Ad

வெள்ளி, 13 மே, 2022

நாடோடிச் சித்திரங்கள்: `ஏதிலிக் குருவிகள் புறக்கணிக்கும் நிலங்கள்...’ | பகுதி 33

ஏதிலிக் குருவிகள் புறக்கணிக்கும் நிலங்கள் வளமையற்றுப் போகுமாம். விசும்பின் திசையெங்கும் பறந்து திரியும் ஏதிலிக் குருவிகள் நிலத்தைக் கைவிடும் நாளில் அந்நிலமே ஏதிலியாகிப் போகுமென்பது யாருமறிந்திராத நிதர்சனம். ஏதிலிக் குருவிகளுக்கு இயற்கையின் ரகசியங்கள் தெரியுமாம்.

எனக்கு இரத்தினம் அறிமுகமாகும் முன்னமே அஸ்வினி அறிமுகமாகியிருந்தாள். இரத்தினத்துக்கு நான் அறிமுகமாகும் முன்னமே அஸ்வினி அறிமுகமாகியிருந்தாள். இரத்தினத்துக்கும் எனக்குமிடையே பொதுவான நட்பாக அஸ்வினி இருந்தாள். நாங்கள் மூவரும் ஒரு வகையில் ஏதிலிக் குருவிகள்போல எங்கள் நிலங்களிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டவர்கள். எங்களிடம் அதற்கான காரணங்களும் இருந்தன. அந்தக் காரணங்களை அசைபோடுவதை நாங்கள் விரும்பியதில்லை.

நானும் அஸ்வினியும் டெல்லி காலம்தொட்டே நண்பர்கள். டெல்லியின் புறநகர்ப் பகுதியில் முழுவதுமாகச் சிதிலமடையாத ஓர் அரசாங்கக் குடியிருப்பின் நான்காவது தளத்தில் எங்களிருவரது வீடும் எதிரெதிரே இருந்தன. மும்பை தாராவி பகுதியைச் சேர்ந்த அஸ்வினிதான் ஒரே வாளி நீரில், ஒரு மூட்டை துணியைத் துவைத்தெடுப்பது எப்படியென்று எனக்குக் கற்பித்தவள். அஸ்வினியின் தாய் கமலா, உறவினர் ஒருவரால் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி அவரிடமிருந்து தப்பிப் பிழைத்து, தமிழகத்திலிருந்து மும்பைக்குச் சென்றவர். தொழில்முறை செவிலியரான அவர், தாராவி பகுதியில் ஒரு மராட்டியரை மணமுடித்து அங்கேயே தங்கிவிட்டார். தமிழகம் திரும்பும் எண்ணத்தை அடியோடு மறந்த அவர், அஸ்வினியையும் மராட்டியப் பெண்ணாக அடையாளப்படுத்தியே வந்தார்.

மும்பை | நாடோடிச் சித்திரங்கள்

இரத்தினம் தனது பதினாறாவது வயதில் ஒருநாள் தனது சொந்த ஊரான அம்பாசமுத்திரத்திலிருந்து நடந்தே திருநெல்வேலி ரயில் நிலையத்தை அடைந்து, அங்கிருந்து பல ரயில்கள் மாறி நாக்பூரை அடைந்து, அங்கு முகம் தெரியாத நபர்களின் உதவியால் நாக்பூரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் கன்ஹான் எனும் கிராமத்தை வந்தடைந்தார். வீட்டின் வறுமையும், மூத்த மகனான அவர்மீது விழுந்த பொறுப்புச் சுமை தாளாமல், கடன்காரர்களின் அவச்சொற்களால் அவருடைய பெற்றோரும் உடன்பிறந்தவளும் தற்கொலை செய்துகொள்ளவே, ஊரையும் உறவையும் விடுத்து, அம்பாசமுத்திரத்தின் எல்லையில் தனது காலணிகளைக் கழற்றி வீசிவிட்டு பாதங்கள் தேய்ந்து வெடித்துப்போன வலியை பொருட்படுத்தாமல் பல மைல்கள் கடந்து நாக்பூர் வந்தடைந்தவர் எனக்கு அறிமுகமாகியபோது அவருக்கு நாற்பது வயதாகியிருந்தது.

அஸ்வினியும் இரத்தினமும் என் வாழ்வில் வந்து சென்ற நாள்களும் அவையளித்த அனுபவங்களும் என்னை எல்லைகள் மீறி சிந்திக்கத் தூண்டின. இது என,து அது எனது, நான் இவ்விடத்தைச் சேர்ந்தவள், இம்மொழி பேசுபவள், இந்த அடையாளம் என்னுடையது என்கிற தட்டையான அணுகுமுறையை மாற்றி மனிதனை மனிதனாக மட்டுமே காணும் பக்குவம் வாய்க்கப்பெற்றேன்.

மும்பையின் செம்பூர் ரயில் நிலையத்தில் அனிகேத் எனும் மனிதரைச் சந்தித்த அஸ்வினி, அவர் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய சில நிமிடங்களிலேயே அவரைத் திருமணம் செய்துகொள்ள ஒப்புதல் அளித்துவிட்டாளாம். நான் திடுக்கிட்டேன்.

"ஒருத்தரோட பேசி, பழகி நல்லது கெட்டது தெரிஞ்சுக்காம எப்படித் திருமணத்துக்கு சரின்னு சொன்னே?" என்றேன்

அவள் "அவ்வளவெல்லாம் நான் யோசிக்கவில்லை. அவரிடம் அரசாங்கப் பணி இருந்தது. எனக்கு தங்குவதற்கு வசதியான வீடு கிடைக்குமென்றார். காற்றோட்டமில்லாத ஒற்றை அறையில் எங்கள் குடும்பத்தினர் அனைவரும் உறங்குவது நரக வேதனையாக இருக்கும். எனக்கு அதிலிருந்து விடுதலை கிடைத்தாலே போதுமென்று தோன்றியது. திருமணத்துக்கு ஒப்புக்கொண்டேன்" என்றாள்.

மும்பை ரயில் நிலையம் | நாடோடிச் சித்திரங்கள்

அஸ்வினி பி.காம் பட்டதாரி. வங்கிப் பணிகளுக்கான தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருந்தாள். அவள் திருமணம் செய்துகொண்ட அனிகேத் குடி பழக்கத்துக்கு அடிமையாகி, அஸ்வினிக்கு பெரும் தலைவலியாக மாறிப்போனான்.

நாக்பூரில் எங்கள் குடியிருப்புப் பகுதியில் வீடு மாற்றுவது, சுமை தூக்குவது, மின் இணைப்புகள் சரிசெய்வது, கழிவுநீர்க் குழாய்கள் சுத்தம் செய்வது... என அனைத்து உதவிகளுக்கும் இரத்தினம் மட்டுமே எங்களது தொடர்புப் புள்ளியாக இருந்தார். "மதராஸி பய்யா" என்று அவர் அப்பகுதியில் பிரபலம். இடமாற்றலாகிச் செல்லும் குடும்பங்கள் அவரை நான்கைந்து நாள்கள் குத்தகைக்கு எடுத்துக்கொள்வதுண்டு. அவரது வேலையின் சுத்தத்தை மெச்சிக்கொள்ளாதவரே அப்பகுதியில் இல்லையெனலாம்.

"மத்தவங்களுக்குத்தான் நீங்க மதராஸி பய்யா... எனக்கு உங்க பேரென்னன்னு சொல்லுங்க" என்று தமிழில் கேட்டதும், அவரது கண்கள் ஒரு நொடி மின்னின.

"ரத்தினம், என் பேரு ரத்தினம்" என்று தமிழில் தடுமாறிப் பேசினார். அந்தத் தடுமாற்றம் நெடுநாள்கள் நீடிக்கவில்லை. விரைவிலேயே நெல்லைத் தமிழின் பசுமையுடன் அவர் என்னுடன் பேசத் தொடங்கிவிட்டார். அஸ்வினியின் கணவன் அனிகேத் குடித்துவிட்டு எங்கு விழுந்திருந்தாலும், அஸ்வினி இரத்தினத்தை அனுப்பி அவனை அழைத்துவரச் சொல்வது வழக்கம். பல நாள்கள் அவனைத் தோளில் தூக்கிக்கொண்டு வந்து வீட்டில் கிடத்திவிட்டுப் போவார் இரத்தினம். அதற்கு அவர் கூலியேதும் வாங்கியதில்லை. "மனுசனாம்மா அவனெல்லாம்... அந்தப் புள்ளைய அந்த அடி அடிக்குறான்" என்று என்னிடம் நொந்துகொள்வார்.

இரத்தினத்துக்கு 'வினு' என்று ஒரு மனைவியும், 'சரண், அஜய்' என்று இரு மகன்களுமிருந்தனர். அனைவரும் மராட்டியர்கள். "ஏன் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லித்தரலையா நீங்க?" என்று நான் கேட்டபோதெல்லாம் புன்னகைப் பெருமூச்சையே பதிலாகத் தந்தார் இரத்தினம்.

அஸ்வினியின் கணவரின் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அத்துமீறின. அலுவலகத்திலிருந்து அவரைக் கட்டாய பணிநீக்கம் செய்திருந்தனர். அஸ்வினி பெரிதாக எதற்கும் வருத்தப்பட்டதாகத் தெரியவில்லை. அவள் தனது வங்கித் தேர்வுகளுக்கான பயிற்சியில் மும்முரமாக இருந்தாள். நான் அவளுக்கு உதவினேன்.

ஒருமுறை அஸ்வினியின் கணவன் நாக்பூரின் பிரபல பாலியல் தொழில் நடக்கும் விடுதியான 'கங்கா ஜமுனா' பகுதியில் போலீஸாரால் கைதுசெய்யப்பட்டதாகத் தகவல் வந்தது. அஸ்வினி பதறுவாள், அழுது துடிப்பாள் என்று எதிர்பார்த்தேன். அவள் இரத்தினத்திடம் பணம் கொடுத்து, போலீஸாரிடமிருந்து அவனை மீட்டு வருமாறு கூறிவிட்டு வீட்டில் அமைதியாக இருந்தாள். அன்றும் படித்தாள். எனக்கு நினைவிருக்கிறது.

நாடோடிச் சித்திரங்கள்

ஒருமுறை சிங்கவால் குரங்குகள் வீட்டுக்குள் புகுந்து பெரிதும் அட்டகாசம் செய்தன. நானும் என் மகனும் ஓர் அறையில் உட்பக்கமாகத் தாழிட்டுக்கொண்டு இருட்டில் அமர்ந்திருந்தோம். சில மணி நேர சூறையாடலுக்குப் பிறகு அவை சென்றுவிட்டன. அவை என் வீட்டைத் தலைகீழாக்கிச் சென்றிருந்தன. இரத்தினத்தை அழைத்து அனைத்தையும் சரிசெய்வதற்கு ஒரு வார காலமானது எனக்கு. அந்நாள்களில் இரத்தினத்தைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது.

"மீனாட்சி மாதிரி களையான முகம் உனக்கு. நெத்தியில குங்குமப் பொட்டு வெக்கலாம்ல..." என்றார் ஒருமுறை. அதுவரை நான் நெற்றியில் அடையாளங்கள் அணிந்ததில்லை. திருமணத்தின்போது மட்டும் கட்டாயத்தின் பேரில் அணிந்திருந்தேன். "பழக்கமில்ல" என்று ஒற்றை வார்த்தையில் பதிலளித்தேன்.

"இந்த அண்ணன் சொல்றேன்... கேக்க மாட்டியா?" என்றார். அன்றிலிருந்து நெற்றிப் பொட்டு வைத்துக்கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டேன். சமய சடங்காக ஒருபோதும் அணிந்ததில்லை.

அஸ்வினி விவாகரத்துக்கு விண்ணப்பித்துவிட்டதாகக் கூறினாள். நான் மீண்டும் திடுக்கிட்டேன். நட்பின் உரிமையில் "நீ எதையுமே நிதானித்து செய்ய மாட்டாயா?" என்று அவளைக் கடிந்துகொண்டேன்.

"நிதானமா... அதெல்லாம் வாழையடி வாழையாக வாழ்பவர்களது வழக்கம். எனக்கு இன்று மழையென்றால் நாளை வெயில், மறுநாள் புயல் பிறகு மீண்டும் வெயில். எனக்கு சிண்டிகேட் வங்கியில் பணி கிடைத்துவிட்டது. அனிகேத்துக்கு போதை மறுவாழ்வு மையத்தில் இடம் கேட்டு விண்ணப்பித்திருக்கிறேன்" என்று தெளிவாகப் பேசினாள் அஸ்வினி.

"பிறகு ஏன் அவனை விவாகரத்து செய்கிறாய்?" என்றேன்.

நாடோடிச் சித்திரங்கள்

"நான் வாழ வேண்டுமல்லவா... அதற்காக. அவனுடைய தந்தைக்குத் தகவல் தெரிவித்துவிட்டேன். மட்காவ் மாவட்டத்தில் முந்திரித் தோப்பு வைத்திருக்கிறார். அனிகேத்தின் குடிப் பழக்கம் அவனுடைய தந்தை வழி வந்தது. இவ்வளவு அவமானத்துக்குப் பிறகும் அவனும் அவனுடைய தந்தையும் என்னைப் பற்றி யோசிக்கவில்லை. ஒருவேளை அவனுடைய தாய் உயிரோடிருந்திருந்தால் நான் யோசித்திருப்பேன். இப்போது எனக்கு அந்த அவசியமுமில்லை. நான் வாழ விரும்புகிறேன்" என்று கூறினாள். மறுநாள் அவளை ரயிலேற்றிவிட நானும் இரத்தினம் அண்ணனும் சென்றோம்.

"தாராவி போகிறாயா, அம்மா வீட்டுக்கா?" என்றேன்.

"இல்லை... எனக்குப் பணி கிடைத்திருக்கும் இடத்துக்குப் போகிறேன். மஹாபலேஷ்வர் அருகில் ஒரு கிராமம். இனி அதுதான் எனது ஊர். அங்குதான் எனது வாழ்க்கைத் தொடரும். பணியில் சேர்ந்ததும் உனக்கு முகவரியுடன் கடிதம் எழுதுகிறேன்" என்று கூறிவிட்டு ரயிலேறினாள். மராட்டியப் பெண்கள் அணியும் 'நத்' என்கிற அழகிய மூக்குத்தியொன்றை எனக்குப் பரிசளித்தாள். ஓர் ஏதிலிக் குருவி தனது திசையை மீண்டும் மாற்றிக்கொண்டு பறந்தது.

எங்களது நட்பின் விளைவாக இரத்தினம் அண்ணன் நிறைய தமிழ் பேசினார். முன் போலல்லாமல் எப்போதாவது தனது சொந்த ஊரைப் பற்றி ஓரிரு விஷயங்கள் பகிர்வார். அவர் வேட்டியணிந்தோ, லுங்கி அணிந்தோ நான் பார்த்ததில்லை. ஒருமுறை பொங்கல் பண்டிகைக்கு அவருக்கு வேட்டி, சட்டை பரிசளித்தேன். ஆனால், அவர் அதை ஒருநாளும் அணியவில்லை. எப்பொழுதும்போல் அரைக்கால் சட்டையுடனேயே வலம் ந்தார். "எப்பதான் அந்த வேட்டியைக் கட்டுவீங்க அண்ணே" என்று கேட்டதற்கு,

"அம்பாசமுத்திரம் போகும்போது கட்டிக்கிறேன்" என்று கூறிவிட்டு உரக்கச் சிரிப்பார்.

வித்யா எனும் தமிழர் இடமாற்றலாகி அஸ்வினி வாழ்ந்த வீட்டில் குடியேறினார். அவரது குடும்பம் கல்வியிலும் கலைகளிலும் சிறந்தவர்களென்று அவரது வீட்டிலிருந்து மாலை நேரங்களில் கேட்ட கீர்த்தனைகள் சான்று பகர்ந்தன.


வழக்கம்போல் இரத்தினம் அண்ணனே வித்யாவின் வீட்டுக்கும் உதவிகள் செய்ய அழைக்கப்பட்டார். வீட்டுக்குள் அவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை என்பதை அண்ணன் பொருட்படுத்திக்கொள்ளவில்லை. நான் எப்போதாவது அவரைக் கடிந்துகொள்வேன். "நீங்க போகாம இருக்கலாம்ல... அதென்ன வாசலோட நிக்கவெச்சு தண்ணி குடுக்குறது?"


அவர் "அதுக்காக எல்லாரையும் வீட்டுக்குள்ள விட முடியுமா... அவங்க செய்யறது தப்பில்லை. ஒவ்வொரு மனுசனும் ஒவ்வொரு மாதிரி" என்று குண முதிர்ச்சியுடன் பேசினார். தன்னைச் சுற்றிலும் தமிழ்க் குடும்பங்கள் வாழ்வது அவருக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார். புதைந்தழிந்துபோன பிறந்த மண்ணின் நினைவுகளைக் கிளறி அவர் கூறிய கதைகள் இன்றும் எனக்கு நினைவிருக்கின்றன.

மனிதர்கள் | நாடோடிச் சித்திரங்கள்

இரத்தினம் அண்ணனின் மகிழ்ச்சி நெடுநாள் நிலைத்திருக்கவில்லை. வித்யா, அவர் மேல் புகார் கொடுத்திருந்தாள். வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் அவர் குடியிருப்புப் பகுதியில் நடமாடுவதாகவும், சன்னல் வழியாக பெண்களின் அறைகளுக்குள் எட்டிப் பார்ப்பதாகவும் அந்தப் புகார் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. வழக்கில் சாட்சி கூறுவதற்காக நானும் மற்ற சில பெண்களும் வரவழைக்கப்பட்டிருந்தோம். வித்யா, தனது ஆளுமையாலும் பேச்சுத்திறனாலும் மற்ற பெண்களின் ஆதரவைப் பெற்றிருந்தாள். நான் இரத்தினம் அண்ணனின் பக்கம் நின்றேன். "அவர் அப்படிச் செய்திருக்க மாட்டார் என்று எப்படி கூறுகிறீர்கள்?" என்று என்னிடம் வினவப்பட்டது.

"மனிதர்களின் குணத்துக்கு நான் எவ்விதத்திலும் உத்தரவாதம் அளிக்க முடியாதுதான் என்றாலும், காலம் உணர்த்தும் உண்மைகள் என்று சில இருக்கினறனவே... அப்படிப் பார்க்கும்போது இரத்தினம் எனும் மனிதருடன் பழகிய காலம் அவரைப் பற்றின புரிதலை எனக்குக் கொடுத்திருக்கிறது. வித்யா இங்கு வந்து ஒரு மாதம்கூட ஆகவில்லை. அவரது குற்றச்சாட்டு தவறானது" என்று என்னால் இயன்றவரை இரத்தினத்துக்காக வாதாடினேன். அவர் மிச்சமிருந்த வாழ்வின் மீதும் நம்பிக்கை இழந்துவிடுவாரோ என்கிற அச்சம் என்னை இன்னும் விடாப்பிடியாக முயற்சி செய்யத் தூண்டியது.

வழக்கு ஒரு முடிவுக்கு வந்தது. வெளியாட்கள், குறிப்பாக ஆண்கள் யாரும் அனுமதியின்றி குடியிருப்புப் பகுதிகளுக்குள் வரக் கூடாதென்கிற பொதுவான தீர்ப்பின் பின்னணியில் இரத்தினம் எனும் மனிதருக்கு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. வித்யா, பெண் சமூகத்தின் பாதுகாப்புக்காக போராடியதாக உணர்ந்தாள்ப்.

இரத்தினம் அண்ணன், தன் குடும்பத்துடன் வசித்த சாலுக்கு ஒரு மாலை வேளையில் சென்றேன். விடுமுறைக்கு தமிழகம் வந்து திரும்பிய நான் அவருக்காகத் தமிழகத் திண்பண்டங்களும், அவருடைய மகன்களுக்காக தமிழ் எழுத்துப் பயிற்சி புத்தகங்களும் வாங்கி வந்திருந்தேன். வினுதான் என்னை வரவேற்றாள். அவளது உடல்மொழியில் எந்தச் சலனமும் இல்லை. பிள்ளைகள் சுற்றி விளையாடிக்கொண்டிருந்தனர். வினுவுக்குத் தாய் வீட்டு பாதுகாப்பு இருந்தது. அவளுடைய அண்ணனும் அவளை நன்றாக கவனித்துக்கொள்வதாகக் கூறினாள். எனது பார்வையின் கேள்வியைப் புரிந்துகொள்ள முடியாத அவளிடம் இறுதியில் "இரத்தினம் அண்ணன் எங்கே?" என்றேன்.

நாடோடிச் சித்திரங்கள்


"அது எங்கியோ போயிருச்சு. ரொம்ப நாளாச்சு. திரும்பி வரலை இன்னும்..." என்று உணர்ச்சியற்ற பாவனையுடன் மராட்டியில் கூறினாள்.

"எங்க போனாரு, நீங்க தேடலையா, ஏதும் முகவரி சொன்னாரா" என்றேன்.

அவள் இல்லை என்று தலையசைத்தாள்.


"ரொம்ப வருசத்துக்கு முன்னாடி இங்க ஒருநாள் அப்படித்தான் வந்துச்சு. யாருமில்லாம எதுவுமில்லாம வந்துச்சு. நான் சேர்த்துக்கிட்டேன். இப்ப போயிருச்சு" என்றாள்.


"இவள் என்ன பெண்... அவரின் மனைவிபோலப் பேசுகிறாளில்லையே..." என்று திகைத்துப் போனேன்.


"இந்தப் பிள்ளைக அவருக்குப் பொறந்ததுதானே?" என்று வன்மத்துடன் கேட்டேன்.

"ஆமா, அதுக்கென்ன செய்ய... நல்லவேளை... ஆம்பளயாப் போய்ட்டதுக. பொட்டப் புள்ளையாயிருந்தா கட்டிக்கொடுக்கையில அப்பன் எவன்னு கேப்பாங்க... இப்ப அந்தத் தொல்லையுமில்லை" என்று கூறிவிட்டு முகம் திருப்பிக்கொண்டாள்.

யாரோ ஒருவரது வன்மம், யாரோ ஒருவர் சுமத்தும் பழி, யாரோ ஒருவர் நிகழ்த்தும் துரோகம் என மனிதன், மனிதன் மேல் நிகழ்த்திப் பார்க்கும் வன்முறைகள் காலங்காலமாகத் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. ஒருவனை முகம் குப்புற விழச்செய்து அவனைத் தூற்றி ஆனந்தமடைவது மனித இனத்தில் மட்டுமே காணக்கூடிய ஓர் இயல்பு. மிருக இனத்தில் பகை இருக்கும்; துரோகம் இருக்காது.


இரத்தினம் எனும் ஏதிலிப் பறவையும் தனது திசையை மீண்டுமொரு முறை மாற்றிக்கொண்டு பறந்துவிட்டது. ஒரு முக்கோணத்தின் இரு கோணங்களும் மறைந்து போன பிறகு எஞ்சியிருக்கும் ஒரு புள்ளியாக நான் மட்டும் இரு திசைகளையும் பார்த்து நின்றிருந்தேன். அங்கு, அப்போது நான் மீண்டுமொருமுறை ஏதிலியானேன்.

தொடுவான தூரம் வரை பயணங்கள் தொடரும்..!



source https://www.vikatan.com/lifestyle/travel/a-story-of-author-who-met-two-different-persons-in-maharashtra-nadodi-sithirangal-33

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக