்... டடக்... டொடக்...’என ஓசை எழுப்பியவாறு வண்டி சென்றுகொண்டிருக்க, எதிர்ப்பட்ட ஓரிருவர் “கும்பிடறேங்கய்யா...!” என்றுவிட்டுப் போனார்கள்.

“அறுப்புங்களாய்யா...?” என்று கேட்டார் கையில் கோலோடு எதிர்பட்ட அண்ணாமலை.

“அறுப்பில்ல... அண்ணாமல... சடையங்கோயில் காணில காளவா முகூர்த்தம் பண்ணிப் பிரிக்கோணும்கறேன்...”

“வேக்காடு சீரா இருக்குதுங்களா...?”

“காத்து அப்பப்ப வீசக்குள்ள எப்படி சீரா இருக்கும்னேன். தென்னண்ட கைல உருக்கடிச்சிறுக்குமோனு சமுசயமாத்தான் இருக்கு... பிரிச்சாத்தான் தெரியும்னேன்...”

“கல்லு குடுக்கறதுங்களா...?”

“உமக்கு வேணுமோ...?”

“எனக்கேன்...? நாட்டுச் செங்கல்லுக்கு நல்ல டிமாண்டு இருக்கேன்னு கேட்டேன்...”

“தர்றத்துக்கில்ல, அம்பது கல்லுதான் போட்ருக்கேன். கல்லு வீடு கட்டிக்கணும்னு தொப்ளான் ஆசையாக் கேட்டான். அதோட கோவில் மதிலுக்கும் தரலாமுன்னு.... எனக்கும் வால்வீச்சு வீசியாவணும்... அதுக்கே பத்துமோ பத்தாதோ...”

“போட்டதுதான் போட்டீரு... மெனக்கடுக்குக் குறைச்சலில்லே... இன்னும் அதிகமாப் போட்டிருக்கலாமில்ல...!”

“அடுத்தாப்ல போட்டாப் போச்சு... வரட்டுங்களா...!”

“நல்லது... வாங்க...”- அண்ணாமலை தன் வழி சென்றார்.

‘அண்ணாமலை சொன்னாப்ல கொஞ்சம் அதிகமா போட்டிருக்கலாமோ...!’ என்ற சிந்தனையில் வண்டியை ஓட்டிக்கொண்டிந்தபோது, வண்டிச் சக்கரம் ஒரு நொடியில்(பள்ளத்தில்) ஏறி இறங்கி மாதய்யாவை அலைக்கழித்தது.

“அய்யா, கும்பிடறேனுங்க...!” எதிரில் வந்த மாணிக்கம் கும்பிடு போட்டான்.

“என்னடா மாணிக்கம்... அறுப்போ...?”

“ஆமாங்க... நானே அய்யாவைப் பார்க்கத்தான் வந்துக்கிட்டே இருக்கேன். ‘கும்பிடப்போன தெய்வம் குறுக்கே வந்தாப்ல நீங்களே வந்துட்டீங்க...”

“எதாவது சேதி உண்டா மாணிக்கம்...?”

“பூசர (பூவரசு) களத்து-மேட்ல உங்க களம்தான் காலியாக் கெடக்கு... மத்ததுலெல்லாம் வேல நடக்குது...” என்று இழுத்தான்.

“நான் அடுத்த வாரம்தானே அறுப்பு தொடங்கப்போறேன்...!”

“அது தெரிஞ்சிதாங்க, உங்க களத்தை நாலு நாளைக்கு கேக்கலாம்னு...”

“போட்டுக்க... போட்டுக்க ... எனக்கு அறுப்பு தொடங்கினதும், இடைஞ்சல் இல்லாம காலிபண்ணிக் கொடுத்துட்டா சரிதான்...”

“சரிங்க...”

“ஏண்டா... சடையங்கோவில் வழியாத்தானே வர்றே... தொப்ளான் கண்ல பட்டானாடா...?”

‘தொப்ளான் செத்துட்ட சேதி அய்யாவுக்குத் தெரியாது போலிருக்கே... சொல்லிரலாமா...!’ என்று குழம்பிக்கொண்டு நின்ற மாணிக்கம், ‘காலை நேரத்துல நம்ம வாயால அவருக்கு இழவு செய்தி சொல்ல வேண்டாம்...’ என்ற எண்ணத்தில் “பாக்கலீங்களே...” என்றான்.

“எதுக்கப் பாத்தா நான் காளவாயாண்ட இருக்கறதா சொல்லி விரசா வரச்சொல்லு...” சொல்லிவிட்டு “வீரா... போ... என்று செல்லமாய் தட்டி வண்டியைக் கிளப்பினார்.

“சரிங்கய்யா...!” ஒற்றை வார்த்தையை அவசரமாய்க் கொட்டிவிட்டு விரைவாய் இடத்தைக் காலி செய்தான் மாணிக்கம்.

மாணிக்கத்தின் மனசில் குற்ற உணர்வு உறுத்தியது.

“அய்யா...!” என்று அழைத்துக்கொண்டே, மாட்டுவண்டியைத் தொடர்ந்து ஓடினான்.

தலைக் கயிற்றை இழுத்து வண்டியை நிறுத்திய மாதய்யா “ஏண்டா...! மாணிக்கம் துரத்திக்கிட்டு ஓடி வந்த நீ இப்படி ‘கம்’முனு நிக்கிறே...?”

“அய்யா... உன்னை மன்னிச்சேன்னு ஒரு வார்த்தை சொல்லுங்க மொதல்ல...”

“என்னடா சொல்றே...? நான் எதுக்கு மன்னிக்கணும்...? நீ எனக்கு என்ன தப்பு பண்ணினே...?”

“அய்யா, நான் தப்புதான் பண்ணிட்டேன். ஒரு உண்மைய மறைச்சிட்டேன்...”

“களம் உனக்காகனு சொல்லி வேற யாருக்காவது... அப்படியே செஞ்சாலும் இது ஒரு பெரிய தப்பு இல்லியே... இதெல்லாம் சகஜம்தானே...”

Representational Image

“அதில்லைய்யா... தொப்ளானைப் பாத்தியானு கேட்டீங்கல்ல...”

“அதான் பாக்கலைனு சொல்லிட்டியே...!”

“அதுதானுங்க பொய்யி... தொப்ளான் விடி கருக்கல்ல செத்துட்டாருங்க...”

“என்ன...! தொப்ளான்... செ...த்...து...ட்டா...னா...??” அதிர்ந்த மாதய்யாவின் முகம் வாட்டம் கண்டது...

சடையன் கோவில் காணியை நோக்கி வண்டியை வீரன் மெதுவாக இழுத்துச் செல்ல, மாதய்யாவின் மனம் பின்னோக்கிச் சென்றது.....

“அய்யா...! நாளைக்கு விடி கருக்கல்’ல நீங்க காளவாய்க்கு வந்துருங்க... பூசை போட்டுப் பிரிச்சிருவோம்...”

நேற்று மாலை சொல்லிவிட்டுப் போன தொப்ளான் இன்று இல்லை என்று நினைக்கையில் மாதய்யாவுக்கு ஆயாசமாக இருந்தது. இனம்புரியாத கவலை அவரைப் பற்றிக்கொண்டது.

‘இடிக் கொம்புக்காரன் கோழிக்குஞ்சுக் கூச்சலுக்கு அஞ்சினா சரியா வராது... எப்படா... இவன் தடுக்கி விழுவான், கைக் கொட்டிச் சிரிக்கலாம்’னு காத்திருக்கற ஜனங்களுக்கு நடுவுலதான் நீ தடுக்கி விழுந்துராம எல்லாத்தையும் நிர்வாகம் பண்ணணும். அப்படியே தடுக்கி விழுந்துட்டாலும், விழுந்துட்டோமேனு விழுந்தே கிடக்காம பயிற்சி பெற்ற போர் வீரனைப் போல எழுந்து நின்னு வாழ்க்கையோடப் போராடணும். எச்சரிக்கையா இருக்கணும்... எதுக்கும் கலங்காம இருக்கணும்... நீ மிலிட்டரில இருந்தவன். உனக்கு எப்பவும் கலக்கமே வரக்கூடாதுடா மாது...” அப்பா தன் கடைசீ காலத்தில் அடிக்கடிச் சொல்லிச் சொல்லி உருவேற்றியது நினைவில் உதித்தது.

பழக்கப்பட்ட வீரன், சடையன் கோவிலின் முன் நின்றான். பல்லக்கு நுகத்தடியை கழுத்திலிருந்து விடுவித்துவிட்டு பூஜை சாமான்கள் அடங்கிய கூடையைக் கையில் எடுத்துக்கொண்டு கூப்பிடு தூரத்தில் இருக்கும் காளவாய் நோக்கி நடந்தார்.

நினைவுகள் பின்னோக்கி ஓடின.

தொடரும்...

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.



source https://www.vikatan.com/oddities/miscellaneous/my-vikatan-novel-kaliyan-madhavu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக